Friday 30 December 2011

புதுமையான, ஆண்டொன்று பிறக்கட்டும்!















புதுமைகள் ஏந்திய,
புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்!
பூக்கள் மலர்வது போல!
புதுமையாக!
பூக்கள் மரங்களில் இருக்கட்டும்,
பிடுங்கி எடுத்து
மாலைகளாக்க வேண்டாம்!

சர வெடிகள் இல்லாமல்,
சாதாரணமாக மலரட்டும்!
வெடிச்சத்தம் கேட்டாலே,
வேதனை கலந்த நினைவுகளே,
வெடித்துக் கிளம்புகின்றன!

புத்தம் புதுச் சேலைகளும்,
பட்டு வேட்டி சால்வைகளும்,
தொட்டுப் பார்க்க நேரமின்றித்,
தம் பாட்டில் தூங்குகின்றன!
சீர் கொடுத்த நகைகள் கூடச்,
சேரிடம் தெரியாது,
வருடக் கணக்காக,
வங்கிப் பெட்டிகளில்,
வருகின்ற தலைமுறை பார்த்து,
ஆறுதலாகத் தூங்குகையில்,
இன்னும் நகை எதற்கு?

கஷ்டமென்று வரும்போது,
கை கொடுக்க என்கிறோம்!
இதுவரை,
இல்லாத கஷ்டமா,
இனிவரப் போகின்றது?

போதையில் மறையாது,
புதிய ஆண்டு பிறக்கட்டும்!
சொந்த நினைவோடு
சிந்தனையில் நிலைக்கட்டும்!
பரிசுகள் இல்லாமல்,
புத்தாண்டு பிறக்கட்டும்,

தர்மம் எங்கள்,
தலை காக்க வேண்டாம்!
தனக்கென எதுவுமில்லாமல்,
தவிக்கின்ற உறவுகளின்,
தன் மானத்தைக் காக்கட்டும்!


Saturday 10 December 2011

பொய்மை வெல்கின்றது!

மாரீசன் என்ற மாயமானில்,
மதியிழந்த சீதா தேவியின்,
மயக்கம் போல,
இரவு பகலாகத்,
தினமும் பூக்கின்ற,,
இணையத் தளங்களின் பூக்களால்,
பாலும், நீரும்
கலந்த கிண்ணத்திளிருந்து,
பாலை மட்டும் பிரித்தெடுக்கும்,
வல்லமையில்லாத,
பாவப் பட்ட அன்னப் பறவையாய்,
உண்மையும் பொய்யும்,
ஒன்றுடன் ஒன்று,
குலவிக் கலவும் , உலகத்தில்,
உண்மையைத் தேடுகின்றேன்!

பொன்னும், மணியும்,
புன்னகைகளும் அணிந்து,
பொய்மை வலம் வருகின்றது.
மண்ணின் மைந்தர்கள்,
என்ற கவசம் பூட்டித்,
தென்றல் காற்றின் மென்மையோடு,
பொய்மை உலா வருகின்றது.
புனிதமேனும் பேழையில்.
பத்திரமாகப் பூட்டிவைத்துப்,
பீடத்தில் அமர்த்தித்,
தூவிய அர்ச்சனைப் பூக்களிலும்,
துளித் துளியாய்ச் சிந்திய,
துவர்ப்புக் கலந்த,
வேர்வைத் தடங்களிலும்,
பொய்மை கலந்து விட்டது.

தர்மத்தின் முக மூடியைப்,
போர்த்துக் கொண்டு,
சர்வ தேச அரங்குகளில்,
சந்தனக் காவியினால்,
நொந்து சிதைந்து போன,
எலும்புக் கூடுகளையும்,
கண்ணீரில் நிதம் நனையும்,,
தலையணைகளின் ஈரங்களையும்,
மூடி மறைக்கின்றது.
அமாவாசைக் காலத்தின்,
கும்மிருட்டை நோக்கி,.
நம்மை அழைத்துச் செல்கிறது,

பாம்பையும், கயிற்றையும்,
பிரித்தறிய இயலாத,
அத்துவிதப் பெருவெளியின்,
அனாதைகளாய்,
அரிதாரம் பூசிய பொய்மை,
அழைத்துச் செல்கின்றது.
அர்த்த ராத்திரியின்,
இருட்டின் மங்கல் வெளிச்சத்தில்,
அறிவென்ற விளக்கேந்தி,
அடையாளம் காண்போம்!
பொய்மைகளின் புகலிடத்தை,
வாய்மையால் அழித்திடுவோம்!
,






Tuesday 29 November 2011

வேர்களை இழந்து வரும் விழுமியங்கள்


அது ஒரு கோடைகாலத்தின் மாலை நேரம். அன்றைய சூரியன், பகல் நேரத்துச் சந்திரன் போல வானத்தில் வெள்ளயாகத் தன்னை, அடையாளம் காட்ட எத்தனித்துக் கொண்டிருந்தான். கலங்கிய வண்டல் மண்  கலந்து  மஞ்சள்  நிறத்துடன் 'தேம்ஸ் நதி' அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.  சந்திரன், அந்த நதிக்கரையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதிரையில் இருந்தவாறே, கலங்கியிருந்த நதியின் அசைவுகளை அவதானித்துக் கொண்டிருந்தான்.  அவனது முகத்தில், அடர்த்தியாகத் தாடி வளர்ந்திருந்தது. அவனருகில் ஒரு சிகரெட் பெட்டியோன்று, தனது வாயை அகலத் திறந்த படி, ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கச் சுருள், சுருளாகப் புகை வளையங்கள், அவனது வாயாலும் மூக்காலும் வந்து கொண்டிருந்தன.  அங்கு வந்த சில ஜப்பானியர்களுக்கு, அவனது இருப்பு ஒரு இடைஞ்சலாக இருந்தது.  'டவர் பிரிட்ஜை' படமெடுக்க, சரியான 'ஆங்கிள்' கிடைத்த போது, இடை நடுவில் நந்தியாக அமர்ந்திருந்த அவனது தோற்றம், லண்டனைப் பிரதி பலிக்கும் என்று  அவர்கள் நினைக்கவில்லைப் போலும். .ஒரு முற்றுமுணர்ந்த ஞானியைப் போல, அவர்களது மனதில் உள்ளதை உணர்ந்தவனாகச் சற்று விலகி அமர்ந்தவன், படமெடுப்பு ஆராவாரம் அடங்கியதும் , திரும்பவும் தனது பழைய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.
சந்திரன் நன்றாகப்  படித்தவன். அவனது தந்தையார் ஒரு தமிழாசிரியர். 'அடுத்த சம்பளம் வரட்டும்' என்று தேவைகளைப் பிற்போடும் நிலையில் வாழ்ந்தாலும், கல்வியே மூலதனமென நினைக்கும் சராசரி யாழ்ப்பாணத்து தமிழாசிரியர் வகையைச் சேர்ந்தவர். ஒருவாறு, சந்திரனை நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்த்து விட்டார்.ஆரம்பத்தில், விடுதி வாழ்க்கை சந்திரனுக்குப் பிடிக்கவில்லை. அங்கு தொங்கிய அந்தப் பழைய தண்டவாள மணியைப் பார்க்கும், ஒவ்வொரு தடவையும் ஏனோ அவனுக்குச் சிறைச்சாலையின் ஞாபகம் தான் வரும். இவ்வளவுக்கும் அவன் சிறைச்சாலையை ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை. நாளடைவில் விடுதி வாழ்க்கையின், நெளிவுசுளிவுகள் தெரிந்த போது, விடுதி வாழ்க்கை அவனுக்குப் பழகிப் போய் விட்டது மட்டுமல்ல,  அது தந்த சுதந்திரமும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த விடுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், மாணவர்களை விடுதியிலிருந்து நல்லூர்க்  கந்தசாமி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போவது வழக்கமாக இருந்தது. பனிக் குளிரிலும். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, குளித்து வேட்டியையும் கட்டிக் கொண்டு வரிசையில் நடந்து செல்ல வேண்டும். உணர்ச்சிகள் மெல்ல, மெல்ல முகிழ் விடுகின்ற வயதில் அவன் அப்போது இருந்தான்.
இந்தக் காலத்தில் தான் அவனுக்குத் தேவகியின் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். சில வெள்ளிக்கிழமைகளில், அந்த அழகிய தென்னம்பிள்ளை வீட்டின் வாசலில், அவளை அவன் கண்டிருக்கின்றான். ஆட்களைப் பிரமிக்க வைக்கும் அழகில்லை என்றாலும், அவளது முன் பற்கள், இரண்டுக்குமிடையில் இருந்த இடைவெளி அவனுக்குப் பேரழகாகத் தெரிந்திருக்க வேண்டும். கோவிலிலிருந்து திரும்பி வரும்போது,  அவள் கல்லூரிக்குப் போவதற்கான, சீருடையுடன் நிற்பதையும் சந்திரன் அவதானித்திருக்கின்றான்.சில வேளைகளில், அவனுக்காகவே தேவகி காத்திருப்பது போல நினைத்தாலும், அப்படி ஒருநாளும் இருக்காது என்று அவனது ஏழாவது அறிவு அவனை எச்சரிக்கை செய்தது. சில வேளைகளில் தேவகி, தன்னைப்பார்த்துச் சிரித்தது போலவும் இருக்கும். அந்த நாட்களில், நல்லூர் முருகனும் அவனை மட்டும் பார்த்துச் சிரிப்பது போல அவனுக்குத் தெரியும். உயர் தரப் பரீட்சை, நெருங்கியபோது தனது கவனம் முழுவதையும் படிப்பிலேயே  செலுத்தினான். கல்வி என்னும் வேள்வித்தீயில், தன்னை ஆகுதியாக்கினான் என்று கூடச் சொல்லலாம்.
பரீட்சை முடிவுகள் வந்த போது, மற்ற விடுதி வாசிகளைப் போல அதிகாலையிலேயே கல்லூரிக் காரியாலயத்தின் வாசற்படிகளில் காத்திருந்தான். கல்விக்குள்  அரசியலைப் புகுத்திய அந்தத் தரப் படுத்தல் முறை அறிமுகப் படுத்தப் பட்டுச்  சில வருடங்கள் தான் இருக்கும். பானையில் இருந்தது அப்படியே அகப்பையில் வந்திருந்தது. ஆனால் அவன் எதிர் பார்த்திருந்த பொறியியல் துறை அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனிலும் பார்க்க, அவனது திறமை மீது  மற்றவர்கள் தான் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். விஞ்ஞானத் துறையில் தான் அவனுக்கு இடம் கிடைத்திருந்தது. கோயில், குளமெல்லாம் ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் பேராதனை நோக்கிய பயணத்தில் கவனத்தைச் செலுத்தினான்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மார்க்கஸ் பெர்னாண்டோ மண்டபத்தில்  தங்குமிடமும் கிடைத்தது. அந்தக் காலத்தில் தான்  அவனுக்கு அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஒரு காலத்தில் அவனது கனவுக் கன்னியாகிய அதே தேவகி, தனது நண்பிகளுடன் நடந்து போவதைக் கண்டான் . கழுதைகள் கூட மினுமினுக்கும் அந்தக் இளமைக் காலத்தின் வயதில், தேவகி  ஒரு தேவைதையாக அவன் கண்களுக்குத் தெரிந்தாள். அருகில் வந்து, நினைவிருக்கின்றதா என்று கேட்டாள். அவனது வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளுக்குப் பதிலாகக் காற்றுத் தான் வெளியில் வந்தது. தலையை மட்டும் ஆட்டினான்.எனது பெயர் தேவகி என்றாள். தானாக வந்து அவள் அறிமுகம் செய்து கொண்ட விதம் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில், அவள் ஏறி நிற்பது போல அவனுக்குத் தெரிந்தது. நாக்குத் தடுமாற நா ...ன் சந்திரன் என்று உளறினான். அவ்வளவு தான், அவர்களுக்குள்  நடந்த முதல் உரையாடல். சந்திரன் தனக்கு இறக்கைகள் முளைத்து விட்டதாக உணர்ந்தான், அதைத் தொடர்ந்து அவர்களின் சந்திப்புக்கள் அவ்வப்போது நடந்தன. இருவரும் ஒருவரையொருவர் விரும்பினாலும், வெளிப்படையாக அதை வெளிப்படுத்தத் தயங்கினார்கள்.
காலம் மட்டும் எவருக்காகவும் காத்திருக்கவில்லை. அவர்களது  அவ்வப்போதைய உரையாடல்களிலிருந்து தேவகி மருத்துவத் துறையில் படிக்கிறாள் என்றும், இரத்தினபுரியில் மாமாவின் கடையிருக்கின்றது என்றும், அங்குதான் உயர்தர வகுப்புப் பரீட்சை எடுத்ததாகவும். போட்டியில்லாததால், இலகுவாக மருத்துவத் துறை கிடைத்ததாகவும் தெரிந்தது. அவனிலும் பார்க்க, அவளுக்குப் புள்ளிகள் மிகவும் குறைவாகவே கிடைத்திருந்தது. முறைப்படி பார்த்தால்  அவனுக்குக் கோபம்  வந்திருக்க வேண்டும். பதிலாக அவளது குறுக்கு வழி சென்ற  கெட்டித் தனத்தை எண்ணி, மகிழ்ச்சியே ஏற்பட்டது. தானும் அப்படி வேறொரு பிற்போக்கான இடத்திலிருந்து  ஏன் சோதனை எழுதவில்லை  என்று தன் மீது தான் கோபம்  வந்தது.
மூன்று வருடங்களின் முடிவில் கையில் ஒரு மட்டை கிடைத்த போது  உலகத்தின் உச்சியின்  மேல் ஏறி நிற்பதாக உணர்ந்தான். அந்த உணர்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.     வீட்டில் ஒரு தங்கை இருப்பதை அம்மா அடிக்கடி நினைவு படுத்தத் தொடங்கினாள். உலகத்தில் எங்கு பிறந்தாலும், இந்த யாழ்ப்பாணத்தில் வந்து பிறக்கக் கூடாது. என்று அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொள்வான். அன்போடு சேர்த்து, பொறுப்புக்களையும் ஊட்டிவிடுகின்றார்களே என்று எண்ணுவான். அப்போது தான் அந்த நண்பனின் ' லண்டன்' கடிதம் வந்தது.  நீ, ஊரில இருந்து, ஒன்றையும் வெட்டி விழுத்த ஏலாது மச்சான்,  இஞ்ச வெளிக்கிட்டு வா' என்று எழுதியிருந்தான்.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இதைச் சொன்னபோது, ஆரம்பத்தில் கொஞ்சம் நிலை குலைந்து போனாலும், நாட்டு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒருவாறு சம்மதித்தார்கள். ஊரில் தான் செய்திகள், எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன? தேவகிக்கும் தெரிந்திருக்க வேண்டும். தன்னை அவசரமாக வந்து சந்திக்கும் படி கூறி ஒரு கடிதம் அனுப்பியிருந்தாள். நல்லூர்க் கந்தசாமி கோவிலில் அடுத்த வெள்ளிக்கிழமை சந்திப்பதாகப் பதிலனுப்பினான். அவனைக் கண்டதும் தேவகி அழுதாள். தன்னை விட்டு விட்டுச் சந்திரன் ஓடிப் போகப் போவதாகக் குற்றம் சாட்டினாள். தனது படிப்பு முடிந்ததும், தன்னையும் லண்டனுக்குக் கூப்பிட வேண்டும் என்று சத்தியம் பண்ணித் தரவேண்டும் என்று அடம்  பிடித்தாள். சத்தியமெல்லாம் எதற்குத் தேவகி? நான் தான் சொல்லுறேனே! என்மீது உனக்கு நம்பிக்கையில்லையா? என்று கூறிப் பார்த்தான். ஆண்களை நம்ப முடியாது, சந்திரன். அவனுக்கு, அவன் மீதே கோபம் வந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், சரி. சத்தியமா உன்னைக் கூப்பிடுவான், போதுமா? என்றான். இல்லை, கற்பூரம் மீது சத்தியம் பண்ணித் தரவேண்டும் என்று பிடிவாதமாக நின்றாள். இங்கு சத்தியம் பண்ணுகிறீர்கள் தானே, அதைச் சாமிக்கு முன்னால் செய்தாலென்ன? என்று கேட்டாள். எங்கிருந்து தான் அந்த அசாத்தியத் துணிவு வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. தர தரவென்று அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, கோவிலுக்குள்ளே போனான். எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தின் மேல் கைவைத்து, அவளை அங்கு கூப்பிடுவதாகச் சத்தியம் செய்து  கொடுத்தான். அவனது உடம்பு முழுவதும் நன்றாக வேர்த்திருந்தது.
ஒருவாறு  லண்டன் 'ஹீத்ரு' விமான நிலையத்தில் வந்து இறங்கியாயிற்று. நண்பன் வெளியில் காத்திருப்பான். அரை மணித்தியாலத்தில் வெளியே போய் விடலாம் என எண்ணியபடி ' குடிவரவு ' பலகை காட்டிய வழியைப் பார்த்து நடந்தான். அந்த நாளைய கறுத்த நிறப் பாஸ்போர்ட் தான் அவனது. 'சோஷலிச ஜனநாயகக் குடியரசு' என்று உலகத்தில் அப்போதிருந்த அத்தனை. ஆட்சியமைப்பு முறைகளும் அதில் எழுதப் பட்டிருந்தன.  அப்போது தான் அதை வாசித்துப் பார்த்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அதைக் கண்டதும், அந்தக் குடிவரவுப் பகுதிக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த ஒருவர், அவனை அருகிலிருந்த கதிரைகளில் ஒன்றைக் காட்டி உட்காரும்படி சொன்னார். என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன் தான் என்று மனதினுள் நினைத்துக் கொண்டான். தனக்குத் தரப்பட்ட கதிரை, தான் ஒரு பொதுநலவாய நாட்டில் இருந்த வருவதால் தான் என்று நினைத்து மனதில் ஆறுதலடைந்தான். இந்திய, பாகிஸ்தானிய கடவுச்சீட்டுக் காரருக்கும் இதே போன்ற மரியாதை அளிக்கப் பட்டதே , அதற்கான காரணமாகும். பின்பு ஆறு மணித்தியாலங்கள் கழித்து, வெளியில் வந்தபோது தான், வெள்ளைக்காரனின் வரவேற்பு அவனுக்கு விளங்கியது. இடையில் நடந்தவற்றை அவன் மறக்கவே விரும்பினான்.
வெளியில் வந்த போது, நண்பன் காத்திருந்தான். நண்பனிடம் உள்ளே நடந்தவற்றைச் சொன்னான். நண்பன் கூறிய பதில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. 'யூ ஆர் வெரி லக்கி மச்சான்'!
ஒரு மாதிரி நண்பனின் அறையில் ஒரே கட்டிலை இருவரும் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்தார்கள். அத்துடன் அவன் பள்ளிக்கூடத்துக்கும்  காசு கட்ட வேண்டும். வீட்டில் இருந்து கொண்டு வந்த, இருநூறு பவுண் பெறுமதியான, பிரயாணக் காசுக்கட்டளையும் வீட்டுக்குத் திருப்பியனுப்பி விட்டான். நண்பனிடம் ஒரு சிறு தொகையை கடனாக வாங்கிக் கொண்டு  வேலை  தேடும் படலத்தில் இறங்கினான். 'சோசல் செக்குரிடி' நம்பர் இல்லாமல் வேலை செய்ய முடியாது. நண்பன் ஒரு இலக்கம் தந்தான். அந்த இலக்கம் 'வாகீசன்' என்பவருடையது. ஒரு எரிபொருள் நிரப்பும் ஒரு கடையில் இரவு வேலை கிடைத்தது. அந்தக் கடையில் முகாமையாளராக ஒரு வயது முதிந்த ஒரு தமிழர் தான் இருந்தார். அவர் இவனை அன்போடு தம்பி வாகீசன் என்றே அழைப்பார். காலையில் வேலைக்கு வரும் அவர் அவனோடு கதைக்கும் போது, சில வேளைகளில் தம்பி வாகீசன், என்று அழைக்கும் போது, அவனது பெயரே அவனுக்கு மறந்து போயிருக்கும். சில வேளைகளில், தம்பி உன்னோடு தான் கதைக்கின்றேன் என அவர் நினைவு படுத்தும்போது, திடுக்கிட்டுத் தன்னை சுதாரித்துக் கொள்வான். பின்பு வேலை முடிந்ததும் அப்படியே பாடசாலைக்கு ஓட வேண்டும். பின்பு வீட்டுக்கு வந்து தான், சமையல், குளிப்பு. இரவு திரும்பவும் வேலை.  இவ்வாறு, இந்த வாழ்க்கை, இரண்டு வருடங்கள் ஓடியது. நீண்ட விடுமுறைக் காலங்களில், இரவும் பகலும் வேலை செய்து வீட்டிற்கு வந்து குளிக்கும் போது, ஏற்கனவே அரைச் சூட்டில் இருக்கும் நீர் உடம்பின் வெப்பத்தில், கொதி நிலைக்குக் கூட வந்து விடுவது போல உணர்ந்திருக்கிறான்.
மிகுந்த கடின உழைப்பாலும், நண்பனுடன் செலவுகளைப் பகிர்ந்து கொண்டதாலும், அவனால் சிறிது தொகையைச் சேமிக்கக் கூடியதாய் இருந்தது. அப்போது தான் அம்மாவின் கடிதம் வந்தது. அவனது தங்கையின் திருமணத்தை  வெகு விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தாங்கள் அதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபடுவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. சில நாட்களின் பின் தேவகியின் கடிதமும் வந்தது. தனது படிப்பு முடிந்து விட்டதாகவும், வாக்குறுதி அளித்தபடி தன்னை அங்கு கூப்பிடும் படியும் கேட்டிருந்தாள். அவனது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காதலுக்கும், பாசத்திற்கும் இடையேயான போட்டி. முடிவெடுக்க முடியாமல் சந்திரன் திணறினான், தேவகியிடம் ஒரு வருஷம் மட்டும் பொறுத்திருக்கும் படி தொலைபேசியில் கெஞ்சினான். மறுமுனையில், அவள் பத்திரகாளியாகினாள்/. இனிமேலும் உன்னைக் காணாமல் இருக்கமுடியாது என்றாள். இறுதியில் தேவகியை முதலில் கூப்பிடுவது என்றும், ஒரு வருடத்தில் தங்கையின் திருமணத்தைச் செய்யலாம் என்றும் முடிவு செய்தான். இந்த முடிவே அவனது முடிவாகவும் இருக்கும் என்று, அவன் அப்போது எதிர் பார்த்திருக்கவில்லை.
தேவகியும் வந்து சேர்ந்து விட்டாள். வாழ்க்கையில் ஏதோ அர்த்தம் பொதிந்து கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது. வெளி நாட்டு மருத்துவர்களுக்கான 'மொழிப் பரீட்சை'யிலும் சித்தியெய்தி விட்டாள். தேவகி வந்ததும்  தனியாக ஒரு சிறிய வீடொன்று வாடகைக்கு எடுக்க வேண்டி ஏற்பட்டதால். செலவுகளும் அதிகரித்து விட்டது. தேவகியின் சில சொந்தங்களும், அடிக்கடி வந்து போகத் தொடங்கின. அவர்கள் கன  காலத்திற்கு முன்பு இங்கு வந்தவர்கள்.அவர்களது 'சமூக அந்தஸ்து' மிகவும் உயர்ந்ததாக அவர்கள் காட்டிக் கொண்டார்கள். தேவகியின் காதில் அடிக்கடி குசு குசுப்பார்கள். இதனைப் பெரிதாகச் சந்திரன் கணக்கில் எடுக்கவில்லை.
சில வாரங்கள் கழிந்ததும், தேவகிக்கு 'பெர்மிங்கம்; என்னும் இடத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. அவளது வேலையின் நிமித்தம், அவள் அங்கேயே ஆஸ்பத்திரி விடுதியிலேய தங்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில்  சில வாரங்களுக்கு ஒரு முறை வந்து போவாள். காலம் செல்லச் செல்ல, அவள் வருவது  குறைந்து விட்டது.   சந்திரனது வாழ்க்கையும், பழையபடி வேலை, பள்ளிக்கூடம் என்ற வட்டத்திற்குள் மீண்டும் சுற்றத் தொடங்கியது.
ஒருவாறு தங்கையின் திருமணத்துக்கெனக் கடன் வாங்கிக் கொஞ்சக் காசும் அனுப்பியாயிற்று. காசை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தவனை, அம்மாவின் கடிதம் தான் வரவேற்றது. காசனுப்பி விட்டபடியால், மனதில்  இருந்த குற்ற உணர்வு முற்றாக அவனிடமிருந்து விடை பெற்றிருந்தது.  அன்றைய வானம் கூட முகில்கள் இன்றி மிகவும் தெளிவாக இருந்தது. வழக்கமாக இறைவன் திருவருளை முன்னிறுத்தி, நலம் விசாரித்த படி தான் அம்மாவின் கடிதம் தொடங்குவது வழமை, இன்று வித்தியாசமாக, அன்புள்ள சந்திரனுக்கு என்று தொடங்கி, சீதனத்தை முன்னிறுத்தி, பெண்ணைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்ற மாப்பிள்ளைகளுக்குக் கழுத்தை நீட்டுவதிலும் பார்க்க,  நாட்டுக்காகச் போராடுவது மிகவும் உயர்ந்தது  எனக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, அவனது தங்கை இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும்,  அப்பா  அவளையே நினைத்தபடி பித்துப் பிடித்த மனிதனைப் போல இருப்பதாகவும், தனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் எழுதியியிருந்தார். இயலுமானால் அவனை ஒரு முறை வந்து போகும்படியும் கேட்டிருந்தார்.
அவனது இதயத்தில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. யாராவது அப்போது, தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான், அவன் அது வரை அறிந்திராத ஒரு ;வெறுமை' அவனை ஆட்கொண்டது.
சில மாதங்களில், தேவகியின் போக்கில் மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அவளது வருகைகள், வெகுவாகக் குறையத் தொடங்கின. வரும்போதும் அவனோடு முகம் கொடுத்துப் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். தனது உறவினர்கள் வீடுகளிலேயே அதிக நேரத்தைச் செலவு செய்தாள். மச்சான், தேவகியினது போக்கு எனக்குச் சரியாகப் படவில்லை. எதற்கும் அவளோடு தனியாக இருக்கும்போது கதைத்துப் பார் . அவளுக்கு ஏதோ பிரச்னை இருக்கின்றது போலத் தெரிகின்றது என்று எனது நண்பன் கூடக் கூறினான். சந்திரனுக்கு நண்பன்   மீது தான் கோபம் வந்தது.
வீட்டுக்கு வந்து கதவைத் திறந்தவனது பார்வையில் படக்கூடியதாக அந்தக் கடிதம் வைக்கப் பட்டிருந்தது. அவனுக்கு 'பில்' களையும், கடனட்டைக் கடிதங்களையும் தவிரக் கடிதங்கள் வருவது மிகவும் குறைவு. கலியாணக் காசு அனுப்பியபின்பு அம்மாவின் கடிதங்களுமவருவது குறைந்து விட்டது. தேவகி, டெலிபோனில் கதைத்துக் கொள்ளுவாள். எனவே ஆச்சரியத்துடன் கடிதத்தை எடுத்தவன், கடிதத்தின் மேலுறையில்  தேவகியின், கையெழுத்தை அடையாளம் கண்டு கொண்டான்.

அன்புள்ள சந்திரனுக்கு,
சில நாட்களாக, என்னில் சில மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள். இங்கு வந்த பின்பு எனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டது. நீண்ட காலமாகத் தொடர்புகள் விட்டுப் போனாலும். 'தானாடாவிட்டாலும் தன் சதையாடும்' என்பது என்னைப் பொறுத்த வரையில் உண்மையாகப் போய் விட்டது. எனது உறவினரது மகன் ஒருவரும், இங்கு 'பெர்மிங்கமில்' ஒரு ;நல்ல 'பதவியில்' வேலை செய்கின்றார். தூரத்து வழியில், அவர் எனக்கு மச்சான் முறையும் கூட. அவர் மிகவும் முற்போக்கானவர். இங்கு  வளர்ந்த படியால், அவ்வாறு இருக்கலாம். நீங்களும் நல்லவர் தான். ஆனால் இருவருக்குமிடையே உள்ள 'இடைவெளி' மிகவும் அதிகம். இது எல்லாம் இங்கு சர்வ சாதரணமாக நடப்பவை தான் என்று எனது உறவினர்கள் கூறுகின்றார்கள். உங்களுக்கு வயசிருக்கின்றது. ஊருக்குப் போய், உங்கள் அப்பா, அம்மாவின் ஆசீர்வாதத்துடன் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்யுங்கள்......

கடிதத்தை அவன் மேலும் படிக்கவில்லை, கண்ணீர் அவனது கண்களை மறைத்தது. கடிதத்தை மடித்து, சாமிப் படங்களிருந்த தட்டில் வைத்தான். நல்லூர் முருகனின் படமொன்றும் அதில் இருந்தது. அவனைப் பார்த்து, அவர் சிரிப்பது போல் இருந்தது.
இப்போதெல்லாம் வேலைக்குப் போகின்றான். படிப்பு முடிந்து இரண்டாவது மட்டையும் கைக்கு வந்து விட்டது, அந்த மட்டைகளுக்கேற்ற ஒரு வேலை ஒன்றைத் தேடித் திரிகிறான். அது ஒரு வேளை  அவனது 'அந்தஸ்தை' மாற்றக் கூடும். வேலை முடிந்தவுடன், நேரே  இந்தத் தேம்ஸ் நதிக்கரைக்கு, இந்தக் கதிரைக்கு வந்து  விடுகின்றான். இரவாகியதும் திரும்பவும், அந்த வேலைக்குப் போய் விடுகிறான். அந்தக் கலங்கிய நதியின் அசைவில், தனது மனதைக் காண்கிறானோ என நான் நினைப்பதுண்டு!

Sunday 20 November 2011

நினைவுகளில் விளக்கேற்றுவோம்















நந்திக் கடலும், கிளாலி நீரேரியும்,
வற்றிப் போகாமல்,
வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர்,
வடிந்தோடி நிறைத்திருக்க,
வடக்கிலும், கிழக்கிலும்.
வசந்தம் தேடியவர்களின்,
வாடிப் போன முகங்களில்,
கோடுகள் மட்டும் விழுகின்றன!
அரேபியாவின் பாலைவனங்களை,
அழகு படுத்தும் 'பிரமிட்டுக்களாக';
அரைக் காசுக்கும்  பயனில்லாத,
அபிவிருத்தித் திட்டங்கள்
ஆயிரமாய் அரங்கேறுகின்றன!

அந்தக் காலத்து வாழ்வில்,
ஆடம்பரங்கள் இல்லை!
அரை வயிற்றுக் கஞ்சியும்,
ஆனையிறவின் அசைவில்!
ஆனாலும் வாழ்வில்,
அர்த்தம் இருந்தது!
வளவைச் சுற்றி வர,
வேலிகள் இருந்தன!
விடி வெள்ளி கூட.
அருகில் நெருங்கியது!
யாருக்குத் தெரியும்?
விட்டில் பூச்சிகளுக்கு,
விளக்கு வைக்கப் பட்டிருகிறதென்று!

வினாக்கள் தொடர்கின்றன!
விடைகள் மட்டும்,
கண்ணாமூச்சி ஆடுகின்றன!
தாயைக் கட்டிப் பிடித்த,
சேயின் குரல்வளைகள் நெரித்துத்,
தாய் கூடப் பேயாகினாள்!
வென்றாலும், தோற்றாலும்
வீர மறவர்கள் நீங்கள்!
விடை பெற்றுப் போய்விட்ட,
வீராங்கனைகள் நீங்கள்!
விதையாகி விட்ட உங்களை,
வியாபாரப் பொருளாக்கி,
விற்பனைச் சந்தையில்,
விலை பேசுகின்றார்கள்!

வீழ்ந்து விட்ட வீரர்களே!
வேதனையின் விம்மலுடன்,
விழி கனக்க நினைக்கிறோம்!
இழப்பின் பரிமாணம்.
ஏளனத்துடன் சிரிக்கின்றது!
நீங்கள் பாய்ந்த போது,
நாங்களும் பாய்ந்தோம்!
களம் வென்று வந்த போது,
புளங்காகிதம் கொண்டு,
வாழை மரங்கள் நட்டு,
விடுதலைக் கீதமிசைத்தோம்!
வானத்தில் பறந்த போது,
நாங்கள் கூடப் பறந்தோம்!

ஆனாலும்,
நீங்கள் வீழ்ந்த போதில்.
நாங்கள் வீழ்ந்து விடவில்லை!
நாய்களைப் போல்,
நமக்குள்ளே  போட்டிகள்!
கருவூலங்களின் திறப்புகளும்,
கை மாறி விட்டன!
அக்கினியில் குளித்தும்,
அழிந்து போகாத, சீதையின்
தூய்மை உங்களுக்கு!
உங்கள் கனவுகள்,.
நனவாகும், காலம் வரை,
நினைவுகள்  சுமந்து.
நெஞ்சினில் விளக்கேற்றுவோம்!










Wednesday 16 November 2011

புலம் பெயர் வாழ்வு


























காய்ந்து போய் விட்ட,
காலப் பூக்களின் இதழ்களாய்.
சருகாகிப் பறக்கும்,,
சரித்திரங்களின் சாட்சிகள்!
கடாரம் வரைக்கும்,
கப்பற்படை நடத்திக்,
கோவில் குடமுழுக்கு நடத்தியவனின்,
குலக் கொழுந்துகள்!
அலை புரளும் கடல்களையும்,
ஆகாய வீதிகளையும் நிதமும்,
அளந்த படி அலையும்,
ஆதரவில்லாத அகதிகள்!
இரவுப் புறாக்கள் மட்டும்,
குறு குறுக்கும் பேரிருளில்
பனி படிந்த கண்ணாடி ஜன்னல்களில்
பார்வை நிலை குத்தப்,
பேய்கள் உறங்கையிலும்
காவல் வேலைக்காய்
விழித்திருக்கும் விழிகள்!
மரக்கறிக் கடைகளின்,
மூட்டை தூக்கிகள் ஓய்வெடுக்க,
முதுகெலும்பை மலிவாக்கி,
மூட்டையடிக்கும் தோள்கள்!
மீசை மயிர் கருக்கும்,.
மின்னடுப்புக்களின் வெக்கையில்
பாண்களைப் பதம் பார்க்கும்,
பழகிப் போய் விட்ட விரல்கள்!
அடி வயிற்றில்,
வண்ணத்துப் பூச்சிகள் பறக்க,
அடுக்கு மாடிக் கட்டிடங்களின்.
அழகிய கண்ணாடிகளைக்
கழுவும் கயிறுகளில் தொங்கும்,
காப்புறுதியில்லாத உயிர்கள்!
கரப்பொத்தானின் மரபணுக்கள்,
கலந்து விட்ட பிறப்பாக,
காலநிலை மாற்றங்களோடு,.
கூர்ப்படையும் உடல்கள்!
எங்களின் வருகையின் பின்,
புயல் காற்றில் அழிந்த,
பூசனிக் கொடிகளின் காய்கள்
சந்தைக்கு வருகின்றன!
கைவிடப் பட்ட பழமரங்கள்,
கண் திறந்து பார்த்த பின்,
மீண்டும் காய்க்கின்றன!
பொருளாதாரத்தின் விதிகள்
புதிதாக எழுதப் படுகின்றன!
கைகளினால் கார் கழுவும்,
கடைகள் கூட உதயமாகின்றன!
அம்மாக்களும், அப்பாக்களும்,
அயல் நாடு பார்க்கையில்,
அவர்கள் கட்டியதாய், நினைத்த,
ஆகாயக் கோட்டைகளின்,
அத்திவாரங்கள் ஆடுகின்றன!
அம்மியில் கால் மிதித்து,
அருந்ததிக்குக் கை காட்டி,
ஊரறிய நடந்த திருமணங்கள்,
உடைந்து நொறுங்குகின்றன!
விடிகாலையின் விரகதாபங்கள்,
விடை பெற்று விடுகின்றன!
ஊருக்காக வாழ்க்கையாய்,
உள்ளே எரிகின்றன, மனங்கள்!
அறுந்து தொங்குகின்றது,
ஆயிரம் ஆண்டு காலத்துச்,
சமுதாயச் சங்கிலி!
அரைநொடியில் அந்தஸ்துகள்,
மாறி விடும் காலத்தில்,
பணத்தை நோக்கிய பயணம்,
பந்தயமாக மாறுகின்றது!
இனத்தின் விடுதலை கூடப்,
பணத்திற்கு விலை போகின்றது!

Tuesday 15 November 2011

முதுமை
















கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன்.
கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு!
கால்கள் மூன்றாகி நடக்கையில்,
மனம் மட்டும், அங்கும் இங்குமாய்,
மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது!
காலம் தான் எவ்வளவு குறுகியது!
கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில்,
யாரோ பந்து விளையாடுகின்றார்கள்!
களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள்,
காதுக்கு இனிமையாய் இருக்கின்றன!
கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது!
அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில்,
ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது!

முதுமை என்பது, முந்திய அனுபவங்களின்
இரை மீட்புக் காலம் போலும்!
பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன!
இழந்து போன சந்தர்ப்பங்கள்,
எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை!
இமை வெட்டும் நேரத்திற்குள்
வாழ்வு முடிந்து போய் விடுகின்றது!
வரட்டுக் கவுரவங்களின் பிடியில்,
வாழ்க்கை நசுங்கிப் போய் விடுகின்றது!

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,
எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,
இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,
இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!
உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.
அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,
அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!
இருக்கும் போதே வாழ்வதை விட்டு,
எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,
சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,
வேதனை மட்டும் முதுமையாகின்றது!

இளமையெனும் நதியில் மிதக்கும் படகாகி,
காலமெனும் தரையில் உருண்டோடி,
கடலன்னையின் கரையில் சங்கமமாகும்,
நதியொன்றின் நிலையில், மிடுக்கிழந்து.
மெல்லிய ஒரு கீற்றாகி ஓடுகிறது, வாழ்வு!
விடியும் பொழுதுகள், வேதனை தருகின்றன!
வெந்து போன நெருப்புக்குள், தணலாக,
வேதனைகள் உள்ளேயே குமுறுகின்றன!
இளமைக் காலத்தின் வெறித்திமிரில்
உலகம் கூட சிறிதாகத் தெரிந்தது!
தேவைகளை மதிக்கும் உலகத்தில்,
தேவையே இல்லாத ஒரு பொருளாகி,
தவிர்க்க முடியாத, அந்த விடுதலைக்காகத்,,
தயாராவது தான் முதுமை போலும்!

Wednesday 12 October 2011

தாய் நிலம்




















வன்னி மண்ணின் வகிடெடுத்த
வரம்புகளும் வாய்க்கால்களும்
வளமுடன் வாழ்ந்து விட்ட நாட்களை,
நாட்காட்டியின்  கிழிந்துபோன இதழ்களாக்கி,
பாளம், பாளமாய் பிளந்து கிடந்தன!
கூரை மீது கட்டிய விறகுகளுடன்
ஊர்வலம் வந்தன உல்லாசப் பேருந்துகள்!
காய்ந்துபோன கண்ணீர்ச் சுவடுகளோடும்
தேய்ந்து போன செருப்புக்களோடும்
ஊர்ந்து திரிந்தன உயிர்க் கூடுகள்!

கொதிகணைகள் எறிந்த   பெரு நெருப்பில்
பாதி  முறிந்து போன  பனை மரங்களின்,
செத்துப் போன உச்சிகளின் மீது,
பச்சைக் கிளிகள் சோடி சேர்ந்திருந்தன!
அரச மரங்களின் அடிவாரங்களில்
பிரசவ காலத்துப் பெண்களின்
அடி வயிற்றின் வட்டங்களாய்க்
குடி வந்திருந்தன புத்த கோவில்கள்!
புத்த பிரானின் புனிதம் கலையாது
பத்திரமாகப் பாதுகாத்தன,காவலரண்கள்!

அனுராத புரத்தைத்  தாண்டியதும்,
அடிமனத்தைப் பிசைகின்றன
அழிவின் ஆறிப்போன வடுக்கள்!
ஓமந்தைச் சாவடியில் இருந்து,
ஊர்காட்டிக் கற்களின் அம்புக்குறிகள்,
நாக தீபத்திற்குப்  பாதை காட்டுகின்றன!
சர்வதேச விமான நிலையங்களின்,
நுழை வாயிலகளின்  வனப்புடன்,
வீதியோரம் நிறைந்த விளம்பரங்களுடன்,
யாழ்ப்பாணம், உங்களை வரவேற்கின்றது!

உடைந்து போன கட்டிடங்களின் சுவர்களில்
வடக்கின் வசந்தம் விளம்பரம் செய்தது!
கருகிப் போன வடலிகளைக் காக்கக்
கருக்குமட்டை வேலிகள் தேவையிளந்தன
ஆரியகுளத்தின் தாமரைக் கொடிகள்
அனுராதபுரத்தின் 'புனித நகரமாய்;
ஆரிய குளத்தை மாற்றியிருந்தது!
தாவணிகள் இல்லாத சேலைகளுக்கிடையில்
தர்மத்தின் காவலர்களின் மழித்த தலைகள்!

கண்டி வீதியின், கச்சேரிச் சந்தியில்,
கெமுனுப் படையணியின் தலைமை இருந்தது!
பழைய பூங்காவின் அழகிய மரங்கள்,
பாதியாய்க் குறைந்து, புதியதாய் வளர்ந்தன!
வடக்கையும், தெற்கையும் இணைக்கும் பாலமாய்
வங்கிகள் தங்களை விளம்பரம் செய்தன!
செல்வந்தர்கள் வாழ்ந்த பெரிய வீடுகள்,
உல்லாச விடுதிகளாய் உரு மாறியிருந்தன!
நல்லூர்க் கந்தனின் கோவில் பெரிதாக,
ஒல்லாந்தர் கோட்டையும் உயிர் பெறுகின்றது!

பெரிய கடையின், மீன் சந்தைகளில்,
'சூரை' மீன்கள் நிறையக் கிடைத்தன!
பாகிஸ்தான் நாட்டின் பெயரிட்ட பெட்டிகளில்,
பாரைக் கருவாடும் நிறையக் கிடைத்த்தது!
'வின்சர்' தியேட்டர் வெளியாகக் கிடக்க,
வண்ணான் குளத்தின் மேல் வாகனங்கள் நின்றன!
தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவுச் சின்னம்.
தலை நிமிர்ந்து நிற்கின்றது, மீண்டுமொரு முறை!
வீரசிங்கம் கட்டிடத்தின் வெடித்த சுவர்கள்,
வெள்ளையடித்துப் புதிதாய் இருந்தன!

புங்கையூரின் புகழ்மிகு நுழைவாசலில்,
புத்தனின் சிலையொன்று, நல்வரவு கூறுகின்றது!
பொலித்தீன் பைகளில், புதுமை குறையாத,
பூவரசம்  பூக்கள் விற்பனையாகின்றன!
ஊர் கூடித் தேரோட்டிய கோவில்கள்,
அர்ச்சகரின் வரவுக்காய்க் காவலிருக்கின்றன!
புத்தபிரானின்  கால் பதித்த, புனித விகாரை,
புதிய  பாலத்துடன் பொலிந்து நின்றது!
தவழ்ந்து, தவழ்ந்து நடந்த வரிசையில்,
தத்தித் தத்தி, முன்னேறிச் செல்கையில்,
தெமிளுக் கட்டியக் எனவா, நேத?
தெளிவோடு கூறியது, புதியதொரு குரல்!

Saturday 18 June 2011

முள்ளி வாய்க்கால் விட்டுச் சென்ற தடங்கள்

















வெள்ளி முளைக்கும் ஒரு மாலை நேரத்தில்
முள்ளிவாய்க்காலின் பரந்த மணல் வெளிகளில்
புதிதாகத் தோன்றியிருந்த குழிகளைக் கண்டு
பூமித் தாயின் முகம் கூடத் தனது முகம் போலப்
பார்க்குமிடமெல்லாம் எரி வெள்ளி விழுந்து வெடித்த
எரிமலைகளின் வாய்களைப் போல, வட்டமாகத்
தனது முகத்தைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல,
எண்ணிய படியே தன் பாதையில் நகர்ந்தது நிலவு!

ஈராண்டு காலமாய், இந்தப் புதை குழிகளுக்குள்
மறைந்து கிடக்கும் கதைகளும், மனிதக் கூடுகளும்
துரத்தித் துரத்தி வேட்டையாடப் பட்ட அவர்களின்
சரித்திரமும், செத்துப் போன நினைவுகளும்
புதையுண்டு கிடக்கும் புனிதக் கனவுகளும், ஒரு நாள்
விதையில் இருந்து துளிர் விடும் மரங்களாய்,
வளரும் என்ற கனவில், மனதில் விளக்கேற்றி
விழி கனக்க நினைத்திருக்கும் ஊரே முள்ளிவாய்க்கால்!

பிறக்கும் முன்னே எழுதப் பட்ட விதியாகக்
கருவிலேயே எங்கள் தலைவிதி எழுதப் பட்டு விட
தமிழ்த் தாயின் வயிற்றில் வளர்ந்த சாபத்திற்காகத்
தனது காலில் தலை நிமிர்த்து வாழ நினைத்த பாவத்திற்காக,
உலகின் விடுதலை கேட்கும் உன்னத இனங்களின்
உயிர் மூச்சை அடக்கி வைக்க, ஒரு உதாரணத்திற்காகப்
பாரில் பலம் மிக்க நாடுகள், படைப்பலம் அளிக்கச்
சீராக நடத்தப் பட்ட நாடகமே முள்ளி வாய்க்கால்!

நீதியின் காவலர்களே, நடுவு நிலை தவறவும்,
போதி மரத்துப் புத்தன் பூவேந்தி ஆசீர்வதிக்கவும்,
மருத்துவ மனைகளும் மறை முக இலக்குகளாக.
பணி செய்த மருத்துவரும் பயங்கர வாதிகளாக,
மணிக்கு மணி மாறிய மக்களின் எண்ணிக்கையும்,
பிணிக்கு மருந்தின்றியும், பசிக்கு உணவின்றியும்
தனித்துப் போன உறவுகளுக்கு அனுப்பி வைத்த
'வணங்கா மண்' கப்பலையும், வெட்கமின்றி
நடுக் கடலில் திருப்பி விட்ட நய வஞ்சகமும்
நடத்தப் பட்ட இடமே இந்த முள்ளிவாய்க்கால்!

போராளிகளின் சரணடைவும்,அவர்களது மரணங்களும்
தீராத வடுக்களாக, மனதில் கீறி விட்ட கல் வரிகளாய்,
நீர் நிறைந்த சகதிகளின் ஓரங்களில், மண்ணில் புதைந்து
சீருடை களைந்த நிலையில், இரத்தம் கண்டிய முகங்களின்
வெறுமையும், வெற்று வாக்குறுதிகளின் சாட்சியத்தில்
அறுந்து போன சொந்தங்களின் சாட்சி சொல்லும்
கோரக் காட்சிகளும், கொடுமையின் உச்சத்தில்
வேரறுந்து போன போராட்டத்தின் களமே முள்ளிவாய்க்கால்!

திரும்பத் திரும்பப் உயிர் துளிர்க்கும் ':பீனிக்ஸ்' பறவையாய்
அரும்பில் இருந்து வளர்ந்து வரும் ஆலமர விழுதுகளாய்,
தாங்கிப் பிடித்திருப்போம், இந்தக் கொடிய நினைவுகளை!
தூங்கட்டும் அமைதியாக ,எங்கள் அணைந்து போன தீபங்கள்!
என்றோ ஒரு நாள் எங்கள் பொழுதும் விடியட்டும்
அன்றேல் விடியாது பேரிருட்டாய், காரிருளாய் மாறட்டும்!
ஆனாலும் எங்கள் நினைவுகளில்,ஏதோ ஒரு விதத்தில்
இணைந்திருக்கப் போகும் இடமே முள்ளி வாய்க்கால்!!!

பண்ணைப் பாலம்















பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள்
தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க,
கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை
கடற்காற்றில் கலந்து,
பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப
பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில்
கடற்காற்று மீட்டிய சங்கீதம்
அந்த மாலை நேரத்துப்,
பறவைகளின் ஒலியோடு கலந்தது!

மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில்,
களங்கண்டித் தடிகளின் உச்சிகளில்
கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை
அகல விரித்துத் தவம் செய்ய,
மேல் வானத்துச் சூரியன்
தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில்
சங்கமிக்கத் தயாராகினான்!

பாலத்தின் அடித்தளத்து மதகுகளின்
மேலே குந்தியிருந்த மீனவர்களின்
மூங்கில் தடித் தூண்டில்களில்
தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன்
அலைகள் மேல் தவழ்ந்த முரல் மீன்கள்,
ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி
விளையாடிக்கொண்டிருந்தன!

உன் கரையோரக் கண்ணா மரங்களின்
ஆகாயம் பார்த்த வேர்களின் மீது
ஓடி விளையாடிய சிறு நண்டுகள்
பாடசாலை முடிந்து
வீடு நோக்கி ஓடும் சிறுவர்களைப் போல
நீலப் பாவாடையின் குறுக்கே ஓடும்
கோலக் கரை போன்ற உந்தன் கற்களில்
ஒளிந்து கொள்ள இடம் தேடின!

பேட்டுக் கோழியைச் சுற்றித் திரிந்த
கோழிக் குஞ்சுகளாகக் கிடந்த
தீவுக் கூட்டங்களைத் தாயோடு இணைக்கும்
மூல வேராகி, இதயத்தின் மூல நாடியாகி
கல்லில் நாருரித்த எங்களுக்கு
நெல்லில் இருந்து நெருப்புக் குச்சி வரை,
பொருளே இல்லாதவர்களுக்குப்
பொருளாதாரம் காட்டிய பாதை நீ!

நிரை நிரையாகக்
கரையோரங்களின் இருந்த
வெள்ளைக் கற்கள் மட்டுமே
வழி காட்டி விளக்குகளாகப்
பேருந்தின் வாசல்களில் தொங்கியபடி
ஊர் சேரும் வரை.
உயிரைக் கையில் பிடித்த படி
உன் மடியில் ஊர்ந்த நாட்கள்
இன்றும் நினைவுகளில்!

பள்ளிப் படிப்பற்றுத்
துள்ளித் திரிந்த தலைமுறைக்குக்
கல்லூரி காட்டிய உன்னால்,
மூடிக் கிடந்த எங்கள் கதவுகள்
அகலத் திறந்து, நாங்கள்
அகிலம் எல்லாம் பரந்து விட
நீ மட்டும் எரிந்துபோன மெழுகுவர்த்தியாய்,
எல்லோரையும் கரையேற்றி விட்ட
கற்குவியல் பாதையாய் இன்னும்!!!

Saturday 7 May 2011

தாய்மை















பிரபஞ்சத்தின் அந்தகார இருளில்
மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில்
தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று!
பிரம தேவனின் பிரதிநிதியாய்
உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது
ஓட வைக்கும் அற்புதப் படைப்பு!

கருவை வளர்த்தெடுத்து, அதன்
கண்ணையும்,மூக்கையும்
கற்பனையில் வடித்துக்
குருதியில் குளித்துச்
சிலையாய் வடித்தெடுக்கும்
ஒரு சிற்பியின் திறமை!

குழந்தையின் முகம் பார்த்துக்
காலம் காலமாய்க்
கட்டி வைத்த ஆசைகளின்
கனவுக் கோட்டையைக்
கணப்பொழுதில்
உடைத்தெறியும்
ஒரு முனிவனின் முதிர்ச்சி!

நோய் கண்ட வேளையில்,
இரவும் பகலும்,
அரைக்கண் மூடி,
நீ கொள்ளும் அனந்த சயனத்தில்
பாற்கடலில் பள்ளிகொள்ளும்
அந்தப் பரந்தாமனின் பக்குவம்!

பூவைத் துளைத்து அதன்
மகரந்தக் கூட்டுனுள்
முட்டையிடும்
பூச்சியைப் போல்
குழந்தை வளர்ப்பில்
குறுக்கு வழி தேடாத
உன் நேர்மை!

உறங்கும் வேளையில்
நீ பாடும் தாலாட்டின்,
ஏற்ற இறக்கத்தில்
ஒலிக்கும் உன் குரல்
நான் இது வரை
கேட்காத சங்கீதம்!

வளர்ந்த குழந்தைகள்
வேறு வேறு திசைகளில்
விதம் விதமாய்
வாழ்கையில்.
உன் மனம் மட்டும்
வறுமையில் வாடும்
குழந்தையின் பின்னால்!
எனக்குப் புரியாத
சோசலிசம்!

குழந்தையின் வாழ்வே
உன் வாழ்வின்
வரைவிலக்கணமாய்,
பிரதிபலன் பாராது
நீ செய்யும்
சேவைகள் தான்
பகவத் கீதையின்
சாராம்சம்!!!

Sunday 24 April 2011

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!
















விந்திய மலைத்தொடரில்
அந்த அகத்தியமுனிவன்                   
அடிபதித்த நாள் முதலாய்,
இந்திய தேசம்
எங்கள் தேசத்தைத்
தங்கள் தேசத்துடன்இணைத்துக் கொண்டது!

சோழ வள நாட்டின்
சோறுடைத்த வயல்களும்
சேரநாட்டு யானைகளின்
செழிப்பான தந்தங்களும்,
பாண்டிய நாட்டின்
பசுமை மிக்க இலக்கியமும்,
இந்திய தேசத்தின்
சொத்துக்களாகின.

அரை குறையாய் வளர்ந்த
ஆரியமொழி,
எங்கள் தமிழிடம்
கடன் வாங்கித் தன்னை
வளர்த்துக் கொள்ள,
விலை போகாத வேதங்களும்
வேள்விகளும்,சாதிகளும்
எங்கள் சொந்தங்களாகின.

புறமுதுகு காட்டாத
புறநானுற்றுத் தமிழன்
இராமாயணத்தின்
குரங்காக மாற,
கடாரம் வரை
கப்பலோட்டியவன்
பிடாரிக்குக் கோவில் கட்டிக்
கும்பிடுகிறான்.

இந்தியாவின் கரங்கள்
இலங்கை வரை நீண்டு .
நந்திக் கடல் வரைக்கும்
எங்களைத் துரத்தின.
எங்கள் இரத்தத்தின் ரத்தங்களே
இரத்த வெறி கொண்டு
இராமாயணத்தின்
சுக்கிரீவன்களாகின.

இந்திய தேசமே!
இறுதிச் சந்தர்ப்பம்.
துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தொண்டைக் குழியில் நீ!.
ஆணையிட எங்களிடம்
ஆயுதங்கள் இல்லை.

எங்கள் தலை விதியை
எங்களிடம் விட்டு விடு!.
உதவி வேண்டாம்
ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.
உனது மௌனமே
எங்கள் தேசத்தின்
விடி விளக்காய் இருக்கட்டும்!

Saturday 2 April 2011

'தர்மச்சக்கரம்'


















கலிங்கம் வீழ்ந்தது!
குருதி கொப்பழித்த 'தாயா'
நதிக்கரையின் ஓரங்களில்,
கரையொதுங்கிய பிணங்களின்
இரத்த வாடை கலந்த காற்று
வெற்றிச்செய்தியை,
நெற்றியில் சுமந்து வீசியது,
அன்னப் பறவைகள் நடை பயின்ற
ஆற்றங்கரையில்,
ஆந்தைகளும் கழுகுகளும்
குந்தியிருந்தன.
கலிங்கம் வீழ்ந்தது!.
வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு.
வீழ்ந்து கிடக்கும் கலிங்கத்து
வீரர்களின் கோலத்தை,
தோல்வியில் துவளும் கலிங்கத்தின்
குங்குமம் இல்லாத முகத்தைப்
பார்க்கத் துடித்தது
அவன் வக்கரித்துப்போன மனம்.

கலிங்கம் வீழ்ந்தது!
காணுமிடமெல்லாம்,
மரணத்தின் விளம்பரங்கள்.
ஆண்கள், பெண்கள் குழந்தைகள்
ஆயிரமாயிரமாய் வீழ்ந்து கிடந்தன.
ஆயுதம் தாங்காத கைகள்!
கவசம் இல்லாத மேனிகள்!.
கந்தல் ஆடைகளே கவசங்களாக,
கலப்பைப் பிடிகளே ஆயுதங்களாக,
அசோகன் கலங்கினான் .
'அகண்ட' பாரதம்.
அவன் கண்ட கனவு!
நனவாகிய வேளை,
அவன் கண்கள் பனித்தன.

கலிங்கம் வீழ்ந்தது!
மன்னனின் தலைக்குள் ஒரு குரல்!
'மன்னா பற்றைத் துறந்து விடு'.
மன்னனின் நாடி நரம்பெல்லாம்
திரும்பத் திரும்ப,
மந்திரமாக ஒலித்தது அது.
'மன்னா பற்றைத் துறந்து விடு'
சடப்பொருளிலும் ' தர்மா' வைத்
தேடியவனின் குரல்கள்..

காலம் திரும்பியது.,
மீண்டும் ஒரு கலிங்கம்!
'சர்வதேச சமுகம்'
முன்னுரையை எழுதிவைக்க
'முள்ளிவாய்க்கால்'
முடிவுரையை எழுதியது.
முன்னின்று நடத்தியது,
‘'அகண்ட' பாரதம்!

'அவாள்கள்' ஓதிய 'வேதத்தில்'
தர்மச்சக்கரத்தின் அச்சாணிகள்
மீண்டும் கழன்றன.
அழகிய தர்மச்சக்கரம்,
'அகண்ட பாரதக்' கொடியின்
அலங்கோலத்தைப்
பிரதி பலித்தது.

கலிங்கத்துப் போரில்,
பேய்கள் கூழ் காய்ச்சப்
பற்கள் கிடைத்தன.
எங்கள் கலிங்கத்தில் ..
எரிந்த 'இரசாயன' நெருப்பில்
எங்கள் பற்கள் மட்டுமல்ல
எலும்புகள் கூட,
நீறாகிப் போயின.
பதுங்கு குழிகளே எங்கள்
புதை குழிகள் ஆக,
எங்கள் வேலிகளே
எங்களை மேய்ந்தன.

புத்தனின் பல் மட்டும்
பூட்டிய பெட்டியினுள்
பத்திரமாய் இருந்தது.
‘தலதா’ மாளிகையின்
வாசற்படிகளில்.
காவலுக்கு நின்றன
இயந்திரத் துப்பாக்கிகள்!
ரத்தக் காட்டேரிகள் ஆளும்
'இலங்காபுரி'யின்
தேசீய இலச்சனையிலும்
திமிரோடு வீற்றிருந்தது
அந்தத் 'தர்மச்சக்கரம்'

Friday 18 March 2011

எங்களூர்க் கண்ணகி























இந்துமா சமுத்திரத்தின் பேரலைகள்,
ராமர் அணையில் மோதித்தெறித்து,
வெள்ளித்திவலைகளாய், வெண்ணிறமாய்,
எங்கள் ஊரின் சேலைக் கரையாய்
விந்தைகள் காட்டின.
எங்கள் கடற்கரையில் கண்ணகி கோவில்,
ராஜதானியாய் உயர்ந்து நின்றது.
எங்கள் ஊரின் தண்ணீர்க் குடமாய்,
மாலை நேர விளையாட்டு மைதானமாய்,
காலி முகத் திடலாய், பல வடிவம் எடுத்தது.!
விழாக் காலங்களில்,
அன்னதான மடமாய், அங்காடியாய்,
புது வடிவம் எடுக்கும்.

ஆரியக் காற்றின் மூச்சுக்கள் படாத,
அழகான தமிழ்த் தெய்வம் நீயானாய்.
ஆயிரம் உறவுகள் உனக்கு இல்லை.
மனுதர்மம் கூட உன்னிடம் மண்டியிட்டது.
இந்திரனோ அல்லது சந்திரனோ,
உனக்குச் சொந்தமாகவில்லை
கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எச்சமாய்,
நீ தப்பிப் பிழைத்திருக்கிறாய்.
அகிலத்தையே வடிவமைத்த
அதிசயத் தெய்வங்கள் எங்கள் மூர்த்திகள்.
வடதிசை, கீழ்த்திசை வாசல்கள்,
அவர்கள் கோவில்களின் வடிவமைப்புகள்..
அனல் பறக்கும் உனது தமிழ் முகத்தின்
'கனல்' ஊரை எரித்து விடுமாம்.
தென் திசையின் கடல் பார்த்து,
மோனத்தவநிலையில் நீ.

உனது தல புராணமும் தனித்துவமாய்,
கனவுகளில் வந்து கண்ணுறக்கம் கலைக்காமல்,
கலங்கரை விளக்கடியில்,
பேழையாய்க் கிடந்தாயாம்.
ஊரார் உன்னைத் தூக்கி வரப்
பாரமாய்ப் போய் விட்டாயாம் நீ!
அதுவே நீ தெரிந்த இடமாக,
அதிலே உனக்குக் கோவில் கட்டினராம்.
மணி பல்லவம் உனக்குக் கசந்தது.
கோவலனும் மாதவியும் கூடிய வாழ்வின்
பாவத்தின் சாட்சியமாய் மணிமேகலை.
தன்மானத்தின், தமிழ் மானத்தின்,
வீரச்சின்னமாய்,
தமிழ்ப் பெண்ணின் வரைவிலக்கணமாய்,
எங்களூரின் காவல் தெய்வமாய் நீ.

Saturday 26 February 2011

பண்பாடு


காலைக்கருக்கல் மெல்ல விலக
மல்லிகை வாசம் மனத்தை நிறைத்தது.
காக்கைகள் கரையல் காதைக் கிழிக்க
மாட்டு வண்டில்கள் வீதியில் போயின.
கோவில் மணிகள் தாங்களும் ஒலித்துத்
தங்கள் இருப்பையும் காட்டிக் கொண்டன.
பயணக் களைப்புக் கொஞ்சம் குறையத்
தம்பையர் மனமும் ஊருக்கு வந்தது.
இருபது வருஷம் எப்படிப் போட்டுது.
நம்ப முடியாமல் தம்பையர் திகைத்தார்.
ஊரைப்பார்க்க மனசு துடித்தது.
கடலைப் பார்க்கத் தம்பையர் நடந்தார்.

போயிலைத் தோட்டங்கள் தொலைந்து இருந்தன.
புகைக்குடிசைகள் பாதியாய் நின்றன .
பழைய துலாக்கள் பாறிப் போயின.
குழம்பிய படியே தம்பையர் நடந்தார்.
ஆமிக்காரர்கள் மூட்டிய நெருப்பில்
முள்ளிப் பத்தைகள் முடிவைக்கண்டன.
முள்ளிப் பத்தையில் சுட்ட நண்டுகள்
நினைவில் மட்டும் வந்து போயின.
கோவில் மட்டும் வெள்ளையும் சிவப்புமாய்
புதிசு போல நிமிர்ந்து நின்றது.
தென்னை மரங்கள் உயிரை இழந்து
தென்னங்கிளிகளின் வீடுகள் ஆகின.

கடலுக்குள் யாரோ மீன் பிடித்தார்கள்.
வீசிய வலையில் தூசிகள் வந்தன
தடியில் தொங்கிய ஓலையும் பாயும்
காற்றில் அசைந்து வெறுமையைக் காட்டின.
சலித்த உருவம் கரைக்கு வந்தது
'தம்பியை எங்கோ கண்ட மாதிரி'
சுயமாய் வந்தது சுக விசாரணை
'தம்பையன், என்னை மறந்து போட்டியே'
சின்னத்துரையன் சந்தோசப் பட்டான்
'கனகாலம் தம்பி, வீட்டுக்கு வாவன்'
கனிவாய் இனித்தது, அவனது அழைப்பு.

வீட்டில் எந்த மாற்றமும் இல்லை.
அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இருந்தது.
'தம்பி, என்ன தண்ணி சுடுகுதோ?'
அவனது கேள்வியில் அக்கறை தெரிந்தது.
அலட்டி முடிந்து கிளம்பும் நேரம்
அவனது கையில் பாரைக்கருவாடு
'வேண்டாம் சின்னத்துரை'
'தம்பி மறுக்காதை"
பொல்லாத கோவம் அவனுக்கு வருமாம்.
காசைக் கொடுத்தேன். வாங்க மறுத்தான்
அவனது பார்வையில் அக்கினி தெரிந்தது.

திரும்பி நடந்தேன்
'தம்பி, கருவாடு எங்காலை?'
ஆமிக்காரன் படுத்திற பாட்டிலை
கடலுக்கிள்ளை இறங்கேலாதாம்.
சின்னததுரயன் வீட்டிலை கேட்டன்
பட்டினி என்று பல்லவி பாடுறான்.
எந்தன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது
பாரியின் தேர்க்கதை நினைவுக்கு வந்தது
ஆயிரம் தேர்கள் அவனிடம் இருந்தது.
ஒன்றைக்கொடுத்தால் உயிரா போய்விடும்?
என்னிடம் நானே கேட்கின்ற கேள்வி.
எதையோ ஒன்றை இழந்து விட்டேனா?