Tuesday 29 November 2011

வேர்களை இழந்து வரும் விழுமியங்கள்


அது ஒரு கோடைகாலத்தின் மாலை நேரம். அன்றைய சூரியன், பகல் நேரத்துச் சந்திரன் போல வானத்தில் வெள்ளயாகத் தன்னை, அடையாளம் காட்ட எத்தனித்துக் கொண்டிருந்தான். கலங்கிய வண்டல் மண்  கலந்து  மஞ்சள்  நிறத்துடன் 'தேம்ஸ் நதி' அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.  சந்திரன், அந்த நதிக்கரையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதிரையில் இருந்தவாறே, கலங்கியிருந்த நதியின் அசைவுகளை அவதானித்துக் கொண்டிருந்தான்.  அவனது முகத்தில், அடர்த்தியாகத் தாடி வளர்ந்திருந்தது. அவனருகில் ஒரு சிகரெட் பெட்டியோன்று, தனது வாயை அகலத் திறந்த படி, ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கச் சுருள், சுருளாகப் புகை வளையங்கள், அவனது வாயாலும் மூக்காலும் வந்து கொண்டிருந்தன.  அங்கு வந்த சில ஜப்பானியர்களுக்கு, அவனது இருப்பு ஒரு இடைஞ்சலாக இருந்தது.  'டவர் பிரிட்ஜை' படமெடுக்க, சரியான 'ஆங்கிள்' கிடைத்த போது, இடை நடுவில் நந்தியாக அமர்ந்திருந்த அவனது தோற்றம், லண்டனைப் பிரதி பலிக்கும் என்று  அவர்கள் நினைக்கவில்லைப் போலும். .ஒரு முற்றுமுணர்ந்த ஞானியைப் போல, அவர்களது மனதில் உள்ளதை உணர்ந்தவனாகச் சற்று விலகி அமர்ந்தவன், படமெடுப்பு ஆராவாரம் அடங்கியதும் , திரும்பவும் தனது பழைய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.
சந்திரன் நன்றாகப்  படித்தவன். அவனது தந்தையார் ஒரு தமிழாசிரியர். 'அடுத்த சம்பளம் வரட்டும்' என்று தேவைகளைப் பிற்போடும் நிலையில் வாழ்ந்தாலும், கல்வியே மூலதனமென நினைக்கும் சராசரி யாழ்ப்பாணத்து தமிழாசிரியர் வகையைச் சேர்ந்தவர். ஒருவாறு, சந்திரனை நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்த்து விட்டார்.ஆரம்பத்தில், விடுதி வாழ்க்கை சந்திரனுக்குப் பிடிக்கவில்லை. அங்கு தொங்கிய அந்தப் பழைய தண்டவாள மணியைப் பார்க்கும், ஒவ்வொரு தடவையும் ஏனோ அவனுக்குச் சிறைச்சாலையின் ஞாபகம் தான் வரும். இவ்வளவுக்கும் அவன் சிறைச்சாலையை ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை. நாளடைவில் விடுதி வாழ்க்கையின், நெளிவுசுளிவுகள் தெரிந்த போது, விடுதி வாழ்க்கை அவனுக்குப் பழகிப் போய் விட்டது மட்டுமல்ல,  அது தந்த சுதந்திரமும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த விடுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், மாணவர்களை விடுதியிலிருந்து நல்லூர்க்  கந்தசாமி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போவது வழக்கமாக இருந்தது. பனிக் குளிரிலும். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, குளித்து வேட்டியையும் கட்டிக் கொண்டு வரிசையில் நடந்து செல்ல வேண்டும். உணர்ச்சிகள் மெல்ல, மெல்ல முகிழ் விடுகின்ற வயதில் அவன் அப்போது இருந்தான்.
இந்தக் காலத்தில் தான் அவனுக்குத் தேவகியின் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். சில வெள்ளிக்கிழமைகளில், அந்த அழகிய தென்னம்பிள்ளை வீட்டின் வாசலில், அவளை அவன் கண்டிருக்கின்றான். ஆட்களைப் பிரமிக்க வைக்கும் அழகில்லை என்றாலும், அவளது முன் பற்கள், இரண்டுக்குமிடையில் இருந்த இடைவெளி அவனுக்குப் பேரழகாகத் தெரிந்திருக்க வேண்டும். கோவிலிலிருந்து திரும்பி வரும்போது,  அவள் கல்லூரிக்குப் போவதற்கான, சீருடையுடன் நிற்பதையும் சந்திரன் அவதானித்திருக்கின்றான்.சில வேளைகளில், அவனுக்காகவே தேவகி காத்திருப்பது போல நினைத்தாலும், அப்படி ஒருநாளும் இருக்காது என்று அவனது ஏழாவது அறிவு அவனை எச்சரிக்கை செய்தது. சில வேளைகளில் தேவகி, தன்னைப்பார்த்துச் சிரித்தது போலவும் இருக்கும். அந்த நாட்களில், நல்லூர் முருகனும் அவனை மட்டும் பார்த்துச் சிரிப்பது போல அவனுக்குத் தெரியும். உயர் தரப் பரீட்சை, நெருங்கியபோது தனது கவனம் முழுவதையும் படிப்பிலேயே  செலுத்தினான். கல்வி என்னும் வேள்வித்தீயில், தன்னை ஆகுதியாக்கினான் என்று கூடச் சொல்லலாம்.
பரீட்சை முடிவுகள் வந்த போது, மற்ற விடுதி வாசிகளைப் போல அதிகாலையிலேயே கல்லூரிக் காரியாலயத்தின் வாசற்படிகளில் காத்திருந்தான். கல்விக்குள்  அரசியலைப் புகுத்திய அந்தத் தரப் படுத்தல் முறை அறிமுகப் படுத்தப் பட்டுச்  சில வருடங்கள் தான் இருக்கும். பானையில் இருந்தது அப்படியே அகப்பையில் வந்திருந்தது. ஆனால் அவன் எதிர் பார்த்திருந்த பொறியியல் துறை அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனிலும் பார்க்க, அவனது திறமை மீது  மற்றவர்கள் தான் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். விஞ்ஞானத் துறையில் தான் அவனுக்கு இடம் கிடைத்திருந்தது. கோயில், குளமெல்லாம் ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் பேராதனை நோக்கிய பயணத்தில் கவனத்தைச் செலுத்தினான்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மார்க்கஸ் பெர்னாண்டோ மண்டபத்தில்  தங்குமிடமும் கிடைத்தது. அந்தக் காலத்தில் தான்  அவனுக்கு அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஒரு காலத்தில் அவனது கனவுக் கன்னியாகிய அதே தேவகி, தனது நண்பிகளுடன் நடந்து போவதைக் கண்டான் . கழுதைகள் கூட மினுமினுக்கும் அந்தக் இளமைக் காலத்தின் வயதில், தேவகி  ஒரு தேவைதையாக அவன் கண்களுக்குத் தெரிந்தாள். அருகில் வந்து, நினைவிருக்கின்றதா என்று கேட்டாள். அவனது வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளுக்குப் பதிலாகக் காற்றுத் தான் வெளியில் வந்தது. தலையை மட்டும் ஆட்டினான்.எனது பெயர் தேவகி என்றாள். தானாக வந்து அவள் அறிமுகம் செய்து கொண்ட விதம் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில், அவள் ஏறி நிற்பது போல அவனுக்குத் தெரிந்தது. நாக்குத் தடுமாற நா ...ன் சந்திரன் என்று உளறினான். அவ்வளவு தான், அவர்களுக்குள்  நடந்த முதல் உரையாடல். சந்திரன் தனக்கு இறக்கைகள் முளைத்து விட்டதாக உணர்ந்தான், அதைத் தொடர்ந்து அவர்களின் சந்திப்புக்கள் அவ்வப்போது நடந்தன. இருவரும் ஒருவரையொருவர் விரும்பினாலும், வெளிப்படையாக அதை வெளிப்படுத்தத் தயங்கினார்கள்.
காலம் மட்டும் எவருக்காகவும் காத்திருக்கவில்லை. அவர்களது  அவ்வப்போதைய உரையாடல்களிலிருந்து தேவகி மருத்துவத் துறையில் படிக்கிறாள் என்றும், இரத்தினபுரியில் மாமாவின் கடையிருக்கின்றது என்றும், அங்குதான் உயர்தர வகுப்புப் பரீட்சை எடுத்ததாகவும். போட்டியில்லாததால், இலகுவாக மருத்துவத் துறை கிடைத்ததாகவும் தெரிந்தது. அவனிலும் பார்க்க, அவளுக்குப் புள்ளிகள் மிகவும் குறைவாகவே கிடைத்திருந்தது. முறைப்படி பார்த்தால்  அவனுக்குக் கோபம்  வந்திருக்க வேண்டும். பதிலாக அவளது குறுக்கு வழி சென்ற  கெட்டித் தனத்தை எண்ணி, மகிழ்ச்சியே ஏற்பட்டது. தானும் அப்படி வேறொரு பிற்போக்கான இடத்திலிருந்து  ஏன் சோதனை எழுதவில்லை  என்று தன் மீது தான் கோபம்  வந்தது.
மூன்று வருடங்களின் முடிவில் கையில் ஒரு மட்டை கிடைத்த போது  உலகத்தின் உச்சியின்  மேல் ஏறி நிற்பதாக உணர்ந்தான். அந்த உணர்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.     வீட்டில் ஒரு தங்கை இருப்பதை அம்மா அடிக்கடி நினைவு படுத்தத் தொடங்கினாள். உலகத்தில் எங்கு பிறந்தாலும், இந்த யாழ்ப்பாணத்தில் வந்து பிறக்கக் கூடாது. என்று அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொள்வான். அன்போடு சேர்த்து, பொறுப்புக்களையும் ஊட்டிவிடுகின்றார்களே என்று எண்ணுவான். அப்போது தான் அந்த நண்பனின் ' லண்டன்' கடிதம் வந்தது.  நீ, ஊரில இருந்து, ஒன்றையும் வெட்டி விழுத்த ஏலாது மச்சான்,  இஞ்ச வெளிக்கிட்டு வா' என்று எழுதியிருந்தான்.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இதைச் சொன்னபோது, ஆரம்பத்தில் கொஞ்சம் நிலை குலைந்து போனாலும், நாட்டு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒருவாறு சம்மதித்தார்கள். ஊரில் தான் செய்திகள், எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன? தேவகிக்கும் தெரிந்திருக்க வேண்டும். தன்னை அவசரமாக வந்து சந்திக்கும் படி கூறி ஒரு கடிதம் அனுப்பியிருந்தாள். நல்லூர்க் கந்தசாமி கோவிலில் அடுத்த வெள்ளிக்கிழமை சந்திப்பதாகப் பதிலனுப்பினான். அவனைக் கண்டதும் தேவகி அழுதாள். தன்னை விட்டு விட்டுச் சந்திரன் ஓடிப் போகப் போவதாகக் குற்றம் சாட்டினாள். தனது படிப்பு முடிந்ததும், தன்னையும் லண்டனுக்குக் கூப்பிட வேண்டும் என்று சத்தியம் பண்ணித் தரவேண்டும் என்று அடம்  பிடித்தாள். சத்தியமெல்லாம் எதற்குத் தேவகி? நான் தான் சொல்லுறேனே! என்மீது உனக்கு நம்பிக்கையில்லையா? என்று கூறிப் பார்த்தான். ஆண்களை நம்ப முடியாது, சந்திரன். அவனுக்கு, அவன் மீதே கோபம் வந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், சரி. சத்தியமா உன்னைக் கூப்பிடுவான், போதுமா? என்றான். இல்லை, கற்பூரம் மீது சத்தியம் பண்ணித் தரவேண்டும் என்று பிடிவாதமாக நின்றாள். இங்கு சத்தியம் பண்ணுகிறீர்கள் தானே, அதைச் சாமிக்கு முன்னால் செய்தாலென்ன? என்று கேட்டாள். எங்கிருந்து தான் அந்த அசாத்தியத் துணிவு வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. தர தரவென்று அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, கோவிலுக்குள்ளே போனான். எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தின் மேல் கைவைத்து, அவளை அங்கு கூப்பிடுவதாகச் சத்தியம் செய்து  கொடுத்தான். அவனது உடம்பு முழுவதும் நன்றாக வேர்த்திருந்தது.
ஒருவாறு  லண்டன் 'ஹீத்ரு' விமான நிலையத்தில் வந்து இறங்கியாயிற்று. நண்பன் வெளியில் காத்திருப்பான். அரை மணித்தியாலத்தில் வெளியே போய் விடலாம் என எண்ணியபடி ' குடிவரவு ' பலகை காட்டிய வழியைப் பார்த்து நடந்தான். அந்த நாளைய கறுத்த நிறப் பாஸ்போர்ட் தான் அவனது. 'சோஷலிச ஜனநாயகக் குடியரசு' என்று உலகத்தில் அப்போதிருந்த அத்தனை. ஆட்சியமைப்பு முறைகளும் அதில் எழுதப் பட்டிருந்தன.  அப்போது தான் அதை வாசித்துப் பார்த்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அதைக் கண்டதும், அந்தக் குடிவரவுப் பகுதிக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த ஒருவர், அவனை அருகிலிருந்த கதிரைகளில் ஒன்றைக் காட்டி உட்காரும்படி சொன்னார். என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன் தான் என்று மனதினுள் நினைத்துக் கொண்டான். தனக்குத் தரப்பட்ட கதிரை, தான் ஒரு பொதுநலவாய நாட்டில் இருந்த வருவதால் தான் என்று நினைத்து மனதில் ஆறுதலடைந்தான். இந்திய, பாகிஸ்தானிய கடவுச்சீட்டுக் காரருக்கும் இதே போன்ற மரியாதை அளிக்கப் பட்டதே , அதற்கான காரணமாகும். பின்பு ஆறு மணித்தியாலங்கள் கழித்து, வெளியில் வந்தபோது தான், வெள்ளைக்காரனின் வரவேற்பு அவனுக்கு விளங்கியது. இடையில் நடந்தவற்றை அவன் மறக்கவே விரும்பினான்.
வெளியில் வந்த போது, நண்பன் காத்திருந்தான். நண்பனிடம் உள்ளே நடந்தவற்றைச் சொன்னான். நண்பன் கூறிய பதில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. 'யூ ஆர் வெரி லக்கி மச்சான்'!
ஒரு மாதிரி நண்பனின் அறையில் ஒரே கட்டிலை இருவரும் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்தார்கள். அத்துடன் அவன் பள்ளிக்கூடத்துக்கும்  காசு கட்ட வேண்டும். வீட்டில் இருந்து கொண்டு வந்த, இருநூறு பவுண் பெறுமதியான, பிரயாணக் காசுக்கட்டளையும் வீட்டுக்குத் திருப்பியனுப்பி விட்டான். நண்பனிடம் ஒரு சிறு தொகையை கடனாக வாங்கிக் கொண்டு  வேலை  தேடும் படலத்தில் இறங்கினான். 'சோசல் செக்குரிடி' நம்பர் இல்லாமல் வேலை செய்ய முடியாது. நண்பன் ஒரு இலக்கம் தந்தான். அந்த இலக்கம் 'வாகீசன்' என்பவருடையது. ஒரு எரிபொருள் நிரப்பும் ஒரு கடையில் இரவு வேலை கிடைத்தது. அந்தக் கடையில் முகாமையாளராக ஒரு வயது முதிந்த ஒரு தமிழர் தான் இருந்தார். அவர் இவனை அன்போடு தம்பி வாகீசன் என்றே அழைப்பார். காலையில் வேலைக்கு வரும் அவர் அவனோடு கதைக்கும் போது, சில வேளைகளில் தம்பி வாகீசன், என்று அழைக்கும் போது, அவனது பெயரே அவனுக்கு மறந்து போயிருக்கும். சில வேளைகளில், தம்பி உன்னோடு தான் கதைக்கின்றேன் என அவர் நினைவு படுத்தும்போது, திடுக்கிட்டுத் தன்னை சுதாரித்துக் கொள்வான். பின்பு வேலை முடிந்ததும் அப்படியே பாடசாலைக்கு ஓட வேண்டும். பின்பு வீட்டுக்கு வந்து தான், சமையல், குளிப்பு. இரவு திரும்பவும் வேலை.  இவ்வாறு, இந்த வாழ்க்கை, இரண்டு வருடங்கள் ஓடியது. நீண்ட விடுமுறைக் காலங்களில், இரவும் பகலும் வேலை செய்து வீட்டிற்கு வந்து குளிக்கும் போது, ஏற்கனவே அரைச் சூட்டில் இருக்கும் நீர் உடம்பின் வெப்பத்தில், கொதி நிலைக்குக் கூட வந்து விடுவது போல உணர்ந்திருக்கிறான்.
மிகுந்த கடின உழைப்பாலும், நண்பனுடன் செலவுகளைப் பகிர்ந்து கொண்டதாலும், அவனால் சிறிது தொகையைச் சேமிக்கக் கூடியதாய் இருந்தது. அப்போது தான் அம்மாவின் கடிதம் வந்தது. அவனது தங்கையின் திருமணத்தை  வெகு விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தாங்கள் அதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபடுவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. சில நாட்களின் பின் தேவகியின் கடிதமும் வந்தது. தனது படிப்பு முடிந்து விட்டதாகவும், வாக்குறுதி அளித்தபடி தன்னை அங்கு கூப்பிடும் படியும் கேட்டிருந்தாள். அவனது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காதலுக்கும், பாசத்திற்கும் இடையேயான போட்டி. முடிவெடுக்க முடியாமல் சந்திரன் திணறினான், தேவகியிடம் ஒரு வருஷம் மட்டும் பொறுத்திருக்கும் படி தொலைபேசியில் கெஞ்சினான். மறுமுனையில், அவள் பத்திரகாளியாகினாள்/. இனிமேலும் உன்னைக் காணாமல் இருக்கமுடியாது என்றாள். இறுதியில் தேவகியை முதலில் கூப்பிடுவது என்றும், ஒரு வருடத்தில் தங்கையின் திருமணத்தைச் செய்யலாம் என்றும் முடிவு செய்தான். இந்த முடிவே அவனது முடிவாகவும் இருக்கும் என்று, அவன் அப்போது எதிர் பார்த்திருக்கவில்லை.
தேவகியும் வந்து சேர்ந்து விட்டாள். வாழ்க்கையில் ஏதோ அர்த்தம் பொதிந்து கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது. வெளி நாட்டு மருத்துவர்களுக்கான 'மொழிப் பரீட்சை'யிலும் சித்தியெய்தி விட்டாள். தேவகி வந்ததும்  தனியாக ஒரு சிறிய வீடொன்று வாடகைக்கு எடுக்க வேண்டி ஏற்பட்டதால். செலவுகளும் அதிகரித்து விட்டது. தேவகியின் சில சொந்தங்களும், அடிக்கடி வந்து போகத் தொடங்கின. அவர்கள் கன  காலத்திற்கு முன்பு இங்கு வந்தவர்கள்.அவர்களது 'சமூக அந்தஸ்து' மிகவும் உயர்ந்ததாக அவர்கள் காட்டிக் கொண்டார்கள். தேவகியின் காதில் அடிக்கடி குசு குசுப்பார்கள். இதனைப் பெரிதாகச் சந்திரன் கணக்கில் எடுக்கவில்லை.
சில வாரங்கள் கழிந்ததும், தேவகிக்கு 'பெர்மிங்கம்; என்னும் இடத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. அவளது வேலையின் நிமித்தம், அவள் அங்கேயே ஆஸ்பத்திரி விடுதியிலேய தங்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில்  சில வாரங்களுக்கு ஒரு முறை வந்து போவாள். காலம் செல்லச் செல்ல, அவள் வருவது  குறைந்து விட்டது.   சந்திரனது வாழ்க்கையும், பழையபடி வேலை, பள்ளிக்கூடம் என்ற வட்டத்திற்குள் மீண்டும் சுற்றத் தொடங்கியது.
ஒருவாறு தங்கையின் திருமணத்துக்கெனக் கடன் வாங்கிக் கொஞ்சக் காசும் அனுப்பியாயிற்று. காசை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தவனை, அம்மாவின் கடிதம் தான் வரவேற்றது. காசனுப்பி விட்டபடியால், மனதில்  இருந்த குற்ற உணர்வு முற்றாக அவனிடமிருந்து விடை பெற்றிருந்தது.  அன்றைய வானம் கூட முகில்கள் இன்றி மிகவும் தெளிவாக இருந்தது. வழக்கமாக இறைவன் திருவருளை முன்னிறுத்தி, நலம் விசாரித்த படி தான் அம்மாவின் கடிதம் தொடங்குவது வழமை, இன்று வித்தியாசமாக, அன்புள்ள சந்திரனுக்கு என்று தொடங்கி, சீதனத்தை முன்னிறுத்தி, பெண்ணைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்ற மாப்பிள்ளைகளுக்குக் கழுத்தை நீட்டுவதிலும் பார்க்க,  நாட்டுக்காகச் போராடுவது மிகவும் உயர்ந்தது  எனக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, அவனது தங்கை இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும்,  அப்பா  அவளையே நினைத்தபடி பித்துப் பிடித்த மனிதனைப் போல இருப்பதாகவும், தனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் எழுதியியிருந்தார். இயலுமானால் அவனை ஒரு முறை வந்து போகும்படியும் கேட்டிருந்தார்.
அவனது இதயத்தில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. யாராவது அப்போது, தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான், அவன் அது வரை அறிந்திராத ஒரு ;வெறுமை' அவனை ஆட்கொண்டது.
சில மாதங்களில், தேவகியின் போக்கில் மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அவளது வருகைகள், வெகுவாகக் குறையத் தொடங்கின. வரும்போதும் அவனோடு முகம் கொடுத்துப் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். தனது உறவினர்கள் வீடுகளிலேயே அதிக நேரத்தைச் செலவு செய்தாள். மச்சான், தேவகியினது போக்கு எனக்குச் சரியாகப் படவில்லை. எதற்கும் அவளோடு தனியாக இருக்கும்போது கதைத்துப் பார் . அவளுக்கு ஏதோ பிரச்னை இருக்கின்றது போலத் தெரிகின்றது என்று எனது நண்பன் கூடக் கூறினான். சந்திரனுக்கு நண்பன்   மீது தான் கோபம் வந்தது.
வீட்டுக்கு வந்து கதவைத் திறந்தவனது பார்வையில் படக்கூடியதாக அந்தக் கடிதம் வைக்கப் பட்டிருந்தது. அவனுக்கு 'பில்' களையும், கடனட்டைக் கடிதங்களையும் தவிரக் கடிதங்கள் வருவது மிகவும் குறைவு. கலியாணக் காசு அனுப்பியபின்பு அம்மாவின் கடிதங்களுமவருவது குறைந்து விட்டது. தேவகி, டெலிபோனில் கதைத்துக் கொள்ளுவாள். எனவே ஆச்சரியத்துடன் கடிதத்தை எடுத்தவன், கடிதத்தின் மேலுறையில்  தேவகியின், கையெழுத்தை அடையாளம் கண்டு கொண்டான்.

அன்புள்ள சந்திரனுக்கு,
சில நாட்களாக, என்னில் சில மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள். இங்கு வந்த பின்பு எனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டது. நீண்ட காலமாகத் தொடர்புகள் விட்டுப் போனாலும். 'தானாடாவிட்டாலும் தன் சதையாடும்' என்பது என்னைப் பொறுத்த வரையில் உண்மையாகப் போய் விட்டது. எனது உறவினரது மகன் ஒருவரும், இங்கு 'பெர்மிங்கமில்' ஒரு ;நல்ல 'பதவியில்' வேலை செய்கின்றார். தூரத்து வழியில், அவர் எனக்கு மச்சான் முறையும் கூட. அவர் மிகவும் முற்போக்கானவர். இங்கு  வளர்ந்த படியால், அவ்வாறு இருக்கலாம். நீங்களும் நல்லவர் தான். ஆனால் இருவருக்குமிடையே உள்ள 'இடைவெளி' மிகவும் அதிகம். இது எல்லாம் இங்கு சர்வ சாதரணமாக நடப்பவை தான் என்று எனது உறவினர்கள் கூறுகின்றார்கள். உங்களுக்கு வயசிருக்கின்றது. ஊருக்குப் போய், உங்கள் அப்பா, அம்மாவின் ஆசீர்வாதத்துடன் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்யுங்கள்......

கடிதத்தை அவன் மேலும் படிக்கவில்லை, கண்ணீர் அவனது கண்களை மறைத்தது. கடிதத்தை மடித்து, சாமிப் படங்களிருந்த தட்டில் வைத்தான். நல்லூர் முருகனின் படமொன்றும் அதில் இருந்தது. அவனைப் பார்த்து, அவர் சிரிப்பது போல் இருந்தது.
இப்போதெல்லாம் வேலைக்குப் போகின்றான். படிப்பு முடிந்து இரண்டாவது மட்டையும் கைக்கு வந்து விட்டது, அந்த மட்டைகளுக்கேற்ற ஒரு வேலை ஒன்றைத் தேடித் திரிகிறான். அது ஒரு வேளை  அவனது 'அந்தஸ்தை' மாற்றக் கூடும். வேலை முடிந்தவுடன், நேரே  இந்தத் தேம்ஸ் நதிக்கரைக்கு, இந்தக் கதிரைக்கு வந்து  விடுகின்றான். இரவாகியதும் திரும்பவும், அந்த வேலைக்குப் போய் விடுகிறான். அந்தக் கலங்கிய நதியின் அசைவில், தனது மனதைக் காண்கிறானோ என நான் நினைப்பதுண்டு!

1 comment:

  1. புலம்பெயர்வாழ்வின் வலிகள் தூக்குகின்றன . அத்திவாரங்கள் இல்லாத காதல் கோட்டைளில் பலியான சந்திரன்கள் மீண்டும் மூர்கத்துடன் எழும்பி நிற்க , தேவகி போன்றோரும் எமக்கு தேவைப்படுகின்றனர் .

    வாழ்த்துக்கள் புங்கையூரான் .

    ReplyDelete