Sunday, 20 November 2011

நினைவுகளில் விளக்கேற்றுவோம்















நந்திக் கடலும், கிளாலி நீரேரியும்,
வற்றிப் போகாமல்,
வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர்,
வடிந்தோடி நிறைத்திருக்க,
வடக்கிலும், கிழக்கிலும்.
வசந்தம் தேடியவர்களின்,
வாடிப் போன முகங்களில்,
கோடுகள் மட்டும் விழுகின்றன!
அரேபியாவின் பாலைவனங்களை,
அழகு படுத்தும் 'பிரமிட்டுக்களாக';
அரைக் காசுக்கும்  பயனில்லாத,
அபிவிருத்தித் திட்டங்கள்
ஆயிரமாய் அரங்கேறுகின்றன!

அந்தக் காலத்து வாழ்வில்,
ஆடம்பரங்கள் இல்லை!
அரை வயிற்றுக் கஞ்சியும்,
ஆனையிறவின் அசைவில்!
ஆனாலும் வாழ்வில்,
அர்த்தம் இருந்தது!
வளவைச் சுற்றி வர,
வேலிகள் இருந்தன!
விடி வெள்ளி கூட.
அருகில் நெருங்கியது!
யாருக்குத் தெரியும்?
விட்டில் பூச்சிகளுக்கு,
விளக்கு வைக்கப் பட்டிருகிறதென்று!

வினாக்கள் தொடர்கின்றன!
விடைகள் மட்டும்,
கண்ணாமூச்சி ஆடுகின்றன!
தாயைக் கட்டிப் பிடித்த,
சேயின் குரல்வளைகள் நெரித்துத்,
தாய் கூடப் பேயாகினாள்!
வென்றாலும், தோற்றாலும்
வீர மறவர்கள் நீங்கள்!
விடை பெற்றுப் போய்விட்ட,
வீராங்கனைகள் நீங்கள்!
விதையாகி விட்ட உங்களை,
வியாபாரப் பொருளாக்கி,
விற்பனைச் சந்தையில்,
விலை பேசுகின்றார்கள்!

வீழ்ந்து விட்ட வீரர்களே!
வேதனையின் விம்மலுடன்,
விழி கனக்க நினைக்கிறோம்!
இழப்பின் பரிமாணம்.
ஏளனத்துடன் சிரிக்கின்றது!
நீங்கள் பாய்ந்த போது,
நாங்களும் பாய்ந்தோம்!
களம் வென்று வந்த போது,
புளங்காகிதம் கொண்டு,
வாழை மரங்கள் நட்டு,
விடுதலைக் கீதமிசைத்தோம்!
வானத்தில் பறந்த போது,
நாங்கள் கூடப் பறந்தோம்!

ஆனாலும்,
நீங்கள் வீழ்ந்த போதில்.
நாங்கள் வீழ்ந்து விடவில்லை!
நாய்களைப் போல்,
நமக்குள்ளே  போட்டிகள்!
கருவூலங்களின் திறப்புகளும்,
கை மாறி விட்டன!
அக்கினியில் குளித்தும்,
அழிந்து போகாத, சீதையின்
தூய்மை உங்களுக்கு!
உங்கள் கனவுகள்,.
நனவாகும், காலம் வரை,
நினைவுகள்  சுமந்து.
நெஞ்சினில் விளக்கேற்றுவோம்!










5 comments:

  1. இலகு தமிழில் அழகாய் எழுதிய உணர்வு வரிக் கவிதை பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள். நிலாமதி அக்கா!!!

    ReplyDelete
  3. எமது நிலைகூற இதைவிட வார்த்தைகளேது.

    ReplyDelete
  4. பிந்திய வருகையானாலும் என்றும் அழியாதவருக்காக இது உரித்தாகட்டும்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

    ReplyDelete
  5. நான் ஒருவிதமென்றால் நீங்கள் ஒருவிதம் வாழ்துக்கள் புங்கையூரான்

    ReplyDelete