Wednesday, 16 November 2011

புலம் பெயர் வாழ்வு


























காய்ந்து போய் விட்ட,
காலப் பூக்களின் இதழ்களாய்.
சருகாகிப் பறக்கும்,,
சரித்திரங்களின் சாட்சிகள்!
கடாரம் வரைக்கும்,
கப்பற்படை நடத்திக்,
கோவில் குடமுழுக்கு நடத்தியவனின்,
குலக் கொழுந்துகள்!
அலை புரளும் கடல்களையும்,
ஆகாய வீதிகளையும் நிதமும்,
அளந்த படி அலையும்,
ஆதரவில்லாத அகதிகள்!
இரவுப் புறாக்கள் மட்டும்,
குறு குறுக்கும் பேரிருளில்
பனி படிந்த கண்ணாடி ஜன்னல்களில்
பார்வை நிலை குத்தப்,
பேய்கள் உறங்கையிலும்
காவல் வேலைக்காய்
விழித்திருக்கும் விழிகள்!
மரக்கறிக் கடைகளின்,
மூட்டை தூக்கிகள் ஓய்வெடுக்க,
முதுகெலும்பை மலிவாக்கி,
மூட்டையடிக்கும் தோள்கள்!
மீசை மயிர் கருக்கும்,.
மின்னடுப்புக்களின் வெக்கையில்
பாண்களைப் பதம் பார்க்கும்,
பழகிப் போய் விட்ட விரல்கள்!
அடி வயிற்றில்,
வண்ணத்துப் பூச்சிகள் பறக்க,
அடுக்கு மாடிக் கட்டிடங்களின்.
அழகிய கண்ணாடிகளைக்
கழுவும் கயிறுகளில் தொங்கும்,
காப்புறுதியில்லாத உயிர்கள்!
கரப்பொத்தானின் மரபணுக்கள்,
கலந்து விட்ட பிறப்பாக,
காலநிலை மாற்றங்களோடு,.
கூர்ப்படையும் உடல்கள்!
எங்களின் வருகையின் பின்,
புயல் காற்றில் அழிந்த,
பூசனிக் கொடிகளின் காய்கள்
சந்தைக்கு வருகின்றன!
கைவிடப் பட்ட பழமரங்கள்,
கண் திறந்து பார்த்த பின்,
மீண்டும் காய்க்கின்றன!
பொருளாதாரத்தின் விதிகள்
புதிதாக எழுதப் படுகின்றன!
கைகளினால் கார் கழுவும்,
கடைகள் கூட உதயமாகின்றன!
அம்மாக்களும், அப்பாக்களும்,
அயல் நாடு பார்க்கையில்,
அவர்கள் கட்டியதாய், நினைத்த,
ஆகாயக் கோட்டைகளின்,
அத்திவாரங்கள் ஆடுகின்றன!
அம்மியில் கால் மிதித்து,
அருந்ததிக்குக் கை காட்டி,
ஊரறிய நடந்த திருமணங்கள்,
உடைந்து நொறுங்குகின்றன!
விடிகாலையின் விரகதாபங்கள்,
விடை பெற்று விடுகின்றன!
ஊருக்காக வாழ்க்கையாய்,
உள்ளே எரிகின்றன, மனங்கள்!
அறுந்து தொங்குகின்றது,
ஆயிரம் ஆண்டு காலத்துச்,
சமுதாயச் சங்கிலி!
அரைநொடியில் அந்தஸ்துகள்,
மாறி விடும் காலத்தில்,
பணத்தை நோக்கிய பயணம்,
பந்தயமாக மாறுகின்றது!
இனத்தின் விடுதலை கூடப்,
பணத்திற்கு விலை போகின்றது!

2 comments:

  1. இருவருக்கும் சிறு வேறுபாடே . நான் தாயகத்தின் வலியைச் சொன்னால் , நீங்கள் புலத்தின் வலியைச் சொல்கின்றீர்கள் . தொடருங்கள் புங்கையூரான் .

    ReplyDelete
  2. இரண்டுக்குமே வேறுபாடுகளில்லை!வலி மட்டும் இரண்டுக்கும் பொதுவாக உள்ளது!நன்றிகள், கோமகன்!

    ReplyDelete