காலன் கூடக் கண்ணீர் விட்ட நாள்!
கனவுகள் தொலைந்து போன நாள்!
கரம் தூக்கிய மனிதக் கூடுகளைக்,,.
காந்தீயம்,கழுவிலேற்றிய கரி நாள்!
நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம்,
நடு முதுகில் கத்தி ஏற்றிய நாள்!
நம்பிக்கை ஊட்டியவர்கள் எல்லாம்,
நரிகளாக மாறிவிட்ட நாள்!
உலகத் தமிழர்களின் இதயங்கள்,
ஊமைக் கண்ணீர் வடித்த நாள்!
உலகத் தலைவர்களின் காலடிகளில்,
ஈழத் தமிழன் விழுந்து கெஞ்சிய நாள்!
கையிழந்தும், காலிழந்தும்,
கட்டியணைத்த துணையிழந்தும்,
கருக் குழந்தைகளின் தொப்புள்கொடிகள்,
துண்டிக்கப் பட்டதொரு கரிநாள்!
கரம் கூப்பி நான் தொழுத தெய்வங்களும்,
காவடியேந்தி நேர்த்தி வைத்த தேவதைகளும்,
கோபுரக் கலசங்கள் மட்டும் ஒளிவீசக்,
கோவில்களை விட்டுக் குடிபெயர்ந்த நாள்!
வால்மீகி வடித்தெடுத்த இராமாயணமும்,
வரலாற்றில் நான் படித்த பாரதமும்,
வாழ்க்கை வழியுரைத்த வேதங்களும்,
வேதனையோடு என்னிடம் விடை பெற்ற நாள்!
வார்த்தைகள் இல்லை .
ReplyDeleteவிழி மூடி, மௌனமாக அழுவதைத்தவிர, வேறு வழி தெரியவில்லை, கோமகன்! நன்றிகள்!
ReplyDelete