Saturday 11 August 2012

குரு மூர்த்தி



நீண்ட காலங்கள் கடந்து போய்விட்டாலும், குருமூர்த்தியின், முகம் மட்டும் இன்னும் மனத்திரையை விட்டு அகன்ற பாடாயில்லை. இவ்வளவுக்கும் குருமூர்த்தி, ஒரு பிரபலமான மனிதனோ, அல்லது எம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தேச வழமைகளின் படி, ஒரு சாதாரண மனிதனோ கூட அல்ல.
சுத்தமான, கலப்படமில்லாத தமிழில் சொன்னால், ஒரு விசரன்.
நடராசா அண்ணையின்ர, கன்ரீனுக்கு  முன்னால, இருந்த மரத்துக்குக் கீழ, இருந்த படி, ஒரு இருபது பக்க, அப்பியாசக் கொப்பியில், ஏதாவது எழுதியபடி இருப்பான். ஆனால், வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியதை, நாங்கள் ஒருவரும் கேட்டது, கிடையாது. ஒரு வேளை, ஊமையாக இருக்கலாம் போலும் என நாங்கள் நினைத்து, அவனை, நாங்கள் கரைச்சல் படுத்துவதும் கிடையாது!
அன்றைக்குச் சனிக்கிழமை!
விடியக் காலமையே, கே.எஸ்.எஸ், அவர் தான் எங்கட போர்டிங் மாஸ்டர், நடந்து வந்தது, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் எங்களுக்கு இருந்தது!
ஏதாவது, பெரிய விசேசம் எண்டால் தான், அவர் அப்படி வருவதுண்டு. கையில். பிரம்பொண்டும், மறைந்தபடி இருந்தது!
எங்கடா, அந்த மூதேவி?
ஆரு, சேர்?
அவன் தான்ரா, அந்தக் கழுவாஞ்சிக் குடியான்!
விடுதியின் மேல் தட்டுக்கு, வேர்க்க, விறுவிறுக்க ஓடிப்போனால், ;கிங்க்ஸ்ரன்' என எம்மால், செல்லமாக விழிக்கப்படும், கழுவாஞ்சிக் குடியான், மூன்று தடித்த. காச்சட்டைகளைப் போட்டபடி, ஏற்கெனவே ஆயத்தமாக நின்றார்!
என்ன நடந்தது, கிங்க்ஸ்ரன்?
மச்சான், ராத்திரி ரீகலுக்குப் படம் பார்க்கப் போகேக்கை, இருட்டுக்குள்ள போய், ஒரு கதிரையில இருந்திட்டன். பக்கத்தில, ஒரு கிழடொண்டு இருந்து படம் பாத்தது! படத்தில, வந்த பகிடிக்குச் சிரிக்காம இருந்துது, மச்சான்!
நான், ஒரு பகிடி வாற நேரம், அதுகின்ர துடையில தட்டி,
அப்பு!  இது பகிடி, எண்டு சொல்லிப் போட்டன்!
பிறகு, இன்டர்வலுக்கு வெளிச்சம் வரேக்க பாத்தா, அது நம்மட சுப்பரடா!
அதற்கு மேல், எமக்கு மேலதிக விளக்கம் வேண்டியிருக்கவில்லை!
ஒரு மாதிரித் 'தேவாரம்' பாடித் தேத்தண்ணியும், குடிச்சிட்டு, கன்ரீனடிக்குப்   போனால், குருமூர்த்தி ஒரு காகிதத்தை நீட்டினான். அதில், இப்படியான, பகிரங்கத் தண்டனைகள், எதிர்மறையான விளைவுகளைத் தரும்' என எழுதியிருந்தது! அது தான், அவன் ஒரு விசரனல்ல, என என்னை நம்ப வைத்தது.
பின்பு, கணிதத்தில் வரும், இரு படிச்சமன்பாடுகள், சினை காணுதல், போன்றவற்றில் வரும் கடுமையான, கணக்குகளைக் கொடுத்தால், செய்து தருவான். அவனுக்குள், மறைந்திருந்த நகைச் சுவை, உணர்வும் சில எதிர் பாராத நேரங்களில், வெளிப்படுவதுண்டு.
ஒரு முறை, குருமூர்த்தி, சில சமன்பாடுகளைத் தந்து, 'பரவளைவு' கீறும்படி சொன்னான். நாங்களும், கீறிக் கொண்டு போய்க் காட்ட, ஒருவன் கீறிய 'பரவளைவைப்' பார்த்துக் குருமூர்த்தி, விழுந்து, விழுந்து சிரித்தான்! குருமூர்த்தியைச் சிரிக்கப் பண்ணியதைக் கண்டு, எங்களுக்கு மிகவும் சந்தோசம், எண்டாலும் கொஞ்சம் பயமும் பிடித்துக் கொண்டது!
பின்பு ஒரு பேப்பரில, 'கிழவியளின்ர மாதிரிக் கிடக்கு' என்று எழுதிக்காட்ட நாங்களும், சிரித்து வைத்தோம், ஆனால், அப்போது, அந்தப் பகிடி வடிவாக விளங்கியிருக்கவில்லை!  
நாட்கள் போக, குருமூர்த்தியும், எங்களுக்கு வேண்டப் பட்டவனாகி விட்டான்!
அட்சர கணிதத்திலிருந்து , ஆவர்த்தனப் பாகுபடு வரை, அவன் அறிந்திருந்தான்!
நாங்களும், நாளடைவில், நடராசா அண்ணையின்ர 'லைற் ரீ' வாங்கிக் குடுத்தால், வாங்கிக் கொள்வான்! அதுக்கு மேல, எங்கட அந்த நேரப் பொருளாதாரமும், இடம் கொடுக்காது!
சில வேளைகளில், மிஞ்சிய சாப்பாட்டை, 'பண்டா' கொண்டு வந்து கொடுத்தால் மட்டும், குருமூர்த்தி சாப்பிடுவான்.
'பண்டா' ஒரு சகல கலா வல்லவன். விடுதிச் சமையல், தொடக்கம், 'வாட்டர் பம்ப்' வேலை செய்யாவிட்டால், பைப்புக்குள் தண்ணீர் விட்டு, ஸ்டார்ட்' பண்ணுவது, மற்றும் காவல் வேலை, வரை செய்வான்! அவனுக்கும், குருமூர்த்திக்குமிடையே , ஒரு விதமான பிணைப்பு, எப்போதும் இருந்தது!
எங்களுக்கும், பண்டாவுக்கும் இடையில், ஒரு 'ரகசியமும்; இருந்தது!
விடுதியில், சாப்பாடு சரியில்லா விட்டால், ஒளிச்சு 'மொக்கங்கடை' போனால். பண்டா, ஒருவருக்கும் தெரியாமல், கேற்றைப் பூட்டாமல் விட்டிருப்பான். நாங்கள் திரும்பி வந்ததை, உறுதிப் படுத்தியபின், எனக்கு நித்திரை வாறான்' என்று கூறியபடி படுக்கப் போவான்.
ஒருநாள், பண்டாவின் நெருங்கிய உறவினர் ஆரோ, செத்துப் போய் விட்டதாகத் தகவல் வந்து, பண்டா போகவேண்டி வந்து விட்டது.
அவனிடம், பணம் இருக்கவில்லை. 'பண்டா' ஒரு நாளும், சேமித்து வைத்ததில்லை. எங்களிடமும், காசு அதிகமாக இருப்பதில்லை.
போர்டிங் மாஸ்டராலும்,     ஒரு 'ரிற்றேன் ரிக்கற் '    மட்டும் தான் குடுக்க முடிஞ்சுது.
அண்டைக்கு இரவு, பண்டா வழக்கம் போல, குருமூர்த்தியிடம், இரவுச் சாப்பாடு, கொண்டு போனான்.
'பண்டா, ஊருக்குப் போய் வாறது' எண்டு தனது தமிழில் குருமூர்த்தியிடம் சொன்னான்.
குருமூர்த்தியும், பண்டாவிடம், ஒரு என்வலப்பைக் கொடுத்து விட்டுச் சிரித்தான்.
அதனுள்ளே, முன்னூறு ரூபாய்' நோட்டுக்களாக இருந்தது.
அன்று தான், பண்டா, வாய்விட்டு அழுததை, முதன் முதலாகக் கண்டேன்!

No comments:

Post a Comment