Saturday 18 June 2011

முள்ளி வாய்க்கால் விட்டுச் சென்ற தடங்கள்

வெள்ளி முளைக்கும் ஒரு மாலை நேரத்தில்
முள்ளிவாய்க்காலின் பரந்த மணல் வெளிகளில்
புதிதாகத் தோன்றியிருந்த குழிகளைக் கண்டு
பூமித் தாயின் முகம் கூடத் தனது முகம் போலப்
பார்க்குமிடமெல்லாம் எரி வெள்ளி விழுந்து வெடித்த
எரிமலைகளின் வாய்களைப் போல, வட்டமாகத்
தனது முகத்தைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல,
எண்ணிய படியே தன் பாதையில் நகர்ந்தது நிலவு!

ஈராண்டு காலமாய், இந்தப் புதை குழிகளுக்குள்
மறைந்து கிடக்கும் கதைகளும், மனிதக் கூடுகளும்
துரத்தித் துரத்தி வேட்டையாடப் பட்ட அவர்களின்
சரித்திரமும், செத்துப் போன நினைவுகளும்
புதையுண்டு கிடக்கும் புனிதக் கனவுகளும், ஒரு நாள்
விதையில் இருந்து துளிர் விடும் மரங்களாய்,
வளரும் என்ற கனவில், மனதில் விளக்கேற்றி
விழி கனக்க நினைத்திருக்கும் ஊரே முள்ளிவாய்க்கால்!

பிறக்கும் முன்னே எழுதப் பட்ட விதியாகக்
கருவிலேயே எங்கள் தலைவிதி எழுதப் பட்டு விட
தமிழ்த் தாயின் வயிற்றில் வளர்ந்த சாபத்திற்காகத்
தனது காலில் தலை நிமிர்த்து வாழ நினைத்த பாவத்திற்காக,
உலகின் விடுதலை கேட்கும் உன்னத இனங்களின்
உயிர் மூச்சை அடக்கி வைக்க, ஒரு உதாரணத்திற்காகப்
பாரில் பலம் மிக்க நாடுகள், படைப்பலம் அளிக்கச்
சீராக நடத்தப் பட்ட நாடகமே முள்ளி வாய்க்கால்!

நீதியின் காவலர்களே, நடுவு நிலை தவறவும்,
போதி மரத்துப் புத்தன் பூவேந்தி ஆசீர்வதிக்கவும்,
மருத்துவ மனைகளும் மறை முக இலக்குகளாக.
பணி செய்த மருத்துவரும் பயங்கர வாதிகளாக,
மணிக்கு மணி மாறிய மக்களின் எண்ணிக்கையும்,
பிணிக்கு மருந்தின்றியும், பசிக்கு உணவின்றியும்
தனித்துப் போன உறவுகளுக்கு அனுப்பி வைத்த
'வணங்கா மண்' கப்பலையும், வெட்கமின்றி
நடுக் கடலில் திருப்பி விட்ட நய வஞ்சகமும்
நடத்தப் பட்ட இடமே இந்த முள்ளிவாய்க்கால்!

போராளிகளின் சரணடைவும்,அவர்களது மரணங்களும்
தீராத வடுக்களாக, மனதில் கீறி விட்ட கல் வரிகளாய்,
நீர் நிறைந்த சகதிகளின் ஓரங்களில், மண்ணில் புதைந்து
சீருடை களைந்த நிலையில், இரத்தம் கண்டிய முகங்களின்
வெறுமையும், வெற்று வாக்குறுதிகளின் சாட்சியத்தில்
அறுந்து போன சொந்தங்களின் சாட்சி சொல்லும்
கோரக் காட்சிகளும், கொடுமையின் உச்சத்தில்
வேரறுந்து போன போராட்டத்தின் களமே முள்ளிவாய்க்கால்!

திரும்பத் திரும்பப் உயிர் துளிர்க்கும் ':பீனிக்ஸ்' பறவையாய்
அரும்பில் இருந்து வளர்ந்து வரும் ஆலமர விழுதுகளாய்,
தாங்கிப் பிடித்திருப்போம், இந்தக் கொடிய நினைவுகளை!
தூங்கட்டும் அமைதியாக ,எங்கள் அணைந்து போன தீபங்கள்!
என்றோ ஒரு நாள் எங்கள் பொழுதும் விடியட்டும்
அன்றேல் விடியாது பேரிருட்டாய், காரிருளாய் மாறட்டும்!
ஆனாலும் எங்கள் நினைவுகளில்,ஏதோ ஒரு விதத்தில்
இணைந்திருக்கப் போகும் இடமே முள்ளி வாய்க்கால்!!!

1 comment:

 1. தூங்கட்டும் அமைதியாக ,எங்கள் அணைந்து போன தீபங்கள்!
  என்றோ ஒரு நாள் எங்கள் பொழுதும் விடியட்டும்
  அன்றேல் விடியாது பேரிருட்டாய், காரிருளாய் மாறட்டும்!
  ஆனாலும் எங்கள் நினைவுகளில்,ஏதோ ஒரு விதத்தில் இணைந்திருக்கப் போகும் இடமே முள்ளி வாய்க்கால்!!!

  இன்று தான் கண்டு கொண்டேன். அழகாய் கோர்த்து எழுத வருகிறது தொடருங்கள்.

  ReplyDelete