Saturday 21 July 2012

ஆச்சியும் தேசிக்காயும்



அன்றைக்குச் சனிக்கிழமை!

ஆச்சிக்குக் கொஞ்சநாளா மனம் சரியில்லாமல் இருந்தது!
மாமா, ஆச்சிக்கு ஒரே மகன். அவரும் கொழும்பில இருந்து வந்திருந்தார். அவர் வரப் போறது, என்டாலே ஆச்சிக்கு, ஒரு பத்து வயது குறைஞ்சு போயிரும்! இவ்வளவுக்கும் மாமா, ஒரு ஆம்பிளை என்டதைத் தவிர வேற ஒன்டுமே பெரிசா, வெட்டி விழுத்தினதா, எனக்கு நினைவில் இல்லை,

மாமாவும், ஆச்சி வெங்காயக் கூடையும், பாயும் இழைச்சுச் சேர்த்த காசுக்கு ஒரு வழி பண்ணும் வரையும் கொழும்புக்குத் திரும்பிப் போக மாட்டார்!
மாமா செய்த பெரிய காரியங்கள் பற்றி ஆச்சிக்கு எப்போதும் பெருமை!
அதில் ஒன்றை, மட்டும் சொல்லிக் கதையைத் தொடர்கிறேன்!

அந்தக் காலத்தில, எங்கள் ஊரில் ஆம்பிளைப் பிள்ளை, பிறந்தால், உலக்கை எறிவது வழக்கமாம்! நான் பிறந்த செய்தி கேட்டதும், மாமா ஒரு உலக்கையை எறிந்தாராம். அதுவும் இரண்டு, மூண்டு வளவு தாண்டிப் போய் தூரத்தில் விழுந்ததாம். ஆச்சி, வளவுகள் கொஞ்சம் சின்னனா இருந்திருக்கும் போல என்று நான் சொல்ல, ஆச்சிக்குப் பெரிய கோபம் வந்தது எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது!
ஆச்சிக்குக் கொஞ்சம் சந்தோசம் வரட்டும் என நினைத்து, எனது ஒன்று விட்ட அக்காவுக்கு, முதல் ஆம்பிளைப் பிள்ளை பிறந்த போது, நானும் ஒரு உலக்கையை எடுத்து, 'ஜவலின்' எறியிற மாதிரி எறிய, அது அடுத்த வீட்டுக் கிணத்தில குளிச்சுக் கொண்டிருந்த, அக்காவின்ர தலைக்குக் கிட்ட போய், கிணத்தடியில விழுந்திட்டுது! பிறகு அந்த மாமா, என்னை அடிக்கத் திரிய, ஆச்சியிடம் அடைக்கலம் கேட்க வேண்டி வந்திட்டுது! அதுக்குப் பிறகு, ஆச்சி இந்த உலக்கைக் கதையைக் கதைக்கிறது குறைவு!

மாமா கடற்கரையிலிருந்து வாங்கின 'ஓரா' மீன்களை, பனை ஈக்கில் கோர்த்தபடி, ஆச்சியிட்டைக் குடுத்து, இதை இண்டைக்குக் காச்சித் தாணை, எண்டதும் ஆச்சி மீனைக் கழுவத் தொடங்கினா! வழக்கமாக, அந்த முருக்க மரத்துக்குக் கீழதான், அந்த மீன் வெட்டுற கத்தி, ஒரு பலகையில், செங்குத்தாகப் பூட்டப்பட்ட படி இருக்கும்! மீனைச் சுத்தப் படுத்தியபின், அந்தத் தண்ணியை, ஆச்சி அந்த முருக்க மரத்தடியில் எத்துவது வழக்கம்! அண்டைக்கும் வழக்கம் போல, தண்ணியை வீசியபோது, அந்தக் கறுத்தப் பூனையும், வழக்கம் போல அந்த இடத்துக்கு வந்து, தனது தினசரிக் குளிப்பை முடித்துக் கொண்டது! அப்போது தான், ஆச்சியின் கண்ணில், அந்தத் தேசிக்காய், கண்ணில் பட்டிருக்க வேண்டும்!

அண்டைக்குப் பின்னேரம், ஆச்சியும் மாமாவும், அடிக்கடி குசு குசுத்துக் கொண்டார்கள்! நானும், மாமா, ஆச்சியிடம் பணம் பறிக்கிறதுக்கு, என்னவோ கதையளக்கிறார் என, அதனைப் பெரிது படுத்தவில்லை! எனது கவனம் முழுவதும், ஆச்சி அண்டைக்கு வைக்கப் போகும் மீன் குழம்பிலேயே இருந்தது! மத்தியானம், ஆச்சி வைச்ச மீன் குழம்போடையும், பருப்போடையும், சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போய் விட்டேன்! நல்ல நித்திரை போல கிடக்கு! முழிக்கும் போது, பின்னேரமா, அல்லது விடியக் காலமையா என்று தெரியாமல் இருந்தது! ஆச்சி, அரிக்கன் லாம்புச் சிமினியைத் துடைக்கிறதைப் பார்த்துப், பின்னேரம் தான் என உறுதிப் படுத்திக் கொண்டேன்!

கொஞ்ச நேரத்தில, வீட்டுக்குக் கொஞ்சம் வயசு போன ஆக்கள் வரத் துவங்கிச்சினம்! அதில் ஒருவரை, எனக்கு, நன்றாகத் தெரியும்! அவரும், அவரோட வந்த ரெண்டு பேரும், வீடு வளவெல்லாம், சுத்திச் சுத்தி என்னவோ தேடின மாதிரிக் கிடந்தது. பிறகு, ஆச்சி கொடுத்த சுளகில, அமெரிக்கன் மாவால, இரண்டு பொம்மை மாதிரி உருவங்கள் செய்து, அதுகளுக்குக் கண்ணும், மூக்கும் கீறி, ஒரு மீசையும் கீறிச்சினம்! எனக்கு மெல்ல,மெல்ல என்னவோ விளங்கின மாதிரி இருக்க, ஆச்சியைக் கூப்பிட்டேன்! ஆச்சியும், சின்னப் பிள்ளையள் எல்லாம், இதுக்குள்ள வரக் கூடாது, என்று கண்டிப்பாகச் சொல்லிப் போட்டா! சரி, என்ன நடக்கிறது என்று பாப்பம் என நினைத்துக் கொண்டு நானும் ஒரு மூலைக்குள்ள ஒதுங்கிக் கொண்டேன்! அப்போது மாமாவும், ஒரு பெரிய நீத்துப் பூசணிக்காயோட வந்து சேர்ந்தார்!

ஒரு பெரியவர், மிகவும் கணீரென்ற குரலில், ' மூன்றாம் பருவமடி! காளி! காளி! என்று ஏதோ பாடத் தொடங்கினார்! இவர் தான், ஊரில ஆருக்கும், பாம்பு அல்லது புலிமுகச் சிலந்தி கடித்தால், 'பார்வை' பார்க்கிறவர்! எல்லோரும் பயத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் உரத்த குரலில், ஏதோ பாடிக் கொண்டேயிருந்தார்! அவரது வாயிலிருந்து, பாட்டுடன் சாராய நெடியும் வந்து கொண்டிருந்தது!பிறகு, கொஞ்சம் வேப்பமிலையை, எடுத்துக் கொண்டு வளவுக்குள் ஓடினார்! அவருக்குப் பின்னால, அவற்றை இரண்டு உதவியாளர்களும் ஓட, மாமாவும், அரிக்கன் லாம்பையும் தூக்கிக் கொண்டு அவர்களுக்குப் பின்னால் ஓட, நானும் ஓடினேன்! பின்னர் ஒரு இடத்தைக் காட்டி, இஞ்சை, இஞ்சை என்று கத்தினார்! அவரோட வந்த ஆக்களும், அலவாங்காலும், மண் வெட்டியாலும் அங்கே கிண்டினார்கள்! உடனே பெரியவர், இஞ்சயில்லை இன்சையில்லை எண்டு சொல்லி இன்னொரு இடத்தைக் காட்டினார்! பிறகு அதுகும் இல்லையென்று, மூன்றாவது இடத்திற்கு ஓடினார்! காளிப் பாட்டு மட்டும், அவரது வாயிலிருந்து தடையில்லாமல் வந்து கொண்டே இருந்தது. அத்துடன் கொஞ்சம் நுரையும், வந்து கொண்டிருந்தது! அவருடன் வந்தவர்கள், அங்கு முதலில் மண் வெட்டியாலும், பின்னர் இன்னொருவர் ஒரு வாளியால் தண்ணீரூற்ற, பின்னர் அலவாங்காலும் கிண்டினர்! கடைசியாகப் பெரியவர், இது தான், இது தான் என்று கூச்சலிட, உதவியாளர்கள், ஒரு செப்புத் தகடு ஒன்றை, அந்தக் கிடங்கிலிருந்து வெளியே எடுத்தனர்! ஆச்சியின் முகத்திலும், மாமாவின் முகத்திலும் ஒரு சிரிப்பு, ஒரே நேரத்தில் வெளிப்பட்டது! அந்தச் செப்புத்தகட்டில், சூரியன், சந்திரன், மற்றும் எனக்குத் தெரிந்திராத பல கிரகங்களின், படங்களும் கீறப் பட்டிருந்தது!

பின்பு பெரியவர் அமைதியானார்! அந்த நீத்துப் பூசணிக்காயை, இரண்டாகப் பிழந்து அதற்குக் குங்குமப் பொட்டும் வைத்தார்! பின்னர், சுளகில் இருந்த இரண்டு மாவால் செய்யப்பட்ட உருவங்களுக்கும், கறுப்புப் புள்ளிகள் போட்டு, அதைக் கொண்டு போய்க் கடலில் போடும்படி மாமாவிடம் கொடுத்தார். மாமாவும், பய பக்தியாக, அந்தச் சுளகுடன், நீத்துப் பூசணிக் காயையும், வாங்கிக் கொள்ள, சில ரூபாய் நோட்டுக்களும் கை மாறின!

மறு நாள், ஆச்சி மிகவும் சந்தோசமாய் இருந்தா! அதைப் பார்க்க எனக்கும் சந்தோசமாக இருந்தது! ஆச்சியும் அந்தத் தேசிக்காயால தான் இவ்வளவு பிரச்சனையும் எண்டு சொல்ல, எனக்குத் திக்கெண்டு இருந்தது! ஏனெண்டால் மூண்டு நாளைக்கு முதல், நானும் பேரின்பனும், கோயிலடியில விளையாடேக்க, கோயில் குப்பையில் அது கிடக்க, இருவரும் அதை எறிந்து, பந்து விளையாடிய போது, முருக்க மரத்தடியில் விட்டு விட்டோம்! அதில ஒரு சின்ன ஓட்டையும், இருந்த படியால், வைரவ சூலத்தில், குத்தி வைத்திருந்ததாக இருக்கலாம்!

அப்படியானால், அந்தச் செப்புத் தகடு? மில்லியன் டொலர் கேள்வி!

இன்று வரை எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை! நானும் தேசிக்காய் பற்றி, இன்று வரையும் வாய் திறக்கவில்லை!

No comments:

Post a Comment