வன்னி மண்ணின் வகிடெடுத்த
வரம்புகளும் வாய்க்கால்களும்
வளமுடன் வாழ்ந்து விட்ட நாட்களை,
நாட்காட்டியின் கிழிந்துபோன இதழ்களாக்கி,
பாளம், பாளமாய் பிளந்து கிடந்தன!
கூரை மீது கட்டிய விறகுகளுடன்
ஊர்வலம் வந்தன உல்லாசப் பேருந்துகள்!
காய்ந்துபோன கண்ணீர்ச் சுவடுகளோடும்
தேய்ந்து போன செருப்புக்களோடும்
ஊர்ந்து திரிந்தன உயிர்க் கூடுகள்!
கொதிகணைகள் எறிந்த பெரு நெருப்பில்
பாதி முறிந்து போன பனை மரங்களின்,
செத்துப் போன உச்சிகளின் மீது,
பச்சைக் கிளிகள் சோடி சேர்ந்திருந்தன!
அரச மரங்களின் அடிவாரங்களில்
பிரசவ காலத்துப் பெண்களின்
அடி வயிற்றின் வட்டங்களாய்க்
குடி வந்திருந்தன புத்த கோவில்கள்!
புத்த பிரானின் புனிதம் கலையாது
பத்திரமாகப் பாதுகாத்தன,காவலரண்கள்!
அனுராத புரத்தைத் தாண்டியதும்,
அடிமனத்தைப் பிசைகின்றன
அழிவின் ஆறிப்போன வடுக்கள்!
ஓமந்தைச் சாவடியில் இருந்து,
ஊர்காட்டிக் கற்களின் அம்புக்குறிகள்,
நாக தீபத்திற்குப் பாதை காட்டுகின்றன!
சர்வதேச விமான நிலையங்களின்,
நுழை வாயிலகளின் வனப்புடன்,
வீதியோரம் நிறைந்த விளம்பரங்களுடன்,
யாழ்ப்பாணம், உங்களை வரவேற்கின்றது!
உடைந்து போன கட்டிடங்களின் சுவர்களில்
வடக்கின் வசந்தம் விளம்பரம் செய்தது!
கருகிப் போன வடலிகளைக் காக்கக்
கருக்குமட்டை வேலிகள் தேவையிளந்தன
ஆரியகுளத்தின் தாமரைக் கொடிகள்
அனுராதபுரத்தின் 'புனித நகரமாய்;
ஆரிய குளத்தை மாற்றியிருந்தது!
தாவணிகள் இல்லாத சேலைகளுக்கிடையில்
தர்மத்தின் காவலர்களின் மழித்த தலைகள்!
கண்டி வீதியின், கச்சேரிச் சந்தியில்,
கெமுனுப் படையணியின் தலைமை இருந்தது!
பழைய பூங்காவின் அழகிய மரங்கள்,
பாதியாய்க் குறைந்து, புதியதாய் வளர்ந்தன!
வடக்கையும், தெற்கையும் இணைக்கும் பாலமாய்
வங்கிகள் தங்களை விளம்பரம் செய்தன!
செல்வந்தர்கள் வாழ்ந்த பெரிய வீடுகள்,
உல்லாச விடுதிகளாய் உரு மாறியிருந்தன!
நல்லூர்க் கந்தனின் கோவில் பெரிதாக,
ஒல்லாந்தர் கோட்டையும் உயிர் பெறுகின்றது!
பெரிய கடையின், மீன் சந்தைகளில்,
'சூரை' மீன்கள் நிறையக் கிடைத்தன!
பாகிஸ்தான் நாட்டின் பெயரிட்ட பெட்டிகளில்,
பாரைக் கருவாடும் நிறையக் கிடைத்த்தது!
'வின்சர்' தியேட்டர் வெளியாகக் கிடக்க,
வண்ணான் குளத்தின் மேல் வாகனங்கள் நின்றன!
தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவுச் சின்னம்.
தலை நிமிர்ந்து நிற்கின்றது, மீண்டுமொரு முறை!
வீரசிங்கம் கட்டிடத்தின் வெடித்த சுவர்கள்,
வெள்ளையடித்துப் புதிதாய் இருந்தன!
புங்கையூரின் புகழ்மிகு நுழைவாசலில்,
புத்தனின் சிலையொன்று, நல்வரவு கூறுகின்றது!
பொலித்தீன் பைகளில், புதுமை குறையாத,
பூவரசம் பூக்கள் விற்பனையாகின்றன!
ஊர் கூடித் தேரோட்டிய கோவில்கள்,
அர்ச்சகரின் வரவுக்காய்க் காவலிருக்கின்றன!
புத்தபிரானின் கால் பதித்த, புனித விகாரை,
புதிய பாலத்துடன் பொலிந்து நின்றது!
தவழ்ந்து, தவழ்ந்து நடந்த வரிசையில்,
தத்தித் தத்தி, முன்னேறிச் செல்கையில்,
தெமிளுக் கட்டியக் எனவா, நேத?
தெளிவோடு கூறியது, புதியதொரு குரல்!