Wednesday 25 July 2012

தம்பையா வாத்தியார்



அண்டைக்கு, லீவு முடிஞ்சு, பள்ளிக்கூடம் தொடங்கிற நாள்!
விடியக் காலமை எட்டு மணிக்கே, தம்பையர் பள்ளிக் கூட வாசல்ல பிரம்போட நின்று கொண்டிருந்தார்! அவற்றை வீடும், பள்ளிக்கூடத்திற்குப் பின்னால தான் இருந்தது!

நாங்கெல்லாம், லீவில போனப் பிறகு, அந்த ஊரிலுள்ள ஆட்டிக்குட்டியளெல்லாம், படிக்க வெளிக்கிட்டுதுகள் போல. பள்ளிக்கூடம், முழுவதும், ஒரே ஆட்டுப் புழுக்கையும், மூத்திர மணமுமாக் கிடந்தது. வயது போன ஆக்களும் வந்து படிச்சிருக்கினம் போல கிடக்கு! கரும்பலகையில இருந்த படங்கள் சிலது, கோரியாவடி வெளிச்ச வீட்டில கீறிக்கிடந்த படங்கள் மாதிரிக் கிடந்தது! வாத்தியாரும், அந்த நாளையில நல்லாப் படிச்சவரா இருந்திருக்க வேண்டும்! அவற்றை வீட்டுச் சுவரெல்லாம், கொழும்பு விவேகானந்த சபையில குடுத்த சேர்ட்டிபிக்கேற்றுக்களால நிரம்பிக் கிடந்தது!
எனக்கும், தம்பிக்கும் அண்டைக்குப் பெரும் புழுகம். தீபாவளிக்கு, அப்பா வாங்கித் தந்த, போலீஸ்காரன் காச்சட்டையும், சேட்டும் போட்டுக் கொண்டு போன படியால்  எல்லாரும், எங்களை ஒரு மாதிரிப் பொறாமையோட பாத்த மாதிரிக் கிடந்தது.  

வாத்தியாரைப் பற்றிக் கனக்கக் கதையள், ஊரில கதைப்பினம்!
ஒருநாள், வாத்தியார், வாயை திறந்து வைச்சுக் கொண்டு இருந்தார். அப்ப அவற்றை நாக்குக் கொஞ்சமா ஆடிக்கொண்டேயிருந்துது.
ஏன் வாத்தியார், உங்கட நாக்கு ஆடிக் கொண்டேயிருக்குது எண்டு கேட்க, வாத்தியார் சொன்னார்.

தம்பி, படிச்ச ஆக்களின்ர  நாக்கில சரஸ்வதி நடனமாடுவாவாம்! அது தான், அவ ஆடெக்க, தன்ர நாக்கும் நடுங்குது எண்டு சொன்னார்!
அதுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், கண்ணாடிக்கு முன்னால நிண்டு, நாக்கைப் பாக்கிறது தான், எனக்கும் வேலை! சரஸ்வதி, என்ர நாக்குக்கு கடைசி வரையும் வரவேயில்லை!

சின்ன வயசிலேயே வாத்தியாருக்கு, விஞ்ஞான மூளை வந்திட்டுதாம்.
வாத்தியார் வீட்டில, தீபாவளிக்கு, 'மான் மார்க்' வட்டப் பெட்டி, சீன வெடி வாங் கினவையாம்! யாழ்ப்பாணத்திலை இருந்து வரேக்க, காருக்கு மேல வைச்சு வெடியைக் கட்டிப் போட்டாங்களாம். வாற வழியில மழை தூறியிருக்குப் போல கிடக்கு! வெடிப் பக்கற், நனைஞ்சு போச்சுது போல கிடக்கு! அடுத்த நாள் காலமை, வெடியை எடுத்துக் கொழுத்தத் திரி மட்டும் எரிஞ்சுது! நல்ல நாளும், பெரிய நாளுமா, வாத்தியாருக்கு அழுகையே வந்திட்டுது! தீபாவளிக்குக் கடையளெல்லாம் பூட்டிப் போட்டாங்கள்! அப்பத் தான் வாத்தியாருக்கு, அந்த ஐடியா வந்திருக்க வேணும். கச்சான் வறுக்கிற பெரிய தாச்சியை அடுப்பில வைச்சு, கீழ நெருப்பெரிச்சு, அந்த வெடியெல்லாத்தையும், தாச்சிக்குள்ள போட்டு வறுக்க, அவ்வளவு வெடியும் பெரிய சத்தத்தோட வெடிக்க, அந்தப் பக்கத்திலேயே வாத்தியார் வீட்டுத் தீபாவளி தானாம் நல்லாயிருந்ததாம்!
 
இதே போல, வாத்தியாருக்குப் படிப்பிச்ச வாத்தியார், 'பாவ்லோ தியறி' எண்டு ஒண்டைச் சொல்லிக் கொடுத்தவராம்! நாய்க்குச் சாப்பாடு வைக்கேக்கை, இந்த 'பாவ்லோ' எண்ட விஞ்ஞானி, மணி அடிப்பாராம். கொஞ்ச நாள் போக, ஒவ்வொரு நாளும் மணியடிக்கிற நேரத்தில,சாப்பாடு இல்லாமலே  நாயின்ர வாயில, உமிழ் நீர்  வடியத் துவங்கீற்றுதாம்!  வாத்தியாரும் இதை வேற விதமாய்ச் செய்து காட்டினாராம். கொண்டாட்டங்களில வெடிக்கிற 'சர வெடிப்பக்கற்' ஒண்டை வாங்கி, வெடியளைக் கொஞ்சம், கொஞ்சம் இடைவெளி விட்டுக் கட்டினாராம்! பிறகு, வெடிப்பக்கற்றோட, தன்ர நாயையும் கூட்டிகொண்டு, கடற்கரைப் பக்கம் போனாராம். பரிசோதனை, வெற்றி என்பதை, உறுதிப் படுத்த, ஊரில பெரிய ஆக்கள், நாலைஞ்சு பேரையும் கூட்டிக்கொண்டு போனாராம். பிறகு, ஒருத்தரும் எதிர்பாராத மாதிரி, நாயின்ர  வாலில, வெடிக் கோர்வையைக்  கட்டிக் கொழுத்தி விட்டாராம்! முதல் வெடி வெடிக்க, நாய் ஓடத் துவங்கிப் பிறகு, மெல்லமா நடக்கத் துவங்க அடுத்த வெடி வெடிக்க, நாய் மீண்டும் ஓடத்துவங்கிப் பிறகு மெதுவாக.....

எல்லா வெடியும் முடிஞ்சப் பிறகும், கொஞ்ச நாளைக்கு, நாய் ஓட்டமும், நடையுமாய், அதே 'டைமிங்கை' மாத்தாம இருந்ததாம்!

ஒரு நாள், வாத்தியார், தான் சொல்லுற இடத்தில போய்ப் பால் வாங்கிக் கொண்டு வந்து, தங்கட வீட்டில கொடுத்து விடச் சொன்னார்! நானும், பாலை வாங்கிக் கொண்டு போகேக்க அந்தப் போத்திலுக்கிள்ளை, பால் நுரைச்ச படி இருந்துது. அதுக்கிள்ள கன பூச்சியளும் செத்துப் போய் மிதந்து கொண்டு இருந்திச்சு! நானும் பாலைக் கொண்டு போய், வாத்தியாரின்ர அவவிட்டைக் குடுத்துப் போட்டு வீட்டை போய்ற்ரன்!

அப்பாட்ட ஒரு நாள், அப்பா! வாத்தியார் வீட்டுக்கு வாங்கிக் குடுத்த பால், கொஞ்சம் பழுதாய்ப் போச்சுது போல கிடக்கு எண்டு சொல்ல, அப்பாவுக்குப் பொல்லாத கோவம் வந்திட்டுது!

அவர் இனிமேல் அந்தப் பள்ளிக்குடப் பக்கம், தலை வைச்சுப் படுக்கக் கூடாது, எண்டு சொல்லி, என்னையும், தம்பியையும், வேற பள்ளிக் குடத்துக்கு மாத்திப் போட்டார்! எனக்கெண்டா இண்டைக்கு வரைக்கும், ஏனெண்டு விளங்கேல்ல!

நீங்களாராவது, ஏன் எண்டு சொல்லுவீங்களா?
;         

Saturday 21 July 2012

முடிவில்லாத பயணங்கள்


அதிகாலைப் பொழுதின்,
இருள் பிரியாத நேரத்தில்,
ஆயிரம் பயணங்களில்,
அதுவும் ஒரு பயணமாகியது!
அப்பாவின் பனித்த கண்களும்,
அம்மாவின் அன்புத் தழுவலும்,
அந்தத் தேங்காய் உடைத்தலில்,
அமிழ்ந்து போனது!

கலட்டிப் பிள்ளையாரின்,
கடவாயின் தந்தங்கள்,
கொஞ்சமாய் அசைந்த பிரமையில்,
சஞ்சலப் பட்டது மனம்!
விரியும் கனவுகளில்,
வருங்காலக் கேள்விக்குறி,
விரிந்து வளைந்து,
பெருங் கோடாகியது!

தூரத்தில் தெரிந்த நீரலைகள்,
கானல் நீரின் கோடுகளாய்,
ஈரம் காய்ந்து போயின!
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும்,
காற்றாடியாகியது பயணம்!

புலம்பெயரும் புள்ளினங்களே!,
போன பயணம் முடித்ததும்,
போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு!
போகுமிடமெல்லாம் கூடு கட்டும்,
பயணமாகியது, எனது பயணம்!

உற்றார்கள், பெற்றார்கள்,
உடன் பிறந்த சொந்தங்கள்,
சுற்றித் திரிந்த குறுந் தெருக்கள்,
சுகம் தந்த காற்றின் வருடல்கள்,
விடிகாலை வேளையின் சிலிர்ப்புகள்!
வானத்தில் பறக்கும் பறவையின்,
விழிகளில் தெரியும் வடிவங்களாக,
விரைந்து தொடர்கிறது ,பயணம்!

தொடுகையில் கிடைக்கும் சுகங்களும்,
நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும்,
படங்களில் மட்டுமே கிடைக்கும்,
பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது!

இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய்,
இரவும் பகலுமில்லாத, பெருவெளியில்,
திசை மாறிய பறவையாகித்,
தொடர்ந்து செல்கின்றது, பயணம்!
முடிவில்லாத பயணமாகி,
முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது!













காலத்தில் கரையாத கறை படிந்த நாள்
















காலன் கூடக் கண்ணீர் விட்ட நாள்!
கனவுகள் தொலைந்து போன நாள்!
கரம் தூக்கிய மனிதக் கூடுகளைக்,,.
காந்தீயம்,கழுவிலேற்றிய கரி நாள்!

நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம்,
நடு முதுகில் கத்தி ஏற்றிய நாள்!
நம்பிக்கை ஊட்டியவர்கள் எல்லாம்,
நரிகளாக மாறிவிட்ட நாள்!

உலகத் தமிழர்களின் இதயங்கள்,
ஊமைக் கண்ணீர் வடித்த நாள்!
உலகத் தலைவர்களின் காலடிகளில்,
ஈழத் தமிழன் விழுந்து கெஞ்சிய நாள்!

கையிழந்தும், காலிழந்தும்,
கட்டியணைத்த துணையிழந்தும்,
கருக் குழந்தைகளின் தொப்புள்கொடிகள்,
துண்டிக்கப் பட்டதொரு கரிநாள்!

கரம் கூப்பி நான் தொழுத தெய்வங்களும்,
காவடியேந்தி நேர்த்தி வைத்த தேவதைகளும்,
கோபுரக் கலசங்கள் மட்டும் ஒளிவீசக்,
கோவில்களை விட்டுக் குடிபெயர்ந்த நாள்!

வால்மீகி வடித்தெடுத்த இராமாயணமும்,
வரலாற்றில் நான் படித்த பாரதமும்,
வாழ்க்கை வழியுரைத்த வேதங்களும்,
வேதனையோடு என்னிடம் விடை பெற்ற நாள்!

ஆச்சியும் தேசிக்காயும்



அன்றைக்குச் சனிக்கிழமை!

ஆச்சிக்குக் கொஞ்சநாளா மனம் சரியில்லாமல் இருந்தது!
மாமா, ஆச்சிக்கு ஒரே மகன். அவரும் கொழும்பில இருந்து வந்திருந்தார். அவர் வரப் போறது, என்டாலே ஆச்சிக்கு, ஒரு பத்து வயது குறைஞ்சு போயிரும்! இவ்வளவுக்கும் மாமா, ஒரு ஆம்பிளை என்டதைத் தவிர வேற ஒன்டுமே பெரிசா, வெட்டி விழுத்தினதா, எனக்கு நினைவில் இல்லை,

மாமாவும், ஆச்சி வெங்காயக் கூடையும், பாயும் இழைச்சுச் சேர்த்த காசுக்கு ஒரு வழி பண்ணும் வரையும் கொழும்புக்குத் திரும்பிப் போக மாட்டார்!
மாமா செய்த பெரிய காரியங்கள் பற்றி ஆச்சிக்கு எப்போதும் பெருமை!
அதில் ஒன்றை, மட்டும் சொல்லிக் கதையைத் தொடர்கிறேன்!

அந்தக் காலத்தில, எங்கள் ஊரில் ஆம்பிளைப் பிள்ளை, பிறந்தால், உலக்கை எறிவது வழக்கமாம்! நான் பிறந்த செய்தி கேட்டதும், மாமா ஒரு உலக்கையை எறிந்தாராம். அதுவும் இரண்டு, மூண்டு வளவு தாண்டிப் போய் தூரத்தில் விழுந்ததாம். ஆச்சி, வளவுகள் கொஞ்சம் சின்னனா இருந்திருக்கும் போல என்று நான் சொல்ல, ஆச்சிக்குப் பெரிய கோபம் வந்தது எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது!
ஆச்சிக்குக் கொஞ்சம் சந்தோசம் வரட்டும் என நினைத்து, எனது ஒன்று விட்ட அக்காவுக்கு, முதல் ஆம்பிளைப் பிள்ளை பிறந்த போது, நானும் ஒரு உலக்கையை எடுத்து, 'ஜவலின்' எறியிற மாதிரி எறிய, அது அடுத்த வீட்டுக் கிணத்தில குளிச்சுக் கொண்டிருந்த, அக்காவின்ர தலைக்குக் கிட்ட போய், கிணத்தடியில விழுந்திட்டுது! பிறகு அந்த மாமா, என்னை அடிக்கத் திரிய, ஆச்சியிடம் அடைக்கலம் கேட்க வேண்டி வந்திட்டுது! அதுக்குப் பிறகு, ஆச்சி இந்த உலக்கைக் கதையைக் கதைக்கிறது குறைவு!

மாமா கடற்கரையிலிருந்து வாங்கின 'ஓரா' மீன்களை, பனை ஈக்கில் கோர்த்தபடி, ஆச்சியிட்டைக் குடுத்து, இதை இண்டைக்குக் காச்சித் தாணை, எண்டதும் ஆச்சி மீனைக் கழுவத் தொடங்கினா! வழக்கமாக, அந்த முருக்க மரத்துக்குக் கீழதான், அந்த மீன் வெட்டுற கத்தி, ஒரு பலகையில், செங்குத்தாகப் பூட்டப்பட்ட படி இருக்கும்! மீனைச் சுத்தப் படுத்தியபின், அந்தத் தண்ணியை, ஆச்சி அந்த முருக்க மரத்தடியில் எத்துவது வழக்கம்! அண்டைக்கும் வழக்கம் போல, தண்ணியை வீசியபோது, அந்தக் கறுத்தப் பூனையும், வழக்கம் போல அந்த இடத்துக்கு வந்து, தனது தினசரிக் குளிப்பை முடித்துக் கொண்டது! அப்போது தான், ஆச்சியின் கண்ணில், அந்தத் தேசிக்காய், கண்ணில் பட்டிருக்க வேண்டும்!

அண்டைக்குப் பின்னேரம், ஆச்சியும் மாமாவும், அடிக்கடி குசு குசுத்துக் கொண்டார்கள்! நானும், மாமா, ஆச்சியிடம் பணம் பறிக்கிறதுக்கு, என்னவோ கதையளக்கிறார் என, அதனைப் பெரிது படுத்தவில்லை! எனது கவனம் முழுவதும், ஆச்சி அண்டைக்கு வைக்கப் போகும் மீன் குழம்பிலேயே இருந்தது! மத்தியானம், ஆச்சி வைச்ச மீன் குழம்போடையும், பருப்போடையும், சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போய் விட்டேன்! நல்ல நித்திரை போல கிடக்கு! முழிக்கும் போது, பின்னேரமா, அல்லது விடியக் காலமையா என்று தெரியாமல் இருந்தது! ஆச்சி, அரிக்கன் லாம்புச் சிமினியைத் துடைக்கிறதைப் பார்த்துப், பின்னேரம் தான் என உறுதிப் படுத்திக் கொண்டேன்!

கொஞ்ச நேரத்தில, வீட்டுக்குக் கொஞ்சம் வயசு போன ஆக்கள் வரத் துவங்கிச்சினம்! அதில் ஒருவரை, எனக்கு, நன்றாகத் தெரியும்! அவரும், அவரோட வந்த ரெண்டு பேரும், வீடு வளவெல்லாம், சுத்திச் சுத்தி என்னவோ தேடின மாதிரிக் கிடந்தது. பிறகு, ஆச்சி கொடுத்த சுளகில, அமெரிக்கன் மாவால, இரண்டு பொம்மை மாதிரி உருவங்கள் செய்து, அதுகளுக்குக் கண்ணும், மூக்கும் கீறி, ஒரு மீசையும் கீறிச்சினம்! எனக்கு மெல்ல,மெல்ல என்னவோ விளங்கின மாதிரி இருக்க, ஆச்சியைக் கூப்பிட்டேன்! ஆச்சியும், சின்னப் பிள்ளையள் எல்லாம், இதுக்குள்ள வரக் கூடாது, என்று கண்டிப்பாகச் சொல்லிப் போட்டா! சரி, என்ன நடக்கிறது என்று பாப்பம் என நினைத்துக் கொண்டு நானும் ஒரு மூலைக்குள்ள ஒதுங்கிக் கொண்டேன்! அப்போது மாமாவும், ஒரு பெரிய நீத்துப் பூசணிக்காயோட வந்து சேர்ந்தார்!

ஒரு பெரியவர், மிகவும் கணீரென்ற குரலில், ' மூன்றாம் பருவமடி! காளி! காளி! என்று ஏதோ பாடத் தொடங்கினார்! இவர் தான், ஊரில ஆருக்கும், பாம்பு அல்லது புலிமுகச் சிலந்தி கடித்தால், 'பார்வை' பார்க்கிறவர்! எல்லோரும் பயத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் உரத்த குரலில், ஏதோ பாடிக் கொண்டேயிருந்தார்! அவரது வாயிலிருந்து, பாட்டுடன் சாராய நெடியும் வந்து கொண்டிருந்தது!பிறகு, கொஞ்சம் வேப்பமிலையை, எடுத்துக் கொண்டு வளவுக்குள் ஓடினார்! அவருக்குப் பின்னால, அவற்றை இரண்டு உதவியாளர்களும் ஓட, மாமாவும், அரிக்கன் லாம்பையும் தூக்கிக் கொண்டு அவர்களுக்குப் பின்னால் ஓட, நானும் ஓடினேன்! பின்னர் ஒரு இடத்தைக் காட்டி, இஞ்சை, இஞ்சை என்று கத்தினார்! அவரோட வந்த ஆக்களும், அலவாங்காலும், மண் வெட்டியாலும் அங்கே கிண்டினார்கள்! உடனே பெரியவர், இஞ்சயில்லை இன்சையில்லை எண்டு சொல்லி இன்னொரு இடத்தைக் காட்டினார்! பிறகு அதுகும் இல்லையென்று, மூன்றாவது இடத்திற்கு ஓடினார்! காளிப் பாட்டு மட்டும், அவரது வாயிலிருந்து தடையில்லாமல் வந்து கொண்டே இருந்தது. அத்துடன் கொஞ்சம் நுரையும், வந்து கொண்டிருந்தது! அவருடன் வந்தவர்கள், அங்கு முதலில் மண் வெட்டியாலும், பின்னர் இன்னொருவர் ஒரு வாளியால் தண்ணீரூற்ற, பின்னர் அலவாங்காலும் கிண்டினர்! கடைசியாகப் பெரியவர், இது தான், இது தான் என்று கூச்சலிட, உதவியாளர்கள், ஒரு செப்புத் தகடு ஒன்றை, அந்தக் கிடங்கிலிருந்து வெளியே எடுத்தனர்! ஆச்சியின் முகத்திலும், மாமாவின் முகத்திலும் ஒரு சிரிப்பு, ஒரே நேரத்தில் வெளிப்பட்டது! அந்தச் செப்புத்தகட்டில், சூரியன், சந்திரன், மற்றும் எனக்குத் தெரிந்திராத பல கிரகங்களின், படங்களும் கீறப் பட்டிருந்தது!

பின்பு பெரியவர் அமைதியானார்! அந்த நீத்துப் பூசணிக்காயை, இரண்டாகப் பிழந்து அதற்குக் குங்குமப் பொட்டும் வைத்தார்! பின்னர், சுளகில் இருந்த இரண்டு மாவால் செய்யப்பட்ட உருவங்களுக்கும், கறுப்புப் புள்ளிகள் போட்டு, அதைக் கொண்டு போய்க் கடலில் போடும்படி மாமாவிடம் கொடுத்தார். மாமாவும், பய பக்தியாக, அந்தச் சுளகுடன், நீத்துப் பூசணிக் காயையும், வாங்கிக் கொள்ள, சில ரூபாய் நோட்டுக்களும் கை மாறின!

மறு நாள், ஆச்சி மிகவும் சந்தோசமாய் இருந்தா! அதைப் பார்க்க எனக்கும் சந்தோசமாக இருந்தது! ஆச்சியும் அந்தத் தேசிக்காயால தான் இவ்வளவு பிரச்சனையும் எண்டு சொல்ல, எனக்குத் திக்கெண்டு இருந்தது! ஏனெண்டால் மூண்டு நாளைக்கு முதல், நானும் பேரின்பனும், கோயிலடியில விளையாடேக்க, கோயில் குப்பையில் அது கிடக்க, இருவரும் அதை எறிந்து, பந்து விளையாடிய போது, முருக்க மரத்தடியில் விட்டு விட்டோம்! அதில ஒரு சின்ன ஓட்டையும், இருந்த படியால், வைரவ சூலத்தில், குத்தி வைத்திருந்ததாக இருக்கலாம்!

அப்படியானால், அந்தச் செப்புத் தகடு? மில்லியன் டொலர் கேள்வி!

இன்று வரை எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை! நானும் தேசிக்காய் பற்றி, இன்று வரையும் வாய் திறக்கவில்லை!

Sunday 8 July 2012

விலையேறும் நம்பிக்கைகள்!














கருமங்கள் கை கூடாமல்.
சறுக்குகிற நேரமெல்லாம்.
சனியன் நினைவுக்கு வருகிறான்!

ஆச்சியும், அப்புவும்,
அன்போடு சேர்த்து,
ஊட்டி வளர்த்த நம்பிக்கைகள்!

சனிபகவானுக்குச் சால்வையோடு,
சந்தனமும் பூசியுள்ளார்கள்!
பிரபலங்கள் எல்லாம்,
வரிசையில் நிற்கின்றன!
எல்லோரும் படித்தவர்கள்!
எனக்கும் பெருமையாக இருக்கிறது!

முதல் முறையாக,
அப்புவிலும் ஆச்சியிலும்,
அளவில்லாத மரியாதை,
அணையுடைத்துப் பாய்கிறது!

எண்ணைச் சட்டிகளும்,
பெரிதாகி இருந்தன!
புலத்தில் பெரிய பிரச்சனைகள்,
பெரிய சட்டிகளும் தேவை தான்!

வரிசை முடிவில்,
பெரியவர் சிரித்தார்!
ஓய்வு பெற்றவராம்!
முகத்தில் அமைதியின்,
முத்திரை தெரிந்தது!
சனியன் விலகியதால்,
சாந்தமாகியது போலும்!

சனியனுக்கு ஒருக்காச்,
சாந்தி செய்ய வேணும்!

விலையைச் சொன்னார்!
தலை கிறு கிறுத்தது!

சனியனைப் பார்த்தேன்!
அவனும் சிரித்தான்!
ஏளனச் சிரிப்பு!