அண்டைக்கு, லீவு முடிஞ்சு, பள்ளிக்கூடம் தொடங்கிற நாள்!
விடியக் காலமை எட்டு மணிக்கே, தம்பையர் பள்ளிக் கூட வாசல்ல பிரம்போட நின்று கொண்டிருந்தார்! அவற்றை வீடும், பள்ளிக்கூடத்திற்குப் பின்னால தான் இருந்தது!
நாங்கெல்லாம், லீவில போனப் பிறகு, அந்த ஊரிலுள்ள ஆட்டிக்குட்டியளெல்லாம், படிக்க வெளிக்கிட்டுதுகள் போல. பள்ளிக்கூடம், முழுவதும், ஒரே ஆட்டுப் புழுக்கையும், மூத்திர மணமுமாக் கிடந்தது. வயது போன ஆக்களும் வந்து படிச்சிருக்கினம் போல கிடக்கு! கரும்பலகையில இருந்த படங்கள் சிலது, கோரியாவடி வெளிச்ச வீட்டில கீறிக்கிடந்த படங்கள் மாதிரிக் கிடந்தது! வாத்தியாரும், அந்த நாளையில நல்லாப் படிச்சவரா இருந்திருக்க வேண்டும்! அவற்றை வீட்டுச் சுவரெல்லாம், கொழும்பு விவேகானந்த சபையில குடுத்த சேர்ட்டிபிக்கேற்றுக்களால நிரம்பிக் கிடந்தது!
எனக்கும், தம்பிக்கும் அண்டைக்குப் பெரும் புழுகம். தீபாவளிக்கு, அப்பா வாங்கித் தந்த, போலீஸ்காரன் காச்சட்டையும், சேட்டும் போட்டுக் கொண்டு போன படியால் எல்லாரும், எங்களை ஒரு மாதிரிப் பொறாமையோட பாத்த மாதிரிக் கிடந்தது.
ஒருநாள், வாத்தியார், வாயை திறந்து வைச்சுக் கொண்டு இருந்தார். அப்ப அவற்றை நாக்குக் கொஞ்சமா ஆடிக்கொண்டேயிருந்துது.
ஏன் வாத்தியார், உங்கட நாக்கு ஆடிக் கொண்டேயிருக்குது எண்டு கேட்க, வாத்தியார் சொன்னார்.
தம்பி, படிச்ச ஆக்களின்ர நாக்கில சரஸ்வதி நடனமாடுவாவாம்! அது தான், அவ ஆடெக்க, தன்ர நாக்கும் நடுங்குது எண்டு சொன்னார்!
அதுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், கண்ணாடிக்கு முன்னால நிண்டு, நாக்கைப் பாக்கிறது தான், எனக்கும் வேலை! சரஸ்வதி, என்ர நாக்குக்கு கடைசி வரையும் வரவேயில்லை!
சின்ன வயசிலேயே வாத்தியாருக்கு, விஞ்ஞான மூளை வந்திட்டுதாம்.
வாத்தியார் வீட்டில, தீபாவளிக்கு, 'மான் மார்க்' வட்டப் பெட்டி, சீன வெடி வாங் கினவையாம்! யாழ்ப்பாணத்திலை இருந்து வரேக்க, காருக்கு மேல வைச்சு வெடியைக் கட்டிப் போட்டாங்களாம். வாற வழியில மழை தூறியிருக்குப் போல கிடக்கு! வெடிப் பக்கற், நனைஞ்சு போச்சுது போல கிடக்கு! அடுத்த நாள் காலமை, வெடியை எடுத்துக் கொழுத்தத் திரி மட்டும் எரிஞ்சுது! நல்ல நாளும், பெரிய நாளுமா, வாத்தியாருக்கு அழுகையே வந்திட்டுது! தீபாவளிக்குக் கடையளெல்லாம் பூட்டிப் போட்டாங்கள்! அப்பத் தான் வாத்தியாருக்கு, அந்த ஐடியா வந்திருக்க வேணும். கச்சான் வறுக்கிற பெரிய தாச்சியை அடுப்பில வைச்சு, கீழ நெருப்பெரிச்சு, அந்த வெடியெல்லாத்தையும், தாச்சிக்குள்ள போட்டு வறுக்க, அவ்வளவு வெடியும் பெரிய சத்தத்தோட வெடிக்க, அந்தப் பக்கத்திலேயே வாத்தியார் வீட்டுத் தீபாவளி தானாம் நல்லாயிருந்ததாம்!
இதே போல, வாத்தியாருக்குப் படிப்பிச்ச வாத்தியார், 'பாவ்லோ தியறி' எண்டு ஒண்டைச் சொல்லிக் கொடுத்தவராம்! நாய்க்குச் சாப்பாடு வைக்கேக்கை, இந்த 'பாவ்லோ' எண்ட விஞ்ஞானி, மணி அடிப்பாராம். கொஞ்ச நாள் போக, ஒவ்வொரு நாளும் மணியடிக்கிற நேரத்தில,சாப்பாடு இல்லாமலே நாயின்ர வாயில, உமிழ் நீர் வடியத் துவங்கீற்றுதாம்! வாத்தியாரும் இதை வேற விதமாய்ச் செய்து காட்டினாராம். கொண்டாட்டங்களில வெடிக்கிற 'சர வெடிப்பக்கற்' ஒண்டை வாங்கி, வெடியளைக் கொஞ்சம், கொஞ்சம் இடைவெளி விட்டுக் கட்டினாராம்! பிறகு, வெடிப்பக்கற்றோட, தன்ர நாயையும் கூட்டிகொண்டு, கடற்கரைப் பக்கம் போனாராம். பரிசோதனை, வெற்றி என்பதை, உறுதிப் படுத்த, ஊரில பெரிய ஆக்கள், நாலைஞ்சு பேரையும் கூட்டிக்கொண்டு போனாராம். பிறகு, ஒருத்தரும் எதிர்பாராத மாதிரி, நாயின்ர வாலில, வெடிக் கோர்வையைக் கட்டிக் கொழுத்தி விட்டாராம்! முதல் வெடி வெடிக்க, நாய் ஓடத் துவங்கிப் பிறகு, மெல்லமா நடக்கத் துவங்க அடுத்த வெடி வெடிக்க, நாய் மீண்டும் ஓடத்துவங்கிப் பிறகு மெதுவாக.....
எல்லா வெடியும் முடிஞ்சப் பிறகும், கொஞ்ச நாளைக்கு, நாய் ஓட்டமும், நடையுமாய், அதே 'டைமிங்கை' மாத்தாம இருந்ததாம்!
ஒரு நாள், வாத்தியார், தான் சொல்லுற இடத்தில போய்ப் பால் வாங்கிக் கொண்டு வந்து, தங்கட வீட்டில கொடுத்து விடச் சொன்னார்! நானும், பாலை வாங்கிக் கொண்டு போகேக்க அந்தப் போத்திலுக்கிள்ளை, பால் நுரைச்ச படி இருந்துது. அதுக்கிள்ள கன பூச்சியளும் செத்துப் போய் மிதந்து கொண்டு இருந்திச்சு! நானும் பாலைக் கொண்டு போய், வாத்தியாரின்ர அவவிட்டைக் குடுத்துப் போட்டு வீட்டை போய்ற்ரன்!
அப்பாட்ட ஒரு நாள், அப்பா! வாத்தியார் வீட்டுக்கு வாங்கிக் குடுத்த பால், கொஞ்சம் பழுதாய்ப் போச்சுது போல கிடக்கு எண்டு சொல்ல, அப்பாவுக்குப் பொல்லாத கோவம் வந்திட்டுது!
அவர் இனிமேல் அந்தப் பள்ளிக்குடப் பக்கம், தலை வைச்சுப் படுக்கக் கூடாது, எண்டு சொல்லி, என்னையும், தம்பியையும், வேற பள்ளிக் குடத்துக்கு மாத்திப் போட்டார்! எனக்கெண்டா இண்டைக்கு வரைக்கும், ஏனெண்டு விளங்கேல்ல!
நீங்களாராவது, ஏன் எண்டு சொல்லுவீங்களா?
;
No comments:
Post a Comment