Saturday, 11 August 2012

முருகனும், சாதகமும்!



கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார்.
'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்டிருந்த, ஒரு விதமான மாடியிலிருந்து, தற்காலிக படிகளைத் தூக்கிவைத்து, அதன் வழியே ஒரு விதமான,தனக்கேயுரித்தான லாவகத்துடன் கீழே இறங்கியவர், படிகளை எடுத்துச் மறைவான சுவரொன்றில், சாத்தியதும், மேலேயொரு, மாடி இருப்பதற்கான, எந்த வித அடையாளமும், அங்கு காணப் படவில்லை!
மள மளவென்று, காலைக்கடன்களை முடித்தவர், மீன்கடைக்குப் போன பெடியன், வந்திட்டானா என்று கடைக்கண்ணால் பார்த்து உறுதிப் படுத்திய பின்பு, முன்னாலிருந்த கடைக்குப் போய், ஒரு மல்லிகைப் பூமாலையை, வாங்கிக் கொண்டு வந்து, ஒரேயடியாகப், புத்தர், பிள்ளையார், முருகன்,லட்சுமி, அரபிக்கில் எழுதப் பட்ட படம், எல்லாத்தையும், கவர் பண்ணி, அதைப் போட்டார். பிறகு, ஊதுபத்தியைக் கொழுத்தி வைத்தவர், 'முருகா, முருகா, என்று, இரண்டு தரம் கூறியபடி, அன்றைய 'வீரகேசரிப் பேப்பரைத் திறக்கவும், தேத்தண்ணி குடிக்கிற ஆக்கள், வரத்துவங்கவும், சரியாக இருந்தது.
டேய், தம்பி, அந்தக் கயித்தைக் கொழுத்தி விடப்பு! என்று ஆரோ சிகரட் வாங்கி விட்டு, நெருப்புக் கேட்ட போது, சத்தம் போட்டார்!
ஆ, ஐயா வாங்கோ, அப்பு வாங்கோ! என்று தன்னையறியாமலே, வழக்கம் போல, வாய் திருவாய் மலர்ந்து கொண்டிருந்தது.
ம்ம்.... காலம் என்ன மாதிரி, ஓடிபோச்சுது, என நினைத்தவருக்குக், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
இருக்காதா, பின்னே?
ஒரு 'பழையகாட்' சாரத்தோடையும், ஒரு 'மில்க் வைட்; சவர்காரக் கட்டியோடையும் தானே, ஊரை விட்டு வெளிக்கிட்டனான். இண்டைக்கு, ஒரு சாப்பாட்டுக் கடையும், நாலாம் குறுக்குத் தெருவில, ஒரு பலசரக்குக்  கடையும்   இருக்குதெண்டா, எல்லாம் அந்த முருகன் தந்தது தானே!
மீண்டுமொரு முறை, முருகனைப் பார்த்து,இரண்டு கன்னங்களிலும், போட்டுக் கொண்டவர், கடைக்குப் பின்னுக்குப் போய்,
டேய், தம்பி, அந்தப் பழைய இட்டலியளை, எறிஞ்சு போடாதை! உழுந்து வடைக்கிள்ள போட நல்லாயிருக்கும், என்று மெதுவாகக் கூறியபடி, சமையல் பகுதியை நோட்டமிட்டார்!
தம்பியள், அந்த வெந்தயக் குழம்பையும், ஊத்திப் போடாதேயுங்கோ!
வெந்தயக் குழம்பு, பழுதாகாது, பிள்ளையள். இன்டைக்கு, வைக்கிற குழம்போட, சேர்த்து விடுங்கோ, என்ற படி, எனக்கேல்லோ தெரியும், இந்தக் கடை துவங்கின காலத்துக் குழம்பு, இண்டைக்கும் இருக்கென  நினைத்தபடி,கடைக்கு முன்னால், ஓடி வந்தார்!
அப்போது, ஊரிலிருந்து, மனுசி எழுதின விசயம், நினைவுக்கு வர, கடைப் பெடியனைக் கூப்பிட்டுத்,
;தம்பி, ஒருக்கா வெள்ளைவத்தைக்கு ஓடிபோய்ப். புறோக்கர் ஆறுமுகத்தை, ஒருக்காக் கூட்டிக் கொண்டு வாப்பு, என்று கலைத்து விட்டவர், தொடர்ந்து, கல்லாப் பெட்டியில், இருந்த படியே, நினைவுகளில் மூழ்கிப் போனார்!
ஆனால், வாய் மட்டும், ஐயா வாங்கோ! அம்மா வாங்கோ! என்ற படி இருந்தது!
'இவள் வதனாக்கும், ஒரு கல்யாணத்தைப் பாத்துச் செய்து விட்டால், கடையைப் பெடியளிட்டைக் குடுத்துட்டு, இந்தியாவுக்குப் போய், என்ர 'முருகனைப்' பாத்திட்டு வந்திட்டனெண்டாக்  கண்ணை மூடினாலும், பறுவாயில்லை!
மத்தியானச் சாப்பாட்டுக்கு, ஆக்கள் வரத் துவங்கீற்றினம்!
அதாரது, பாங்கரையாவா! என்ன ஊருக்குப் போயிற்று வந்தனீங்க போல!
பதிலை, எதிர்பாராத நலம் விசாரிப்புகள்!
அதே நேரம், ஆரோ நண்டு சாப்பிட்டவர், நண்டுக்காலைக் கடிக்க முடியாமல், கூப்பிட்டார்!
டேய், தம்பி, அந்த ஐயாவின்ர, காலை ஒருக்கா உடைச்சு விடப்பு!
என்றவர், புறோக்கர் ஆறுமுகம், தூரத்தில் வருவதைக் கண்டு கொண்டார்!
'முருகா, முருகா! என்று மீண்டும் முருகனைக் கூப்பிட்டார்!
நான், நினைச்ச விசயம் சரிவந்திட்டுதெண்டால், உனக்குத் தங்கத்தால 'பாதம்' செய்து போடுவன், என்று மனதுக்குள், நேர்த்தியும் வைத்து விட்டார்!

௦௦௦௦௦௦௦                         ௦௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦0                      

வாங்க, ஆறுமுகத்தார்!
இண்டைக்கு நல்ல நாளாக் கிடக்கு! கன நாளா, நினைச்சு வைச்சிருக்கிற, ஒரு விசயத்தை, முடிச்சிடலாம் என நினைக்கிறன், எண்டவர் முருகனை, மீண்டும் பார்க்க, முருகனும் சிரித்த மாதிரி இருந்தது!
புறோக்கருக்கு, முதலே விசயம் விளங்கி விட்டது.
ஆனால், எதற்கும், கந்தையற்றை வாயால வரட்டுமே, என்று பொறுமை காத்தார். அதே நேரம், பக்கத்தில இருந்த, கண்ணாடியில பார்த்து, வெயிலில் கரைந்து போன சந்தனப் பொட்டைச் சரிப்படுத்தினார்.
நான், நேர விசயத்துக்கு வாறன், ஆறுமுகம்.
என்ர ஒரே  பெட்டை, வதனிக்கு, நீ ஒரு இடம் பாக்க வேணும்!
சரி, என்ன மாதிரி எண்டு சொல்லுங்க. நான் என்ர 'டேட்டா பேசில' பாத்துச் சொல்லுறன்.
அதெல்லாம், வேணாம் ஆறுமுகம். உனக்குப் பிரச்சனையில்லாம, நானே பாத்து வைச்சிட்டன். இவள், விசாலாட்சி இருக்கிறாளெல்லோ? அவளின்ர  பெடியன், நல்ல பெடியனாம். 'ஹட்டன் நேசனல் பாங்கில' உதவி மனேச்சராம்.
அதை ஒருக்காப் பாத்து முடிச்சு விடன்!
ஆறுமுகத்தார், ஒரு நிமிடம் பேசவில்லை!
இல்லப் பெடியனுக்குப் 'பத்தில வியாழன்' வாற நேரம் என்று, இழுத்தார்.
அதுக்கென்னடாப்பா,   படிச்ச பெடியன், வெளிநாடு, கீடு போகப் போறான்போல! நாடு கிடக்கிற நிலையில, அதுகும் நல்லதுக்கு தான், என்றவர், மீண்டும், முருகனைக் கூப்பிட்டார்.
இல்லை, அதுக்கில்லை... புறோக்கர் இழுத்தார்.
இஞ்சை பார், நான் நினைச்சுட்டன்! இதை முடிச்சுத் தந்தா, உனக்குப் பத்தாயிரம்!
சரி, சாதகத்தைத் தாங்கோ! என்று இரண்டு கையையும், நீட்டி வாங்கிக் கொண்டார், ஆறுமுகத்தார்!
இந்த முறை, முருகா, என்றது, கந்தையரில்லை, ஆறுமுகத்தார்!

அவரது, மனதில் ஒரு பெரிய திட்டம் உருவாகி விட்டது!
அவருக்கும், உள்ளூரக் கந்தையரில ஒரு பொறாமையும் உண்டு!
ஊரில, தாங்கள் வசதியாக இருக்கேக்கை, ஒன்றுமில்லாமல் கிடந்ததுகள் எல்லாம், இண்டைக்குக் கடையும், விலாசமும்!
தனக்குள், கறுவிக்கொண்டவர், நேர தனது, சாத்திரி நண்பனிட்டைப் போய், எனக்கு ஒரு சாதகம், எழுத வேணும்!
சாத்திரி, என்ன பகிடியா விடுகிற ஆறுமுகம்? எனக் கேட்க, ஆயிரம் ரூபாய்களைத் தூக்கி மேசையில் போட்டார், ஆறுமுகம்!
சரி... நல்லதுக்குத் தானே, என்ற படி, பணத்தை எடுத்துக் கொண்டார் சாத்திரியார்!
'அடுப்பில, அவிக்கேக்க, கவனமா அவிக்க வேணும், என்ற படி, 'முருகா' என்றவர், அன்றைக்குப் பின்னேரமே யாழ்ப்பாணத்துக்குப், பஸ் பிடித்தார்.


௦௦௦௦௦௦௦                         ௦௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦0                      


விடியக் காலமையே, யாழ்ப்பாணம் போனவர், நேரே விசாலாட்சி, வீட்டை தான் போனார்.
தனது, மூத்த மகளின்ர, பிள்ளையை, முழங்காலில் வைத்து, நல்லெண்ணை தடவிக் கொண்டிருந்த விசாலாட்சி, பிள்ளையைத் தடுக்கில குப்புறப் போட்டுவிட்டு, எழுந்தவள்,
நான் நினைச்சனான், காகம் கத்தேக்கையே, நீங்க தான் வருவீங்க எண்டு சொல்லிய படியே, அண்ணை என்ன மாதிரி? என்று கேட்டாள்!
'எல்லாம் பழம் தான். என்று சிரித்த படியே சொன்ன ஆறுமுகத்தார், தேத்தண்ணியைப் போடன், என்ற படி திண்ணையில் அமர்ந்தார்!
அப்ப அந்தச் செவ்வாய்ப்  பிரச்சனை?
அதெல்லாம் தொண்ணூறு வீதம் பொருத்தம் என்றவர், இனி இதைப் பற்றி மூச்சு விடக் கூடாது, என்று வாயில் விரலை, வைத்துக் காட்டினர்!
மீண்டும், முருகா! என்றொரு குரல்!
இந்த முறை, விசாலாட்சி!






குரு மூர்த்தி



நீண்ட காலங்கள் கடந்து போய்விட்டாலும், குருமூர்த்தியின், முகம் மட்டும் இன்னும் மனத்திரையை விட்டு அகன்ற பாடாயில்லை. இவ்வளவுக்கும் குருமூர்த்தி, ஒரு பிரபலமான மனிதனோ, அல்லது எம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தேச வழமைகளின் படி, ஒரு சாதாரண மனிதனோ கூட அல்ல.
சுத்தமான, கலப்படமில்லாத தமிழில் சொன்னால், ஒரு விசரன்.
நடராசா அண்ணையின்ர, கன்ரீனுக்கு  முன்னால, இருந்த மரத்துக்குக் கீழ, இருந்த படி, ஒரு இருபது பக்க, அப்பியாசக் கொப்பியில், ஏதாவது எழுதியபடி இருப்பான். ஆனால், வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியதை, நாங்கள் ஒருவரும் கேட்டது, கிடையாது. ஒரு வேளை, ஊமையாக இருக்கலாம் போலும் என நாங்கள் நினைத்து, அவனை, நாங்கள் கரைச்சல் படுத்துவதும் கிடையாது!
அன்றைக்குச் சனிக்கிழமை!
விடியக் காலமையே, கே.எஸ்.எஸ், அவர் தான் எங்கட போர்டிங் மாஸ்டர், நடந்து வந்தது, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் எங்களுக்கு இருந்தது!
ஏதாவது, பெரிய விசேசம் எண்டால் தான், அவர் அப்படி வருவதுண்டு. கையில். பிரம்பொண்டும், மறைந்தபடி இருந்தது!
எங்கடா, அந்த மூதேவி?
ஆரு, சேர்?
அவன் தான்ரா, அந்தக் கழுவாஞ்சிக் குடியான்!
விடுதியின் மேல் தட்டுக்கு, வேர்க்க, விறுவிறுக்க ஓடிப்போனால், ;கிங்க்ஸ்ரன்' என எம்மால், செல்லமாக விழிக்கப்படும், கழுவாஞ்சிக் குடியான், மூன்று தடித்த. காச்சட்டைகளைப் போட்டபடி, ஏற்கெனவே ஆயத்தமாக நின்றார்!
என்ன நடந்தது, கிங்க்ஸ்ரன்?
மச்சான், ராத்திரி ரீகலுக்குப் படம் பார்க்கப் போகேக்கை, இருட்டுக்குள்ள போய், ஒரு கதிரையில இருந்திட்டன். பக்கத்தில, ஒரு கிழடொண்டு இருந்து படம் பாத்தது! படத்தில, வந்த பகிடிக்குச் சிரிக்காம இருந்துது, மச்சான்!
நான், ஒரு பகிடி வாற நேரம், அதுகின்ர துடையில தட்டி,
அப்பு!  இது பகிடி, எண்டு சொல்லிப் போட்டன்!
பிறகு, இன்டர்வலுக்கு வெளிச்சம் வரேக்க பாத்தா, அது நம்மட சுப்பரடா!
அதற்கு மேல், எமக்கு மேலதிக விளக்கம் வேண்டியிருக்கவில்லை!
ஒரு மாதிரித் 'தேவாரம்' பாடித் தேத்தண்ணியும், குடிச்சிட்டு, கன்ரீனடிக்குப்   போனால், குருமூர்த்தி ஒரு காகிதத்தை நீட்டினான். அதில், இப்படியான, பகிரங்கத் தண்டனைகள், எதிர்மறையான விளைவுகளைத் தரும்' என எழுதியிருந்தது! அது தான், அவன் ஒரு விசரனல்ல, என என்னை நம்ப வைத்தது.
பின்பு, கணிதத்தில் வரும், இரு படிச்சமன்பாடுகள், சினை காணுதல், போன்றவற்றில் வரும் கடுமையான, கணக்குகளைக் கொடுத்தால், செய்து தருவான். அவனுக்குள், மறைந்திருந்த நகைச் சுவை, உணர்வும் சில எதிர் பாராத நேரங்களில், வெளிப்படுவதுண்டு.
ஒரு முறை, குருமூர்த்தி, சில சமன்பாடுகளைத் தந்து, 'பரவளைவு' கீறும்படி சொன்னான். நாங்களும், கீறிக் கொண்டு போய்க் காட்ட, ஒருவன் கீறிய 'பரவளைவைப்' பார்த்துக் குருமூர்த்தி, விழுந்து, விழுந்து சிரித்தான்! குருமூர்த்தியைச் சிரிக்கப் பண்ணியதைக் கண்டு, எங்களுக்கு மிகவும் சந்தோசம், எண்டாலும் கொஞ்சம் பயமும் பிடித்துக் கொண்டது!
பின்பு ஒரு பேப்பரில, 'கிழவியளின்ர மாதிரிக் கிடக்கு' என்று எழுதிக்காட்ட நாங்களும், சிரித்து வைத்தோம், ஆனால், அப்போது, அந்தப் பகிடி வடிவாக விளங்கியிருக்கவில்லை!  
நாட்கள் போக, குருமூர்த்தியும், எங்களுக்கு வேண்டப் பட்டவனாகி விட்டான்!
அட்சர கணிதத்திலிருந்து , ஆவர்த்தனப் பாகுபடு வரை, அவன் அறிந்திருந்தான்!
நாங்களும், நாளடைவில், நடராசா அண்ணையின்ர 'லைற் ரீ' வாங்கிக் குடுத்தால், வாங்கிக் கொள்வான்! அதுக்கு மேல, எங்கட அந்த நேரப் பொருளாதாரமும், இடம் கொடுக்காது!
சில வேளைகளில், மிஞ்சிய சாப்பாட்டை, 'பண்டா' கொண்டு வந்து கொடுத்தால் மட்டும், குருமூர்த்தி சாப்பிடுவான்.
'பண்டா' ஒரு சகல கலா வல்லவன். விடுதிச் சமையல், தொடக்கம், 'வாட்டர் பம்ப்' வேலை செய்யாவிட்டால், பைப்புக்குள் தண்ணீர் விட்டு, ஸ்டார்ட்' பண்ணுவது, மற்றும் காவல் வேலை, வரை செய்வான்! அவனுக்கும், குருமூர்த்திக்குமிடையே , ஒரு விதமான பிணைப்பு, எப்போதும் இருந்தது!
எங்களுக்கும், பண்டாவுக்கும் இடையில், ஒரு 'ரகசியமும்; இருந்தது!
விடுதியில், சாப்பாடு சரியில்லா விட்டால், ஒளிச்சு 'மொக்கங்கடை' போனால். பண்டா, ஒருவருக்கும் தெரியாமல், கேற்றைப் பூட்டாமல் விட்டிருப்பான். நாங்கள் திரும்பி வந்ததை, உறுதிப் படுத்தியபின், எனக்கு நித்திரை வாறான்' என்று கூறியபடி படுக்கப் போவான்.
ஒருநாள், பண்டாவின் நெருங்கிய உறவினர் ஆரோ, செத்துப் போய் விட்டதாகத் தகவல் வந்து, பண்டா போகவேண்டி வந்து விட்டது.
அவனிடம், பணம் இருக்கவில்லை. 'பண்டா' ஒரு நாளும், சேமித்து வைத்ததில்லை. எங்களிடமும், காசு அதிகமாக இருப்பதில்லை.
போர்டிங் மாஸ்டராலும்,     ஒரு 'ரிற்றேன் ரிக்கற் '    மட்டும் தான் குடுக்க முடிஞ்சுது.
அண்டைக்கு இரவு, பண்டா வழக்கம் போல, குருமூர்த்தியிடம், இரவுச் சாப்பாடு, கொண்டு போனான்.
'பண்டா, ஊருக்குப் போய் வாறது' எண்டு தனது தமிழில் குருமூர்த்தியிடம் சொன்னான்.
குருமூர்த்தியும், பண்டாவிடம், ஒரு என்வலப்பைக் கொடுத்து விட்டுச் சிரித்தான்.
அதனுள்ளே, முன்னூறு ரூபாய்' நோட்டுக்களாக இருந்தது.
அன்று தான், பண்டா, வாய்விட்டு அழுததை, முதன் முதலாகக் கண்டேன்!

Wednesday, 25 July 2012

தம்பையா வாத்தியார்



அண்டைக்கு, லீவு முடிஞ்சு, பள்ளிக்கூடம் தொடங்கிற நாள்!
விடியக் காலமை எட்டு மணிக்கே, தம்பையர் பள்ளிக் கூட வாசல்ல பிரம்போட நின்று கொண்டிருந்தார்! அவற்றை வீடும், பள்ளிக்கூடத்திற்குப் பின்னால தான் இருந்தது!

நாங்கெல்லாம், லீவில போனப் பிறகு, அந்த ஊரிலுள்ள ஆட்டிக்குட்டியளெல்லாம், படிக்க வெளிக்கிட்டுதுகள் போல. பள்ளிக்கூடம், முழுவதும், ஒரே ஆட்டுப் புழுக்கையும், மூத்திர மணமுமாக் கிடந்தது. வயது போன ஆக்களும் வந்து படிச்சிருக்கினம் போல கிடக்கு! கரும்பலகையில இருந்த படங்கள் சிலது, கோரியாவடி வெளிச்ச வீட்டில கீறிக்கிடந்த படங்கள் மாதிரிக் கிடந்தது! வாத்தியாரும், அந்த நாளையில நல்லாப் படிச்சவரா இருந்திருக்க வேண்டும்! அவற்றை வீட்டுச் சுவரெல்லாம், கொழும்பு விவேகானந்த சபையில குடுத்த சேர்ட்டிபிக்கேற்றுக்களால நிரம்பிக் கிடந்தது!
எனக்கும், தம்பிக்கும் அண்டைக்குப் பெரும் புழுகம். தீபாவளிக்கு, அப்பா வாங்கித் தந்த, போலீஸ்காரன் காச்சட்டையும், சேட்டும் போட்டுக் கொண்டு போன படியால்  எல்லாரும், எங்களை ஒரு மாதிரிப் பொறாமையோட பாத்த மாதிரிக் கிடந்தது.  

வாத்தியாரைப் பற்றிக் கனக்கக் கதையள், ஊரில கதைப்பினம்!
ஒருநாள், வாத்தியார், வாயை திறந்து வைச்சுக் கொண்டு இருந்தார். அப்ப அவற்றை நாக்குக் கொஞ்சமா ஆடிக்கொண்டேயிருந்துது.
ஏன் வாத்தியார், உங்கட நாக்கு ஆடிக் கொண்டேயிருக்குது எண்டு கேட்க, வாத்தியார் சொன்னார்.

தம்பி, படிச்ச ஆக்களின்ர  நாக்கில சரஸ்வதி நடனமாடுவாவாம்! அது தான், அவ ஆடெக்க, தன்ர நாக்கும் நடுங்குது எண்டு சொன்னார்!
அதுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், கண்ணாடிக்கு முன்னால நிண்டு, நாக்கைப் பாக்கிறது தான், எனக்கும் வேலை! சரஸ்வதி, என்ர நாக்குக்கு கடைசி வரையும் வரவேயில்லை!

சின்ன வயசிலேயே வாத்தியாருக்கு, விஞ்ஞான மூளை வந்திட்டுதாம்.
வாத்தியார் வீட்டில, தீபாவளிக்கு, 'மான் மார்க்' வட்டப் பெட்டி, சீன வெடி வாங் கினவையாம்! யாழ்ப்பாணத்திலை இருந்து வரேக்க, காருக்கு மேல வைச்சு வெடியைக் கட்டிப் போட்டாங்களாம். வாற வழியில மழை தூறியிருக்குப் போல கிடக்கு! வெடிப் பக்கற், நனைஞ்சு போச்சுது போல கிடக்கு! அடுத்த நாள் காலமை, வெடியை எடுத்துக் கொழுத்தத் திரி மட்டும் எரிஞ்சுது! நல்ல நாளும், பெரிய நாளுமா, வாத்தியாருக்கு அழுகையே வந்திட்டுது! தீபாவளிக்குக் கடையளெல்லாம் பூட்டிப் போட்டாங்கள்! அப்பத் தான் வாத்தியாருக்கு, அந்த ஐடியா வந்திருக்க வேணும். கச்சான் வறுக்கிற பெரிய தாச்சியை அடுப்பில வைச்சு, கீழ நெருப்பெரிச்சு, அந்த வெடியெல்லாத்தையும், தாச்சிக்குள்ள போட்டு வறுக்க, அவ்வளவு வெடியும் பெரிய சத்தத்தோட வெடிக்க, அந்தப் பக்கத்திலேயே வாத்தியார் வீட்டுத் தீபாவளி தானாம் நல்லாயிருந்ததாம்!
 
இதே போல, வாத்தியாருக்குப் படிப்பிச்ச வாத்தியார், 'பாவ்லோ தியறி' எண்டு ஒண்டைச் சொல்லிக் கொடுத்தவராம்! நாய்க்குச் சாப்பாடு வைக்கேக்கை, இந்த 'பாவ்லோ' எண்ட விஞ்ஞானி, மணி அடிப்பாராம். கொஞ்ச நாள் போக, ஒவ்வொரு நாளும் மணியடிக்கிற நேரத்தில,சாப்பாடு இல்லாமலே  நாயின்ர வாயில, உமிழ் நீர்  வடியத் துவங்கீற்றுதாம்!  வாத்தியாரும் இதை வேற விதமாய்ச் செய்து காட்டினாராம். கொண்டாட்டங்களில வெடிக்கிற 'சர வெடிப்பக்கற்' ஒண்டை வாங்கி, வெடியளைக் கொஞ்சம், கொஞ்சம் இடைவெளி விட்டுக் கட்டினாராம்! பிறகு, வெடிப்பக்கற்றோட, தன்ர நாயையும் கூட்டிகொண்டு, கடற்கரைப் பக்கம் போனாராம். பரிசோதனை, வெற்றி என்பதை, உறுதிப் படுத்த, ஊரில பெரிய ஆக்கள், நாலைஞ்சு பேரையும் கூட்டிக்கொண்டு போனாராம். பிறகு, ஒருத்தரும் எதிர்பாராத மாதிரி, நாயின்ர  வாலில, வெடிக் கோர்வையைக்  கட்டிக் கொழுத்தி விட்டாராம்! முதல் வெடி வெடிக்க, நாய் ஓடத் துவங்கிப் பிறகு, மெல்லமா நடக்கத் துவங்க அடுத்த வெடி வெடிக்க, நாய் மீண்டும் ஓடத்துவங்கிப் பிறகு மெதுவாக.....

எல்லா வெடியும் முடிஞ்சப் பிறகும், கொஞ்ச நாளைக்கு, நாய் ஓட்டமும், நடையுமாய், அதே 'டைமிங்கை' மாத்தாம இருந்ததாம்!

ஒரு நாள், வாத்தியார், தான் சொல்லுற இடத்தில போய்ப் பால் வாங்கிக் கொண்டு வந்து, தங்கட வீட்டில கொடுத்து விடச் சொன்னார்! நானும், பாலை வாங்கிக் கொண்டு போகேக்க அந்தப் போத்திலுக்கிள்ளை, பால் நுரைச்ச படி இருந்துது. அதுக்கிள்ள கன பூச்சியளும் செத்துப் போய் மிதந்து கொண்டு இருந்திச்சு! நானும் பாலைக் கொண்டு போய், வாத்தியாரின்ர அவவிட்டைக் குடுத்துப் போட்டு வீட்டை போய்ற்ரன்!

அப்பாட்ட ஒரு நாள், அப்பா! வாத்தியார் வீட்டுக்கு வாங்கிக் குடுத்த பால், கொஞ்சம் பழுதாய்ப் போச்சுது போல கிடக்கு எண்டு சொல்ல, அப்பாவுக்குப் பொல்லாத கோவம் வந்திட்டுது!

அவர் இனிமேல் அந்தப் பள்ளிக்குடப் பக்கம், தலை வைச்சுப் படுக்கக் கூடாது, எண்டு சொல்லி, என்னையும், தம்பியையும், வேற பள்ளிக் குடத்துக்கு மாத்திப் போட்டார்! எனக்கெண்டா இண்டைக்கு வரைக்கும், ஏனெண்டு விளங்கேல்ல!

நீங்களாராவது, ஏன் எண்டு சொல்லுவீங்களா?
;         

Saturday, 21 July 2012

முடிவில்லாத பயணங்கள்


அதிகாலைப் பொழுதின்,
இருள் பிரியாத நேரத்தில்,
ஆயிரம் பயணங்களில்,
அதுவும் ஒரு பயணமாகியது!
அப்பாவின் பனித்த கண்களும்,
அம்மாவின் அன்புத் தழுவலும்,
அந்தத் தேங்காய் உடைத்தலில்,
அமிழ்ந்து போனது!

கலட்டிப் பிள்ளையாரின்,
கடவாயின் தந்தங்கள்,
கொஞ்சமாய் அசைந்த பிரமையில்,
சஞ்சலப் பட்டது மனம்!
விரியும் கனவுகளில்,
வருங்காலக் கேள்விக்குறி,
விரிந்து வளைந்து,
பெருங் கோடாகியது!

தூரத்தில் தெரிந்த நீரலைகள்,
கானல் நீரின் கோடுகளாய்,
ஈரம் காய்ந்து போயின!
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும்,
காற்றாடியாகியது பயணம்!

புலம்பெயரும் புள்ளினங்களே!,
போன பயணம் முடித்ததும்,
போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு!
போகுமிடமெல்லாம் கூடு கட்டும்,
பயணமாகியது, எனது பயணம்!

உற்றார்கள், பெற்றார்கள்,
உடன் பிறந்த சொந்தங்கள்,
சுற்றித் திரிந்த குறுந் தெருக்கள்,
சுகம் தந்த காற்றின் வருடல்கள்,
விடிகாலை வேளையின் சிலிர்ப்புகள்!
வானத்தில் பறக்கும் பறவையின்,
விழிகளில் தெரியும் வடிவங்களாக,
விரைந்து தொடர்கிறது ,பயணம்!

தொடுகையில் கிடைக்கும் சுகங்களும்,
நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும்,
படங்களில் மட்டுமே கிடைக்கும்,
பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது!

இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய்,
இரவும் பகலுமில்லாத, பெருவெளியில்,
திசை மாறிய பறவையாகித்,
தொடர்ந்து செல்கின்றது, பயணம்!
முடிவில்லாத பயணமாகி,
முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது!













காலத்தில் கரையாத கறை படிந்த நாள்
















காலன் கூடக் கண்ணீர் விட்ட நாள்!
கனவுகள் தொலைந்து போன நாள்!
கரம் தூக்கிய மனிதக் கூடுகளைக்,,.
காந்தீயம்,கழுவிலேற்றிய கரி நாள்!

நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம்,
நடு முதுகில் கத்தி ஏற்றிய நாள்!
நம்பிக்கை ஊட்டியவர்கள் எல்லாம்,
நரிகளாக மாறிவிட்ட நாள்!

உலகத் தமிழர்களின் இதயங்கள்,
ஊமைக் கண்ணீர் வடித்த நாள்!
உலகத் தலைவர்களின் காலடிகளில்,
ஈழத் தமிழன் விழுந்து கெஞ்சிய நாள்!

கையிழந்தும், காலிழந்தும்,
கட்டியணைத்த துணையிழந்தும்,
கருக் குழந்தைகளின் தொப்புள்கொடிகள்,
துண்டிக்கப் பட்டதொரு கரிநாள்!

கரம் கூப்பி நான் தொழுத தெய்வங்களும்,
காவடியேந்தி நேர்த்தி வைத்த தேவதைகளும்,
கோபுரக் கலசங்கள் மட்டும் ஒளிவீசக்,
கோவில்களை விட்டுக் குடிபெயர்ந்த நாள்!

வால்மீகி வடித்தெடுத்த இராமாயணமும்,
வரலாற்றில் நான் படித்த பாரதமும்,
வாழ்க்கை வழியுரைத்த வேதங்களும்,
வேதனையோடு என்னிடம் விடை பெற்ற நாள்!

ஆச்சியும் தேசிக்காயும்



அன்றைக்குச் சனிக்கிழமை!

ஆச்சிக்குக் கொஞ்சநாளா மனம் சரியில்லாமல் இருந்தது!
மாமா, ஆச்சிக்கு ஒரே மகன். அவரும் கொழும்பில இருந்து வந்திருந்தார். அவர் வரப் போறது, என்டாலே ஆச்சிக்கு, ஒரு பத்து வயது குறைஞ்சு போயிரும்! இவ்வளவுக்கும் மாமா, ஒரு ஆம்பிளை என்டதைத் தவிர வேற ஒன்டுமே பெரிசா, வெட்டி விழுத்தினதா, எனக்கு நினைவில் இல்லை,

மாமாவும், ஆச்சி வெங்காயக் கூடையும், பாயும் இழைச்சுச் சேர்த்த காசுக்கு ஒரு வழி பண்ணும் வரையும் கொழும்புக்குத் திரும்பிப் போக மாட்டார்!
மாமா செய்த பெரிய காரியங்கள் பற்றி ஆச்சிக்கு எப்போதும் பெருமை!
அதில் ஒன்றை, மட்டும் சொல்லிக் கதையைத் தொடர்கிறேன்!

அந்தக் காலத்தில, எங்கள் ஊரில் ஆம்பிளைப் பிள்ளை, பிறந்தால், உலக்கை எறிவது வழக்கமாம்! நான் பிறந்த செய்தி கேட்டதும், மாமா ஒரு உலக்கையை எறிந்தாராம். அதுவும் இரண்டு, மூண்டு வளவு தாண்டிப் போய் தூரத்தில் விழுந்ததாம். ஆச்சி, வளவுகள் கொஞ்சம் சின்னனா இருந்திருக்கும் போல என்று நான் சொல்ல, ஆச்சிக்குப் பெரிய கோபம் வந்தது எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது!
ஆச்சிக்குக் கொஞ்சம் சந்தோசம் வரட்டும் என நினைத்து, எனது ஒன்று விட்ட அக்காவுக்கு, முதல் ஆம்பிளைப் பிள்ளை பிறந்த போது, நானும் ஒரு உலக்கையை எடுத்து, 'ஜவலின்' எறியிற மாதிரி எறிய, அது அடுத்த வீட்டுக் கிணத்தில குளிச்சுக் கொண்டிருந்த, அக்காவின்ர தலைக்குக் கிட்ட போய், கிணத்தடியில விழுந்திட்டுது! பிறகு அந்த மாமா, என்னை அடிக்கத் திரிய, ஆச்சியிடம் அடைக்கலம் கேட்க வேண்டி வந்திட்டுது! அதுக்குப் பிறகு, ஆச்சி இந்த உலக்கைக் கதையைக் கதைக்கிறது குறைவு!

மாமா கடற்கரையிலிருந்து வாங்கின 'ஓரா' மீன்களை, பனை ஈக்கில் கோர்த்தபடி, ஆச்சியிட்டைக் குடுத்து, இதை இண்டைக்குக் காச்சித் தாணை, எண்டதும் ஆச்சி மீனைக் கழுவத் தொடங்கினா! வழக்கமாக, அந்த முருக்க மரத்துக்குக் கீழதான், அந்த மீன் வெட்டுற கத்தி, ஒரு பலகையில், செங்குத்தாகப் பூட்டப்பட்ட படி இருக்கும்! மீனைச் சுத்தப் படுத்தியபின், அந்தத் தண்ணியை, ஆச்சி அந்த முருக்க மரத்தடியில் எத்துவது வழக்கம்! அண்டைக்கும் வழக்கம் போல, தண்ணியை வீசியபோது, அந்தக் கறுத்தப் பூனையும், வழக்கம் போல அந்த இடத்துக்கு வந்து, தனது தினசரிக் குளிப்பை முடித்துக் கொண்டது! அப்போது தான், ஆச்சியின் கண்ணில், அந்தத் தேசிக்காய், கண்ணில் பட்டிருக்க வேண்டும்!

அண்டைக்குப் பின்னேரம், ஆச்சியும் மாமாவும், அடிக்கடி குசு குசுத்துக் கொண்டார்கள்! நானும், மாமா, ஆச்சியிடம் பணம் பறிக்கிறதுக்கு, என்னவோ கதையளக்கிறார் என, அதனைப் பெரிது படுத்தவில்லை! எனது கவனம் முழுவதும், ஆச்சி அண்டைக்கு வைக்கப் போகும் மீன் குழம்பிலேயே இருந்தது! மத்தியானம், ஆச்சி வைச்ச மீன் குழம்போடையும், பருப்போடையும், சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போய் விட்டேன்! நல்ல நித்திரை போல கிடக்கு! முழிக்கும் போது, பின்னேரமா, அல்லது விடியக் காலமையா என்று தெரியாமல் இருந்தது! ஆச்சி, அரிக்கன் லாம்புச் சிமினியைத் துடைக்கிறதைப் பார்த்துப், பின்னேரம் தான் என உறுதிப் படுத்திக் கொண்டேன்!

கொஞ்ச நேரத்தில, வீட்டுக்குக் கொஞ்சம் வயசு போன ஆக்கள் வரத் துவங்கிச்சினம்! அதில் ஒருவரை, எனக்கு, நன்றாகத் தெரியும்! அவரும், அவரோட வந்த ரெண்டு பேரும், வீடு வளவெல்லாம், சுத்திச் சுத்தி என்னவோ தேடின மாதிரிக் கிடந்தது. பிறகு, ஆச்சி கொடுத்த சுளகில, அமெரிக்கன் மாவால, இரண்டு பொம்மை மாதிரி உருவங்கள் செய்து, அதுகளுக்குக் கண்ணும், மூக்கும் கீறி, ஒரு மீசையும் கீறிச்சினம்! எனக்கு மெல்ல,மெல்ல என்னவோ விளங்கின மாதிரி இருக்க, ஆச்சியைக் கூப்பிட்டேன்! ஆச்சியும், சின்னப் பிள்ளையள் எல்லாம், இதுக்குள்ள வரக் கூடாது, என்று கண்டிப்பாகச் சொல்லிப் போட்டா! சரி, என்ன நடக்கிறது என்று பாப்பம் என நினைத்துக் கொண்டு நானும் ஒரு மூலைக்குள்ள ஒதுங்கிக் கொண்டேன்! அப்போது மாமாவும், ஒரு பெரிய நீத்துப் பூசணிக்காயோட வந்து சேர்ந்தார்!

ஒரு பெரியவர், மிகவும் கணீரென்ற குரலில், ' மூன்றாம் பருவமடி! காளி! காளி! என்று ஏதோ பாடத் தொடங்கினார்! இவர் தான், ஊரில ஆருக்கும், பாம்பு அல்லது புலிமுகச் சிலந்தி கடித்தால், 'பார்வை' பார்க்கிறவர்! எல்லோரும் பயத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் உரத்த குரலில், ஏதோ பாடிக் கொண்டேயிருந்தார்! அவரது வாயிலிருந்து, பாட்டுடன் சாராய நெடியும் வந்து கொண்டிருந்தது!பிறகு, கொஞ்சம் வேப்பமிலையை, எடுத்துக் கொண்டு வளவுக்குள் ஓடினார்! அவருக்குப் பின்னால, அவற்றை இரண்டு உதவியாளர்களும் ஓட, மாமாவும், அரிக்கன் லாம்பையும் தூக்கிக் கொண்டு அவர்களுக்குப் பின்னால் ஓட, நானும் ஓடினேன்! பின்னர் ஒரு இடத்தைக் காட்டி, இஞ்சை, இஞ்சை என்று கத்தினார்! அவரோட வந்த ஆக்களும், அலவாங்காலும், மண் வெட்டியாலும் அங்கே கிண்டினார்கள்! உடனே பெரியவர், இஞ்சயில்லை இன்சையில்லை எண்டு சொல்லி இன்னொரு இடத்தைக் காட்டினார்! பிறகு அதுகும் இல்லையென்று, மூன்றாவது இடத்திற்கு ஓடினார்! காளிப் பாட்டு மட்டும், அவரது வாயிலிருந்து தடையில்லாமல் வந்து கொண்டே இருந்தது. அத்துடன் கொஞ்சம் நுரையும், வந்து கொண்டிருந்தது! அவருடன் வந்தவர்கள், அங்கு முதலில் மண் வெட்டியாலும், பின்னர் இன்னொருவர் ஒரு வாளியால் தண்ணீரூற்ற, பின்னர் அலவாங்காலும் கிண்டினர்! கடைசியாகப் பெரியவர், இது தான், இது தான் என்று கூச்சலிட, உதவியாளர்கள், ஒரு செப்புத் தகடு ஒன்றை, அந்தக் கிடங்கிலிருந்து வெளியே எடுத்தனர்! ஆச்சியின் முகத்திலும், மாமாவின் முகத்திலும் ஒரு சிரிப்பு, ஒரே நேரத்தில் வெளிப்பட்டது! அந்தச் செப்புத்தகட்டில், சூரியன், சந்திரன், மற்றும் எனக்குத் தெரிந்திராத பல கிரகங்களின், படங்களும் கீறப் பட்டிருந்தது!

பின்பு பெரியவர் அமைதியானார்! அந்த நீத்துப் பூசணிக்காயை, இரண்டாகப் பிழந்து அதற்குக் குங்குமப் பொட்டும் வைத்தார்! பின்னர், சுளகில் இருந்த இரண்டு மாவால் செய்யப்பட்ட உருவங்களுக்கும், கறுப்புப் புள்ளிகள் போட்டு, அதைக் கொண்டு போய்க் கடலில் போடும்படி மாமாவிடம் கொடுத்தார். மாமாவும், பய பக்தியாக, அந்தச் சுளகுடன், நீத்துப் பூசணிக் காயையும், வாங்கிக் கொள்ள, சில ரூபாய் நோட்டுக்களும் கை மாறின!

மறு நாள், ஆச்சி மிகவும் சந்தோசமாய் இருந்தா! அதைப் பார்க்க எனக்கும் சந்தோசமாக இருந்தது! ஆச்சியும் அந்தத் தேசிக்காயால தான் இவ்வளவு பிரச்சனையும் எண்டு சொல்ல, எனக்குத் திக்கெண்டு இருந்தது! ஏனெண்டால் மூண்டு நாளைக்கு முதல், நானும் பேரின்பனும், கோயிலடியில விளையாடேக்க, கோயில் குப்பையில் அது கிடக்க, இருவரும் அதை எறிந்து, பந்து விளையாடிய போது, முருக்க மரத்தடியில் விட்டு விட்டோம்! அதில ஒரு சின்ன ஓட்டையும், இருந்த படியால், வைரவ சூலத்தில், குத்தி வைத்திருந்ததாக இருக்கலாம்!

அப்படியானால், அந்தச் செப்புத் தகடு? மில்லியன் டொலர் கேள்வி!

இன்று வரை எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை! நானும் தேசிக்காய் பற்றி, இன்று வரையும் வாய் திறக்கவில்லை!

Sunday, 8 July 2012

விலையேறும் நம்பிக்கைகள்!














கருமங்கள் கை கூடாமல்.
சறுக்குகிற நேரமெல்லாம்.
சனியன் நினைவுக்கு வருகிறான்!

ஆச்சியும், அப்புவும்,
அன்போடு சேர்த்து,
ஊட்டி வளர்த்த நம்பிக்கைகள்!

சனிபகவானுக்குச் சால்வையோடு,
சந்தனமும் பூசியுள்ளார்கள்!
பிரபலங்கள் எல்லாம்,
வரிசையில் நிற்கின்றன!
எல்லோரும் படித்தவர்கள்!
எனக்கும் பெருமையாக இருக்கிறது!

முதல் முறையாக,
அப்புவிலும் ஆச்சியிலும்,
அளவில்லாத மரியாதை,
அணையுடைத்துப் பாய்கிறது!

எண்ணைச் சட்டிகளும்,
பெரிதாகி இருந்தன!
புலத்தில் பெரிய பிரச்சனைகள்,
பெரிய சட்டிகளும் தேவை தான்!

வரிசை முடிவில்,
பெரியவர் சிரித்தார்!
ஓய்வு பெற்றவராம்!
முகத்தில் அமைதியின்,
முத்திரை தெரிந்தது!
சனியன் விலகியதால்,
சாந்தமாகியது போலும்!

சனியனுக்கு ஒருக்காச்,
சாந்தி செய்ய வேணும்!

விலையைச் சொன்னார்!
தலை கிறு கிறுத்தது!

சனியனைப் பார்த்தேன்!
அவனும் சிரித்தான்!
ஏளனச் சிரிப்பு!







  

Friday, 11 May 2012

நெடுந்தீவின் சிதறல்கள்



கோலம் கலைந்து கிடந்தது,
குறி காட்டுவான் துறைமுகம்!

கடற்கரை வாசம் தொலைந்து போய்,
கடற்படையும், தரைப்படையும்,
காவல் காத்தன!
காவியுடன் இன்னொரு புதிய படை!
புத்தனுக்குக் கூடப் புரிந்திருந்தது,
அந்தப் புனித பூமியின் மகிமை!

வரிசைப் பனை மரங்கள் தான்,
வழக்கம் போல வழியனுப்பின!

ஏழாத்துப் பிரிவு எறியும் அலைகள்,
இன்னும் வீரியம் இழந்து விடவில்லை!

ஆயிரம் பயணங்களில் அனுபவங்களோடு,
ஆடி அசைந்து நகர்ந்தது படகு!
அந்தக் 'குமுதினியின்' நினைவு,
மீண்டுமொரு முறை வந்து போனது!

தூரத்தில் கருமைக் கோடாகித்,
தெரிந்தது வருங்காலச் சிங்கப்பூர்!
குறுக்கும் நெடுக்கும் பறந்து,
முத்துக் குளித்தன, கடற் புறாக்கள்!

காகம் கரைவது கேட்டுக்,
காத்திருந்து விருந்தோம்பிய காலம்,
கனவாகிப் போனது போலும்!
வரிசை பிசகாத வேலிப் பயிர்கள்,
வனாந்தர வெளியில் சிதறிப் போயின!

வடமராட்சி மீனவர் தேடி வருகின்ற,
வாடையில் விளைந்த சூடைகளும்,
படையோடு கரையிறங்கும் பாரைகளும்,
பழைய நினைவுகளாய் வந்து போக,
பால் சுறாக்களின் துள்ளல் மட்டும்,
பசுமையாய் நினைவிருந்தது!

தரவை நிலங்களில் வளரும்,
கருக்குவாச்சி மரங்களில் நிழலாறிப்,
பொறுக்கிய எருக்கும்பல்கள் கூடக்,
கனவாகிப் போய் விட்டது!
கறவை மாடுகள் மேயும் தரவைகளில்,
நெருஞ்சி மரங்கள் படர்ந்து,
நெஞ்சில் கோடு கீறின!

கழிகளில் நிறைந்த மீன்கள் தேடி,
புலம் பெயரும் பறவைகள் நாடி வரும்!
கூழக்கடாக்களின் பாரத்தில்,
கங்குமட்டைகள் மெதுவாக முனகும்!
எருக்கிழறிப் பறவைகளின்
ஒருமித்த அசைவில்,
ஏரிக்கரைகளும் கருநிறம் கொள்ளும்!

வளம் தவழும் உன் ஏரிக்கரைகளை,
வெறும் வேலிகள் காவல் காக்கின்றன!
தலையில் சுமந்த தண்ணீர்க் குடமே!
நிலத்தில் உருளும் வெறும் குடமானதேன்?








ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!














கலிகாலம் பிறக்கக்,
காத்திருக்கும் கபோதிகள்!
கண்ணீர்க் குமுறலுடன் ,
கண்ணில் விரிந்தது அவலம்!
காற்றையும் நஞ்சாக்கிய,
கனரக ஆயுதங்களின் குமுறல்!
கார்வண்ணன் தேரோட்டாத,
குருசேத்திரப் போர்க்களம்!
கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,
குருதியில் குளித்தன சருகுகள்!
கூட்டாக நடத்திய கொலைக்களம்..
கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!
கொஞ்சிக் குலாவுகின்றன,
காந்தீயக் கோழைகள் !

கலிங்கத்து மன்னனின்,
கால் பட்ட தூசியும்,
காந்தீய தேசத்தின்.,,
கதை கேட்டு விலகியோடும்!
கலிங்கத்துப் பரணியில்,
கூழுண்ட பேய்களும்,
கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!
போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,
பாவத்தின் சின்னமாகும்!
பூவேந்தி நீ செல்லும்,
புத்தனின் தூபிகள்,
போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

துருபதா தேவியின்,
துகில் களைந்தவன் கூடத்.
தூயவனாகி விட்டான்!
உயுருள்ள பெண்ணொன்றின்,
உடைகள் கலைகையில்,
ஓடிவந்தான், கண்ணன்!
ஓவென்ற அலறலில்,
நாங்கள் அழுகையில்.
ஓடி ஒளித்தான்,அவன்!
கருகிய பயிர்களும்,
கண் விழிக்கும் காலம்,
கண் முன்னே விரிகிறது!
உரிமையின் தேவையின்,
உண்மையின் உணர்ச்சியில்.
ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

Friday, 30 December 2011

புதுமையான, ஆண்டொன்று பிறக்கட்டும்!















புதுமைகள் ஏந்திய,
புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்!
பூக்கள் மலர்வது போல!
புதுமையாக!
பூக்கள் மரங்களில் இருக்கட்டும்,
பிடுங்கி எடுத்து
மாலைகளாக்க வேண்டாம்!

சர வெடிகள் இல்லாமல்,
சாதாரணமாக மலரட்டும்!
வெடிச்சத்தம் கேட்டாலே,
வேதனை கலந்த நினைவுகளே,
வெடித்துக் கிளம்புகின்றன!

புத்தம் புதுச் சேலைகளும்,
பட்டு வேட்டி சால்வைகளும்,
தொட்டுப் பார்க்க நேரமின்றித்,
தம் பாட்டில் தூங்குகின்றன!
சீர் கொடுத்த நகைகள் கூடச்,
சேரிடம் தெரியாது,
வருடக் கணக்காக,
வங்கிப் பெட்டிகளில்,
வருகின்ற தலைமுறை பார்த்து,
ஆறுதலாகத் தூங்குகையில்,
இன்னும் நகை எதற்கு?

கஷ்டமென்று வரும்போது,
கை கொடுக்க என்கிறோம்!
இதுவரை,
இல்லாத கஷ்டமா,
இனிவரப் போகின்றது?

போதையில் மறையாது,
புதிய ஆண்டு பிறக்கட்டும்!
சொந்த நினைவோடு
சிந்தனையில் நிலைக்கட்டும்!
பரிசுகள் இல்லாமல்,
புத்தாண்டு பிறக்கட்டும்,

தர்மம் எங்கள்,
தலை காக்க வேண்டாம்!
தனக்கென எதுவுமில்லாமல்,
தவிக்கின்ற உறவுகளின்,
தன் மானத்தைக் காக்கட்டும்!


Saturday, 10 December 2011

பொய்மை வெல்கின்றது!

மாரீசன் என்ற மாயமானில்,
மதியிழந்த சீதா தேவியின்,
மயக்கம் போல,
இரவு பகலாகத்,
தினமும் பூக்கின்ற,,
இணையத் தளங்களின் பூக்களால்,
பாலும், நீரும்
கலந்த கிண்ணத்திளிருந்து,
பாலை மட்டும் பிரித்தெடுக்கும்,
வல்லமையில்லாத,
பாவப் பட்ட அன்னப் பறவையாய்,
உண்மையும் பொய்யும்,
ஒன்றுடன் ஒன்று,
குலவிக் கலவும் , உலகத்தில்,
உண்மையைத் தேடுகின்றேன்!

பொன்னும், மணியும்,
புன்னகைகளும் அணிந்து,
பொய்மை வலம் வருகின்றது.
மண்ணின் மைந்தர்கள்,
என்ற கவசம் பூட்டித்,
தென்றல் காற்றின் மென்மையோடு,
பொய்மை உலா வருகின்றது.
புனிதமேனும் பேழையில்.
பத்திரமாகப் பூட்டிவைத்துப்,
பீடத்தில் அமர்த்தித்,
தூவிய அர்ச்சனைப் பூக்களிலும்,
துளித் துளியாய்ச் சிந்திய,
துவர்ப்புக் கலந்த,
வேர்வைத் தடங்களிலும்,
பொய்மை கலந்து விட்டது.

தர்மத்தின் முக மூடியைப்,
போர்த்துக் கொண்டு,
சர்வ தேச அரங்குகளில்,
சந்தனக் காவியினால்,
நொந்து சிதைந்து போன,
எலும்புக் கூடுகளையும்,
கண்ணீரில் நிதம் நனையும்,,
தலையணைகளின் ஈரங்களையும்,
மூடி மறைக்கின்றது.
அமாவாசைக் காலத்தின்,
கும்மிருட்டை நோக்கி,.
நம்மை அழைத்துச் செல்கிறது,

பாம்பையும், கயிற்றையும்,
பிரித்தறிய இயலாத,
அத்துவிதப் பெருவெளியின்,
அனாதைகளாய்,
அரிதாரம் பூசிய பொய்மை,
அழைத்துச் செல்கின்றது.
அர்த்த ராத்திரியின்,
இருட்டின் மங்கல் வெளிச்சத்தில்,
அறிவென்ற விளக்கேந்தி,
அடையாளம் காண்போம்!
பொய்மைகளின் புகலிடத்தை,
வாய்மையால் அழித்திடுவோம்!
,






Tuesday, 29 November 2011

வேர்களை இழந்து வரும் விழுமியங்கள்


அது ஒரு கோடைகாலத்தின் மாலை நேரம். அன்றைய சூரியன், பகல் நேரத்துச் சந்திரன் போல வானத்தில் வெள்ளயாகத் தன்னை, அடையாளம் காட்ட எத்தனித்துக் கொண்டிருந்தான். கலங்கிய வண்டல் மண்  கலந்து  மஞ்சள்  நிறத்துடன் 'தேம்ஸ் நதி' அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.  சந்திரன், அந்த நதிக்கரையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதிரையில் இருந்தவாறே, கலங்கியிருந்த நதியின் அசைவுகளை அவதானித்துக் கொண்டிருந்தான்.  அவனது முகத்தில், அடர்த்தியாகத் தாடி வளர்ந்திருந்தது. அவனருகில் ஒரு சிகரெட் பெட்டியோன்று, தனது வாயை அகலத் திறந்த படி, ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கச் சுருள், சுருளாகப் புகை வளையங்கள், அவனது வாயாலும் மூக்காலும் வந்து கொண்டிருந்தன.  அங்கு வந்த சில ஜப்பானியர்களுக்கு, அவனது இருப்பு ஒரு இடைஞ்சலாக இருந்தது.  'டவர் பிரிட்ஜை' படமெடுக்க, சரியான 'ஆங்கிள்' கிடைத்த போது, இடை நடுவில் நந்தியாக அமர்ந்திருந்த அவனது தோற்றம், லண்டனைப் பிரதி பலிக்கும் என்று  அவர்கள் நினைக்கவில்லைப் போலும். .ஒரு முற்றுமுணர்ந்த ஞானியைப் போல, அவர்களது மனதில் உள்ளதை உணர்ந்தவனாகச் சற்று விலகி அமர்ந்தவன், படமெடுப்பு ஆராவாரம் அடங்கியதும் , திரும்பவும் தனது பழைய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.
சந்திரன் நன்றாகப்  படித்தவன். அவனது தந்தையார் ஒரு தமிழாசிரியர். 'அடுத்த சம்பளம் வரட்டும்' என்று தேவைகளைப் பிற்போடும் நிலையில் வாழ்ந்தாலும், கல்வியே மூலதனமென நினைக்கும் சராசரி யாழ்ப்பாணத்து தமிழாசிரியர் வகையைச் சேர்ந்தவர். ஒருவாறு, சந்திரனை நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்த்து விட்டார்.ஆரம்பத்தில், விடுதி வாழ்க்கை சந்திரனுக்குப் பிடிக்கவில்லை. அங்கு தொங்கிய அந்தப் பழைய தண்டவாள மணியைப் பார்க்கும், ஒவ்வொரு தடவையும் ஏனோ அவனுக்குச் சிறைச்சாலையின் ஞாபகம் தான் வரும். இவ்வளவுக்கும் அவன் சிறைச்சாலையை ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை. நாளடைவில் விடுதி வாழ்க்கையின், நெளிவுசுளிவுகள் தெரிந்த போது, விடுதி வாழ்க்கை அவனுக்குப் பழகிப் போய் விட்டது மட்டுமல்ல,  அது தந்த சுதந்திரமும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த விடுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், மாணவர்களை விடுதியிலிருந்து நல்லூர்க்  கந்தசாமி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போவது வழக்கமாக இருந்தது. பனிக் குளிரிலும். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, குளித்து வேட்டியையும் கட்டிக் கொண்டு வரிசையில் நடந்து செல்ல வேண்டும். உணர்ச்சிகள் மெல்ல, மெல்ல முகிழ் விடுகின்ற வயதில் அவன் அப்போது இருந்தான்.
இந்தக் காலத்தில் தான் அவனுக்குத் தேவகியின் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். சில வெள்ளிக்கிழமைகளில், அந்த அழகிய தென்னம்பிள்ளை வீட்டின் வாசலில், அவளை அவன் கண்டிருக்கின்றான். ஆட்களைப் பிரமிக்க வைக்கும் அழகில்லை என்றாலும், அவளது முன் பற்கள், இரண்டுக்குமிடையில் இருந்த இடைவெளி அவனுக்குப் பேரழகாகத் தெரிந்திருக்க வேண்டும். கோவிலிலிருந்து திரும்பி வரும்போது,  அவள் கல்லூரிக்குப் போவதற்கான, சீருடையுடன் நிற்பதையும் சந்திரன் அவதானித்திருக்கின்றான்.சில வேளைகளில், அவனுக்காகவே தேவகி காத்திருப்பது போல நினைத்தாலும், அப்படி ஒருநாளும் இருக்காது என்று அவனது ஏழாவது அறிவு அவனை எச்சரிக்கை செய்தது. சில வேளைகளில் தேவகி, தன்னைப்பார்த்துச் சிரித்தது போலவும் இருக்கும். அந்த நாட்களில், நல்லூர் முருகனும் அவனை மட்டும் பார்த்துச் சிரிப்பது போல அவனுக்குத் தெரியும். உயர் தரப் பரீட்சை, நெருங்கியபோது தனது கவனம் முழுவதையும் படிப்பிலேயே  செலுத்தினான். கல்வி என்னும் வேள்வித்தீயில், தன்னை ஆகுதியாக்கினான் என்று கூடச் சொல்லலாம்.
பரீட்சை முடிவுகள் வந்த போது, மற்ற விடுதி வாசிகளைப் போல அதிகாலையிலேயே கல்லூரிக் காரியாலயத்தின் வாசற்படிகளில் காத்திருந்தான். கல்விக்குள்  அரசியலைப் புகுத்திய அந்தத் தரப் படுத்தல் முறை அறிமுகப் படுத்தப் பட்டுச்  சில வருடங்கள் தான் இருக்கும். பானையில் இருந்தது அப்படியே அகப்பையில் வந்திருந்தது. ஆனால் அவன் எதிர் பார்த்திருந்த பொறியியல் துறை அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனிலும் பார்க்க, அவனது திறமை மீது  மற்றவர்கள் தான் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். விஞ்ஞானத் துறையில் தான் அவனுக்கு இடம் கிடைத்திருந்தது. கோயில், குளமெல்லாம் ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் பேராதனை நோக்கிய பயணத்தில் கவனத்தைச் செலுத்தினான்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மார்க்கஸ் பெர்னாண்டோ மண்டபத்தில்  தங்குமிடமும் கிடைத்தது. அந்தக் காலத்தில் தான்  அவனுக்கு அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஒரு காலத்தில் அவனது கனவுக் கன்னியாகிய அதே தேவகி, தனது நண்பிகளுடன் நடந்து போவதைக் கண்டான் . கழுதைகள் கூட மினுமினுக்கும் அந்தக் இளமைக் காலத்தின் வயதில், தேவகி  ஒரு தேவைதையாக அவன் கண்களுக்குத் தெரிந்தாள். அருகில் வந்து, நினைவிருக்கின்றதா என்று கேட்டாள். அவனது வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளுக்குப் பதிலாகக் காற்றுத் தான் வெளியில் வந்தது. தலையை மட்டும் ஆட்டினான்.எனது பெயர் தேவகி என்றாள். தானாக வந்து அவள் அறிமுகம் செய்து கொண்ட விதம் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில், அவள் ஏறி நிற்பது போல அவனுக்குத் தெரிந்தது. நாக்குத் தடுமாற நா ...ன் சந்திரன் என்று உளறினான். அவ்வளவு தான், அவர்களுக்குள்  நடந்த முதல் உரையாடல். சந்திரன் தனக்கு இறக்கைகள் முளைத்து விட்டதாக உணர்ந்தான், அதைத் தொடர்ந்து அவர்களின் சந்திப்புக்கள் அவ்வப்போது நடந்தன. இருவரும் ஒருவரையொருவர் விரும்பினாலும், வெளிப்படையாக அதை வெளிப்படுத்தத் தயங்கினார்கள்.
காலம் மட்டும் எவருக்காகவும் காத்திருக்கவில்லை. அவர்களது  அவ்வப்போதைய உரையாடல்களிலிருந்து தேவகி மருத்துவத் துறையில் படிக்கிறாள் என்றும், இரத்தினபுரியில் மாமாவின் கடையிருக்கின்றது என்றும், அங்குதான் உயர்தர வகுப்புப் பரீட்சை எடுத்ததாகவும். போட்டியில்லாததால், இலகுவாக மருத்துவத் துறை கிடைத்ததாகவும் தெரிந்தது. அவனிலும் பார்க்க, அவளுக்குப் புள்ளிகள் மிகவும் குறைவாகவே கிடைத்திருந்தது. முறைப்படி பார்த்தால்  அவனுக்குக் கோபம்  வந்திருக்க வேண்டும். பதிலாக அவளது குறுக்கு வழி சென்ற  கெட்டித் தனத்தை எண்ணி, மகிழ்ச்சியே ஏற்பட்டது. தானும் அப்படி வேறொரு பிற்போக்கான இடத்திலிருந்து  ஏன் சோதனை எழுதவில்லை  என்று தன் மீது தான் கோபம்  வந்தது.
மூன்று வருடங்களின் முடிவில் கையில் ஒரு மட்டை கிடைத்த போது  உலகத்தின் உச்சியின்  மேல் ஏறி நிற்பதாக உணர்ந்தான். அந்த உணர்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.     வீட்டில் ஒரு தங்கை இருப்பதை அம்மா அடிக்கடி நினைவு படுத்தத் தொடங்கினாள். உலகத்தில் எங்கு பிறந்தாலும், இந்த யாழ்ப்பாணத்தில் வந்து பிறக்கக் கூடாது. என்று அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொள்வான். அன்போடு சேர்த்து, பொறுப்புக்களையும் ஊட்டிவிடுகின்றார்களே என்று எண்ணுவான். அப்போது தான் அந்த நண்பனின் ' லண்டன்' கடிதம் வந்தது.  நீ, ஊரில இருந்து, ஒன்றையும் வெட்டி விழுத்த ஏலாது மச்சான்,  இஞ்ச வெளிக்கிட்டு வா' என்று எழுதியிருந்தான்.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இதைச் சொன்னபோது, ஆரம்பத்தில் கொஞ்சம் நிலை குலைந்து போனாலும், நாட்டு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒருவாறு சம்மதித்தார்கள். ஊரில் தான் செய்திகள், எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன? தேவகிக்கும் தெரிந்திருக்க வேண்டும். தன்னை அவசரமாக வந்து சந்திக்கும் படி கூறி ஒரு கடிதம் அனுப்பியிருந்தாள். நல்லூர்க் கந்தசாமி கோவிலில் அடுத்த வெள்ளிக்கிழமை சந்திப்பதாகப் பதிலனுப்பினான். அவனைக் கண்டதும் தேவகி அழுதாள். தன்னை விட்டு விட்டுச் சந்திரன் ஓடிப் போகப் போவதாகக் குற்றம் சாட்டினாள். தனது படிப்பு முடிந்ததும், தன்னையும் லண்டனுக்குக் கூப்பிட வேண்டும் என்று சத்தியம் பண்ணித் தரவேண்டும் என்று அடம்  பிடித்தாள். சத்தியமெல்லாம் எதற்குத் தேவகி? நான் தான் சொல்லுறேனே! என்மீது உனக்கு நம்பிக்கையில்லையா? என்று கூறிப் பார்த்தான். ஆண்களை நம்ப முடியாது, சந்திரன். அவனுக்கு, அவன் மீதே கோபம் வந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், சரி. சத்தியமா உன்னைக் கூப்பிடுவான், போதுமா? என்றான். இல்லை, கற்பூரம் மீது சத்தியம் பண்ணித் தரவேண்டும் என்று பிடிவாதமாக நின்றாள். இங்கு சத்தியம் பண்ணுகிறீர்கள் தானே, அதைச் சாமிக்கு முன்னால் செய்தாலென்ன? என்று கேட்டாள். எங்கிருந்து தான் அந்த அசாத்தியத் துணிவு வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. தர தரவென்று அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, கோவிலுக்குள்ளே போனான். எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தின் மேல் கைவைத்து, அவளை அங்கு கூப்பிடுவதாகச் சத்தியம் செய்து  கொடுத்தான். அவனது உடம்பு முழுவதும் நன்றாக வேர்த்திருந்தது.
ஒருவாறு  லண்டன் 'ஹீத்ரு' விமான நிலையத்தில் வந்து இறங்கியாயிற்று. நண்பன் வெளியில் காத்திருப்பான். அரை மணித்தியாலத்தில் வெளியே போய் விடலாம் என எண்ணியபடி ' குடிவரவு ' பலகை காட்டிய வழியைப் பார்த்து நடந்தான். அந்த நாளைய கறுத்த நிறப் பாஸ்போர்ட் தான் அவனது. 'சோஷலிச ஜனநாயகக் குடியரசு' என்று உலகத்தில் அப்போதிருந்த அத்தனை. ஆட்சியமைப்பு முறைகளும் அதில் எழுதப் பட்டிருந்தன.  அப்போது தான் அதை வாசித்துப் பார்த்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அதைக் கண்டதும், அந்தக் குடிவரவுப் பகுதிக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த ஒருவர், அவனை அருகிலிருந்த கதிரைகளில் ஒன்றைக் காட்டி உட்காரும்படி சொன்னார். என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன் தான் என்று மனதினுள் நினைத்துக் கொண்டான். தனக்குத் தரப்பட்ட கதிரை, தான் ஒரு பொதுநலவாய நாட்டில் இருந்த வருவதால் தான் என்று நினைத்து மனதில் ஆறுதலடைந்தான். இந்திய, பாகிஸ்தானிய கடவுச்சீட்டுக் காரருக்கும் இதே போன்ற மரியாதை அளிக்கப் பட்டதே , அதற்கான காரணமாகும். பின்பு ஆறு மணித்தியாலங்கள் கழித்து, வெளியில் வந்தபோது தான், வெள்ளைக்காரனின் வரவேற்பு அவனுக்கு விளங்கியது. இடையில் நடந்தவற்றை அவன் மறக்கவே விரும்பினான்.
வெளியில் வந்த போது, நண்பன் காத்திருந்தான். நண்பனிடம் உள்ளே நடந்தவற்றைச் சொன்னான். நண்பன் கூறிய பதில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. 'யூ ஆர் வெரி லக்கி மச்சான்'!
ஒரு மாதிரி நண்பனின் அறையில் ஒரே கட்டிலை இருவரும் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்தார்கள். அத்துடன் அவன் பள்ளிக்கூடத்துக்கும்  காசு கட்ட வேண்டும். வீட்டில் இருந்து கொண்டு வந்த, இருநூறு பவுண் பெறுமதியான, பிரயாணக் காசுக்கட்டளையும் வீட்டுக்குத் திருப்பியனுப்பி விட்டான். நண்பனிடம் ஒரு சிறு தொகையை கடனாக வாங்கிக் கொண்டு  வேலை  தேடும் படலத்தில் இறங்கினான். 'சோசல் செக்குரிடி' நம்பர் இல்லாமல் வேலை செய்ய முடியாது. நண்பன் ஒரு இலக்கம் தந்தான். அந்த இலக்கம் 'வாகீசன்' என்பவருடையது. ஒரு எரிபொருள் நிரப்பும் ஒரு கடையில் இரவு வேலை கிடைத்தது. அந்தக் கடையில் முகாமையாளராக ஒரு வயது முதிந்த ஒரு தமிழர் தான் இருந்தார். அவர் இவனை அன்போடு தம்பி வாகீசன் என்றே அழைப்பார். காலையில் வேலைக்கு வரும் அவர் அவனோடு கதைக்கும் போது, சில வேளைகளில் தம்பி வாகீசன், என்று அழைக்கும் போது, அவனது பெயரே அவனுக்கு மறந்து போயிருக்கும். சில வேளைகளில், தம்பி உன்னோடு தான் கதைக்கின்றேன் என அவர் நினைவு படுத்தும்போது, திடுக்கிட்டுத் தன்னை சுதாரித்துக் கொள்வான். பின்பு வேலை முடிந்ததும் அப்படியே பாடசாலைக்கு ஓட வேண்டும். பின்பு வீட்டுக்கு வந்து தான், சமையல், குளிப்பு. இரவு திரும்பவும் வேலை.  இவ்வாறு, இந்த வாழ்க்கை, இரண்டு வருடங்கள் ஓடியது. நீண்ட விடுமுறைக் காலங்களில், இரவும் பகலும் வேலை செய்து வீட்டிற்கு வந்து குளிக்கும் போது, ஏற்கனவே அரைச் சூட்டில் இருக்கும் நீர் உடம்பின் வெப்பத்தில், கொதி நிலைக்குக் கூட வந்து விடுவது போல உணர்ந்திருக்கிறான்.
மிகுந்த கடின உழைப்பாலும், நண்பனுடன் செலவுகளைப் பகிர்ந்து கொண்டதாலும், அவனால் சிறிது தொகையைச் சேமிக்கக் கூடியதாய் இருந்தது. அப்போது தான் அம்மாவின் கடிதம் வந்தது. அவனது தங்கையின் திருமணத்தை  வெகு விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தாங்கள் அதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபடுவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. சில நாட்களின் பின் தேவகியின் கடிதமும் வந்தது. தனது படிப்பு முடிந்து விட்டதாகவும், வாக்குறுதி அளித்தபடி தன்னை அங்கு கூப்பிடும் படியும் கேட்டிருந்தாள். அவனது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காதலுக்கும், பாசத்திற்கும் இடையேயான போட்டி. முடிவெடுக்க முடியாமல் சந்திரன் திணறினான், தேவகியிடம் ஒரு வருஷம் மட்டும் பொறுத்திருக்கும் படி தொலைபேசியில் கெஞ்சினான். மறுமுனையில், அவள் பத்திரகாளியாகினாள்/. இனிமேலும் உன்னைக் காணாமல் இருக்கமுடியாது என்றாள். இறுதியில் தேவகியை முதலில் கூப்பிடுவது என்றும், ஒரு வருடத்தில் தங்கையின் திருமணத்தைச் செய்யலாம் என்றும் முடிவு செய்தான். இந்த முடிவே அவனது முடிவாகவும் இருக்கும் என்று, அவன் அப்போது எதிர் பார்த்திருக்கவில்லை.
தேவகியும் வந்து சேர்ந்து விட்டாள். வாழ்க்கையில் ஏதோ அர்த்தம் பொதிந்து கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது. வெளி நாட்டு மருத்துவர்களுக்கான 'மொழிப் பரீட்சை'யிலும் சித்தியெய்தி விட்டாள். தேவகி வந்ததும்  தனியாக ஒரு சிறிய வீடொன்று வாடகைக்கு எடுக்க வேண்டி ஏற்பட்டதால். செலவுகளும் அதிகரித்து விட்டது. தேவகியின் சில சொந்தங்களும், அடிக்கடி வந்து போகத் தொடங்கின. அவர்கள் கன  காலத்திற்கு முன்பு இங்கு வந்தவர்கள்.அவர்களது 'சமூக அந்தஸ்து' மிகவும் உயர்ந்ததாக அவர்கள் காட்டிக் கொண்டார்கள். தேவகியின் காதில் அடிக்கடி குசு குசுப்பார்கள். இதனைப் பெரிதாகச் சந்திரன் கணக்கில் எடுக்கவில்லை.
சில வாரங்கள் கழிந்ததும், தேவகிக்கு 'பெர்மிங்கம்; என்னும் இடத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. அவளது வேலையின் நிமித்தம், அவள் அங்கேயே ஆஸ்பத்திரி விடுதியிலேய தங்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில்  சில வாரங்களுக்கு ஒரு முறை வந்து போவாள். காலம் செல்லச் செல்ல, அவள் வருவது  குறைந்து விட்டது.   சந்திரனது வாழ்க்கையும், பழையபடி வேலை, பள்ளிக்கூடம் என்ற வட்டத்திற்குள் மீண்டும் சுற்றத் தொடங்கியது.
ஒருவாறு தங்கையின் திருமணத்துக்கெனக் கடன் வாங்கிக் கொஞ்சக் காசும் அனுப்பியாயிற்று. காசை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தவனை, அம்மாவின் கடிதம் தான் வரவேற்றது. காசனுப்பி விட்டபடியால், மனதில்  இருந்த குற்ற உணர்வு முற்றாக அவனிடமிருந்து விடை பெற்றிருந்தது.  அன்றைய வானம் கூட முகில்கள் இன்றி மிகவும் தெளிவாக இருந்தது. வழக்கமாக இறைவன் திருவருளை முன்னிறுத்தி, நலம் விசாரித்த படி தான் அம்மாவின் கடிதம் தொடங்குவது வழமை, இன்று வித்தியாசமாக, அன்புள்ள சந்திரனுக்கு என்று தொடங்கி, சீதனத்தை முன்னிறுத்தி, பெண்ணைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்ற மாப்பிள்ளைகளுக்குக் கழுத்தை நீட்டுவதிலும் பார்க்க,  நாட்டுக்காகச் போராடுவது மிகவும் உயர்ந்தது  எனக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, அவனது தங்கை இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும்,  அப்பா  அவளையே நினைத்தபடி பித்துப் பிடித்த மனிதனைப் போல இருப்பதாகவும், தனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் எழுதியியிருந்தார். இயலுமானால் அவனை ஒரு முறை வந்து போகும்படியும் கேட்டிருந்தார்.
அவனது இதயத்தில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. யாராவது அப்போது, தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான், அவன் அது வரை அறிந்திராத ஒரு ;வெறுமை' அவனை ஆட்கொண்டது.
சில மாதங்களில், தேவகியின் போக்கில் மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அவளது வருகைகள், வெகுவாகக் குறையத் தொடங்கின. வரும்போதும் அவனோடு முகம் கொடுத்துப் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். தனது உறவினர்கள் வீடுகளிலேயே அதிக நேரத்தைச் செலவு செய்தாள். மச்சான், தேவகியினது போக்கு எனக்குச் சரியாகப் படவில்லை. எதற்கும் அவளோடு தனியாக இருக்கும்போது கதைத்துப் பார் . அவளுக்கு ஏதோ பிரச்னை இருக்கின்றது போலத் தெரிகின்றது என்று எனது நண்பன் கூடக் கூறினான். சந்திரனுக்கு நண்பன்   மீது தான் கோபம் வந்தது.
வீட்டுக்கு வந்து கதவைத் திறந்தவனது பார்வையில் படக்கூடியதாக அந்தக் கடிதம் வைக்கப் பட்டிருந்தது. அவனுக்கு 'பில்' களையும், கடனட்டைக் கடிதங்களையும் தவிரக் கடிதங்கள் வருவது மிகவும் குறைவு. கலியாணக் காசு அனுப்பியபின்பு அம்மாவின் கடிதங்களுமவருவது குறைந்து விட்டது. தேவகி, டெலிபோனில் கதைத்துக் கொள்ளுவாள். எனவே ஆச்சரியத்துடன் கடிதத்தை எடுத்தவன், கடிதத்தின் மேலுறையில்  தேவகியின், கையெழுத்தை அடையாளம் கண்டு கொண்டான்.

அன்புள்ள சந்திரனுக்கு,
சில நாட்களாக, என்னில் சில மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள். இங்கு வந்த பின்பு எனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டது. நீண்ட காலமாகத் தொடர்புகள் விட்டுப் போனாலும். 'தானாடாவிட்டாலும் தன் சதையாடும்' என்பது என்னைப் பொறுத்த வரையில் உண்மையாகப் போய் விட்டது. எனது உறவினரது மகன் ஒருவரும், இங்கு 'பெர்மிங்கமில்' ஒரு ;நல்ல 'பதவியில்' வேலை செய்கின்றார். தூரத்து வழியில், அவர் எனக்கு மச்சான் முறையும் கூட. அவர் மிகவும் முற்போக்கானவர். இங்கு  வளர்ந்த படியால், அவ்வாறு இருக்கலாம். நீங்களும் நல்லவர் தான். ஆனால் இருவருக்குமிடையே உள்ள 'இடைவெளி' மிகவும் அதிகம். இது எல்லாம் இங்கு சர்வ சாதரணமாக நடப்பவை தான் என்று எனது உறவினர்கள் கூறுகின்றார்கள். உங்களுக்கு வயசிருக்கின்றது. ஊருக்குப் போய், உங்கள் அப்பா, அம்மாவின் ஆசீர்வாதத்துடன் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்யுங்கள்......

கடிதத்தை அவன் மேலும் படிக்கவில்லை, கண்ணீர் அவனது கண்களை மறைத்தது. கடிதத்தை மடித்து, சாமிப் படங்களிருந்த தட்டில் வைத்தான். நல்லூர் முருகனின் படமொன்றும் அதில் இருந்தது. அவனைப் பார்த்து, அவர் சிரிப்பது போல் இருந்தது.
இப்போதெல்லாம் வேலைக்குப் போகின்றான். படிப்பு முடிந்து இரண்டாவது மட்டையும் கைக்கு வந்து விட்டது, அந்த மட்டைகளுக்கேற்ற ஒரு வேலை ஒன்றைத் தேடித் திரிகிறான். அது ஒரு வேளை  அவனது 'அந்தஸ்தை' மாற்றக் கூடும். வேலை முடிந்தவுடன், நேரே  இந்தத் தேம்ஸ் நதிக்கரைக்கு, இந்தக் கதிரைக்கு வந்து  விடுகின்றான். இரவாகியதும் திரும்பவும், அந்த வேலைக்குப் போய் விடுகிறான். அந்தக் கலங்கிய நதியின் அசைவில், தனது மனதைக் காண்கிறானோ என நான் நினைப்பதுண்டு!

Sunday, 20 November 2011

நினைவுகளில் விளக்கேற்றுவோம்















நந்திக் கடலும், கிளாலி நீரேரியும்,
வற்றிப் போகாமல்,
வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர்,
வடிந்தோடி நிறைத்திருக்க,
வடக்கிலும், கிழக்கிலும்.
வசந்தம் தேடியவர்களின்,
வாடிப் போன முகங்களில்,
கோடுகள் மட்டும் விழுகின்றன!
அரேபியாவின் பாலைவனங்களை,
அழகு படுத்தும் 'பிரமிட்டுக்களாக';
அரைக் காசுக்கும்  பயனில்லாத,
அபிவிருத்தித் திட்டங்கள்
ஆயிரமாய் அரங்கேறுகின்றன!

அந்தக் காலத்து வாழ்வில்,
ஆடம்பரங்கள் இல்லை!
அரை வயிற்றுக் கஞ்சியும்,
ஆனையிறவின் அசைவில்!
ஆனாலும் வாழ்வில்,
அர்த்தம் இருந்தது!
வளவைச் சுற்றி வர,
வேலிகள் இருந்தன!
விடி வெள்ளி கூட.
அருகில் நெருங்கியது!
யாருக்குத் தெரியும்?
விட்டில் பூச்சிகளுக்கு,
விளக்கு வைக்கப் பட்டிருகிறதென்று!

வினாக்கள் தொடர்கின்றன!
விடைகள் மட்டும்,
கண்ணாமூச்சி ஆடுகின்றன!
தாயைக் கட்டிப் பிடித்த,
சேயின் குரல்வளைகள் நெரித்துத்,
தாய் கூடப் பேயாகினாள்!
வென்றாலும், தோற்றாலும்
வீர மறவர்கள் நீங்கள்!
விடை பெற்றுப் போய்விட்ட,
வீராங்கனைகள் நீங்கள்!
விதையாகி விட்ட உங்களை,
வியாபாரப் பொருளாக்கி,
விற்பனைச் சந்தையில்,
விலை பேசுகின்றார்கள்!

வீழ்ந்து விட்ட வீரர்களே!
வேதனையின் விம்மலுடன்,
விழி கனக்க நினைக்கிறோம்!
இழப்பின் பரிமாணம்.
ஏளனத்துடன் சிரிக்கின்றது!
நீங்கள் பாய்ந்த போது,
நாங்களும் பாய்ந்தோம்!
களம் வென்று வந்த போது,
புளங்காகிதம் கொண்டு,
வாழை மரங்கள் நட்டு,
விடுதலைக் கீதமிசைத்தோம்!
வானத்தில் பறந்த போது,
நாங்கள் கூடப் பறந்தோம்!

ஆனாலும்,
நீங்கள் வீழ்ந்த போதில்.
நாங்கள் வீழ்ந்து விடவில்லை!
நாய்களைப் போல்,
நமக்குள்ளே  போட்டிகள்!
கருவூலங்களின் திறப்புகளும்,
கை மாறி விட்டன!
அக்கினியில் குளித்தும்,
அழிந்து போகாத, சீதையின்
தூய்மை உங்களுக்கு!
உங்கள் கனவுகள்,.
நனவாகும், காலம் வரை,
நினைவுகள்  சுமந்து.
நெஞ்சினில் விளக்கேற்றுவோம்!










Wednesday, 16 November 2011

புலம் பெயர் வாழ்வு


























காய்ந்து போய் விட்ட,
காலப் பூக்களின் இதழ்களாய்.
சருகாகிப் பறக்கும்,,
சரித்திரங்களின் சாட்சிகள்!
கடாரம் வரைக்கும்,
கப்பற்படை நடத்திக்,
கோவில் குடமுழுக்கு நடத்தியவனின்,
குலக் கொழுந்துகள்!
அலை புரளும் கடல்களையும்,
ஆகாய வீதிகளையும் நிதமும்,
அளந்த படி அலையும்,
ஆதரவில்லாத அகதிகள்!
இரவுப் புறாக்கள் மட்டும்,
குறு குறுக்கும் பேரிருளில்
பனி படிந்த கண்ணாடி ஜன்னல்களில்
பார்வை நிலை குத்தப்,
பேய்கள் உறங்கையிலும்
காவல் வேலைக்காய்
விழித்திருக்கும் விழிகள்!
மரக்கறிக் கடைகளின்,
மூட்டை தூக்கிகள் ஓய்வெடுக்க,
முதுகெலும்பை மலிவாக்கி,
மூட்டையடிக்கும் தோள்கள்!
மீசை மயிர் கருக்கும்,.
மின்னடுப்புக்களின் வெக்கையில்
பாண்களைப் பதம் பார்க்கும்,
பழகிப் போய் விட்ட விரல்கள்!
அடி வயிற்றில்,
வண்ணத்துப் பூச்சிகள் பறக்க,
அடுக்கு மாடிக் கட்டிடங்களின்.
அழகிய கண்ணாடிகளைக்
கழுவும் கயிறுகளில் தொங்கும்,
காப்புறுதியில்லாத உயிர்கள்!
கரப்பொத்தானின் மரபணுக்கள்,
கலந்து விட்ட பிறப்பாக,
காலநிலை மாற்றங்களோடு,.
கூர்ப்படையும் உடல்கள்!
எங்களின் வருகையின் பின்,
புயல் காற்றில் அழிந்த,
பூசனிக் கொடிகளின் காய்கள்
சந்தைக்கு வருகின்றன!
கைவிடப் பட்ட பழமரங்கள்,
கண் திறந்து பார்த்த பின்,
மீண்டும் காய்க்கின்றன!
பொருளாதாரத்தின் விதிகள்
புதிதாக எழுதப் படுகின்றன!
கைகளினால் கார் கழுவும்,
கடைகள் கூட உதயமாகின்றன!
அம்மாக்களும், அப்பாக்களும்,
அயல் நாடு பார்க்கையில்,
அவர்கள் கட்டியதாய், நினைத்த,
ஆகாயக் கோட்டைகளின்,
அத்திவாரங்கள் ஆடுகின்றன!
அம்மியில் கால் மிதித்து,
அருந்ததிக்குக் கை காட்டி,
ஊரறிய நடந்த திருமணங்கள்,
உடைந்து நொறுங்குகின்றன!
விடிகாலையின் விரகதாபங்கள்,
விடை பெற்று விடுகின்றன!
ஊருக்காக வாழ்க்கையாய்,
உள்ளே எரிகின்றன, மனங்கள்!
அறுந்து தொங்குகின்றது,
ஆயிரம் ஆண்டு காலத்துச்,
சமுதாயச் சங்கிலி!
அரைநொடியில் அந்தஸ்துகள்,
மாறி விடும் காலத்தில்,
பணத்தை நோக்கிய பயணம்,
பந்தயமாக மாறுகின்றது!
இனத்தின் விடுதலை கூடப்,
பணத்திற்கு விலை போகின்றது!

Tuesday, 15 November 2011

முதுமை
















கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன்.
கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு!
கால்கள் மூன்றாகி நடக்கையில்,
மனம் மட்டும், அங்கும் இங்குமாய்,
மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது!
காலம் தான் எவ்வளவு குறுகியது!
கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில்,
யாரோ பந்து விளையாடுகின்றார்கள்!
களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள்,
காதுக்கு இனிமையாய் இருக்கின்றன!
கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது!
அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில்,
ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது!

முதுமை என்பது, முந்திய அனுபவங்களின்
இரை மீட்புக் காலம் போலும்!
பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன!
இழந்து போன சந்தர்ப்பங்கள்,
எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை!
இமை வெட்டும் நேரத்திற்குள்
வாழ்வு முடிந்து போய் விடுகின்றது!
வரட்டுக் கவுரவங்களின் பிடியில்,
வாழ்க்கை நசுங்கிப் போய் விடுகின்றது!

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,
எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,
இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,
இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!
உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.
அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,
அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!
இருக்கும் போதே வாழ்வதை விட்டு,
எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,
சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,
வேதனை மட்டும் முதுமையாகின்றது!

இளமையெனும் நதியில் மிதக்கும் படகாகி,
காலமெனும் தரையில் உருண்டோடி,
கடலன்னையின் கரையில் சங்கமமாகும்,
நதியொன்றின் நிலையில், மிடுக்கிழந்து.
மெல்லிய ஒரு கீற்றாகி ஓடுகிறது, வாழ்வு!
விடியும் பொழுதுகள், வேதனை தருகின்றன!
வெந்து போன நெருப்புக்குள், தணலாக,
வேதனைகள் உள்ளேயே குமுறுகின்றன!
இளமைக் காலத்தின் வெறித்திமிரில்
உலகம் கூட சிறிதாகத் தெரிந்தது!
தேவைகளை மதிக்கும் உலகத்தில்,
தேவையே இல்லாத ஒரு பொருளாகி,
தவிர்க்க முடியாத, அந்த விடுதலைக்காகத்,,
தயாராவது தான் முதுமை போலும்!

Wednesday, 12 October 2011

தாய் நிலம்




















வன்னி மண்ணின் வகிடெடுத்த
வரம்புகளும் வாய்க்கால்களும்
வளமுடன் வாழ்ந்து விட்ட நாட்களை,
நாட்காட்டியின்  கிழிந்துபோன இதழ்களாக்கி,
பாளம், பாளமாய் பிளந்து கிடந்தன!
கூரை மீது கட்டிய விறகுகளுடன்
ஊர்வலம் வந்தன உல்லாசப் பேருந்துகள்!
காய்ந்துபோன கண்ணீர்ச் சுவடுகளோடும்
தேய்ந்து போன செருப்புக்களோடும்
ஊர்ந்து திரிந்தன உயிர்க் கூடுகள்!

கொதிகணைகள் எறிந்த   பெரு நெருப்பில்
பாதி  முறிந்து போன  பனை மரங்களின்,
செத்துப் போன உச்சிகளின் மீது,
பச்சைக் கிளிகள் சோடி சேர்ந்திருந்தன!
அரச மரங்களின் அடிவாரங்களில்
பிரசவ காலத்துப் பெண்களின்
அடி வயிற்றின் வட்டங்களாய்க்
குடி வந்திருந்தன புத்த கோவில்கள்!
புத்த பிரானின் புனிதம் கலையாது
பத்திரமாகப் பாதுகாத்தன,காவலரண்கள்!

அனுராத புரத்தைத்  தாண்டியதும்,
அடிமனத்தைப் பிசைகின்றன
அழிவின் ஆறிப்போன வடுக்கள்!
ஓமந்தைச் சாவடியில் இருந்து,
ஊர்காட்டிக் கற்களின் அம்புக்குறிகள்,
நாக தீபத்திற்குப்  பாதை காட்டுகின்றன!
சர்வதேச விமான நிலையங்களின்,
நுழை வாயிலகளின்  வனப்புடன்,
வீதியோரம் நிறைந்த விளம்பரங்களுடன்,
யாழ்ப்பாணம், உங்களை வரவேற்கின்றது!

உடைந்து போன கட்டிடங்களின் சுவர்களில்
வடக்கின் வசந்தம் விளம்பரம் செய்தது!
கருகிப் போன வடலிகளைக் காக்கக்
கருக்குமட்டை வேலிகள் தேவையிளந்தன
ஆரியகுளத்தின் தாமரைக் கொடிகள்
அனுராதபுரத்தின் 'புனித நகரமாய்;
ஆரிய குளத்தை மாற்றியிருந்தது!
தாவணிகள் இல்லாத சேலைகளுக்கிடையில்
தர்மத்தின் காவலர்களின் மழித்த தலைகள்!

கண்டி வீதியின், கச்சேரிச் சந்தியில்,
கெமுனுப் படையணியின் தலைமை இருந்தது!
பழைய பூங்காவின் அழகிய மரங்கள்,
பாதியாய்க் குறைந்து, புதியதாய் வளர்ந்தன!
வடக்கையும், தெற்கையும் இணைக்கும் பாலமாய்
வங்கிகள் தங்களை விளம்பரம் செய்தன!
செல்வந்தர்கள் வாழ்ந்த பெரிய வீடுகள்,
உல்லாச விடுதிகளாய் உரு மாறியிருந்தன!
நல்லூர்க் கந்தனின் கோவில் பெரிதாக,
ஒல்லாந்தர் கோட்டையும் உயிர் பெறுகின்றது!

பெரிய கடையின், மீன் சந்தைகளில்,
'சூரை' மீன்கள் நிறையக் கிடைத்தன!
பாகிஸ்தான் நாட்டின் பெயரிட்ட பெட்டிகளில்,
பாரைக் கருவாடும் நிறையக் கிடைத்த்தது!
'வின்சர்' தியேட்டர் வெளியாகக் கிடக்க,
வண்ணான் குளத்தின் மேல் வாகனங்கள் நின்றன!
தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவுச் சின்னம்.
தலை நிமிர்ந்து நிற்கின்றது, மீண்டுமொரு முறை!
வீரசிங்கம் கட்டிடத்தின் வெடித்த சுவர்கள்,
வெள்ளையடித்துப் புதிதாய் இருந்தன!

புங்கையூரின் புகழ்மிகு நுழைவாசலில்,
புத்தனின் சிலையொன்று, நல்வரவு கூறுகின்றது!
பொலித்தீன் பைகளில், புதுமை குறையாத,
பூவரசம்  பூக்கள் விற்பனையாகின்றன!
ஊர் கூடித் தேரோட்டிய கோவில்கள்,
அர்ச்சகரின் வரவுக்காய்க் காவலிருக்கின்றன!
புத்தபிரானின்  கால் பதித்த, புனித விகாரை,
புதிய  பாலத்துடன் பொலிந்து நின்றது!
தவழ்ந்து, தவழ்ந்து நடந்த வரிசையில்,
தத்தித் தத்தி, முன்னேறிச் செல்கையில்,
தெமிளுக் கட்டியக் எனவா, நேத?
தெளிவோடு கூறியது, புதியதொரு குரல்!

Saturday, 18 June 2011

முள்ளி வாய்க்கால் விட்டுச் சென்ற தடங்கள்

















வெள்ளி முளைக்கும் ஒரு மாலை நேரத்தில்
முள்ளிவாய்க்காலின் பரந்த மணல் வெளிகளில்
புதிதாகத் தோன்றியிருந்த குழிகளைக் கண்டு
பூமித் தாயின் முகம் கூடத் தனது முகம் போலப்
பார்க்குமிடமெல்லாம் எரி வெள்ளி விழுந்து வெடித்த
எரிமலைகளின் வாய்களைப் போல, வட்டமாகத்
தனது முகத்தைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல,
எண்ணிய படியே தன் பாதையில் நகர்ந்தது நிலவு!

ஈராண்டு காலமாய், இந்தப் புதை குழிகளுக்குள்
மறைந்து கிடக்கும் கதைகளும், மனிதக் கூடுகளும்
துரத்தித் துரத்தி வேட்டையாடப் பட்ட அவர்களின்
சரித்திரமும், செத்துப் போன நினைவுகளும்
புதையுண்டு கிடக்கும் புனிதக் கனவுகளும், ஒரு நாள்
விதையில் இருந்து துளிர் விடும் மரங்களாய்,
வளரும் என்ற கனவில், மனதில் விளக்கேற்றி
விழி கனக்க நினைத்திருக்கும் ஊரே முள்ளிவாய்க்கால்!

பிறக்கும் முன்னே எழுதப் பட்ட விதியாகக்
கருவிலேயே எங்கள் தலைவிதி எழுதப் பட்டு விட
தமிழ்த் தாயின் வயிற்றில் வளர்ந்த சாபத்திற்காகத்
தனது காலில் தலை நிமிர்த்து வாழ நினைத்த பாவத்திற்காக,
உலகின் விடுதலை கேட்கும் உன்னத இனங்களின்
உயிர் மூச்சை அடக்கி வைக்க, ஒரு உதாரணத்திற்காகப்
பாரில் பலம் மிக்க நாடுகள், படைப்பலம் அளிக்கச்
சீராக நடத்தப் பட்ட நாடகமே முள்ளி வாய்க்கால்!

நீதியின் காவலர்களே, நடுவு நிலை தவறவும்,
போதி மரத்துப் புத்தன் பூவேந்தி ஆசீர்வதிக்கவும்,
மருத்துவ மனைகளும் மறை முக இலக்குகளாக.
பணி செய்த மருத்துவரும் பயங்கர வாதிகளாக,
மணிக்கு மணி மாறிய மக்களின் எண்ணிக்கையும்,
பிணிக்கு மருந்தின்றியும், பசிக்கு உணவின்றியும்
தனித்துப் போன உறவுகளுக்கு அனுப்பி வைத்த
'வணங்கா மண்' கப்பலையும், வெட்கமின்றி
நடுக் கடலில் திருப்பி விட்ட நய வஞ்சகமும்
நடத்தப் பட்ட இடமே இந்த முள்ளிவாய்க்கால்!

போராளிகளின் சரணடைவும்,அவர்களது மரணங்களும்
தீராத வடுக்களாக, மனதில் கீறி விட்ட கல் வரிகளாய்,
நீர் நிறைந்த சகதிகளின் ஓரங்களில், மண்ணில் புதைந்து
சீருடை களைந்த நிலையில், இரத்தம் கண்டிய முகங்களின்
வெறுமையும், வெற்று வாக்குறுதிகளின் சாட்சியத்தில்
அறுந்து போன சொந்தங்களின் சாட்சி சொல்லும்
கோரக் காட்சிகளும், கொடுமையின் உச்சத்தில்
வேரறுந்து போன போராட்டத்தின் களமே முள்ளிவாய்க்கால்!

திரும்பத் திரும்பப் உயிர் துளிர்க்கும் ':பீனிக்ஸ்' பறவையாய்
அரும்பில் இருந்து வளர்ந்து வரும் ஆலமர விழுதுகளாய்,
தாங்கிப் பிடித்திருப்போம், இந்தக் கொடிய நினைவுகளை!
தூங்கட்டும் அமைதியாக ,எங்கள் அணைந்து போன தீபங்கள்!
என்றோ ஒரு நாள் எங்கள் பொழுதும் விடியட்டும்
அன்றேல் விடியாது பேரிருட்டாய், காரிருளாய் மாறட்டும்!
ஆனாலும் எங்கள் நினைவுகளில்,ஏதோ ஒரு விதத்தில்
இணைந்திருக்கப் போகும் இடமே முள்ளி வாய்க்கால்!!!

பண்ணைப் பாலம்















பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள்
தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க,
கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை
கடற்காற்றில் கலந்து,
பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப
பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில்
கடற்காற்று மீட்டிய சங்கீதம்
அந்த மாலை நேரத்துப்,
பறவைகளின் ஒலியோடு கலந்தது!

மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில்,
களங்கண்டித் தடிகளின் உச்சிகளில்
கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை
அகல விரித்துத் தவம் செய்ய,
மேல் வானத்துச் சூரியன்
தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில்
சங்கமிக்கத் தயாராகினான்!

பாலத்தின் அடித்தளத்து மதகுகளின்
மேலே குந்தியிருந்த மீனவர்களின்
மூங்கில் தடித் தூண்டில்களில்
தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன்
அலைகள் மேல் தவழ்ந்த முரல் மீன்கள்,
ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி
விளையாடிக்கொண்டிருந்தன!

உன் கரையோரக் கண்ணா மரங்களின்
ஆகாயம் பார்த்த வேர்களின் மீது
ஓடி விளையாடிய சிறு நண்டுகள்
பாடசாலை முடிந்து
வீடு நோக்கி ஓடும் சிறுவர்களைப் போல
நீலப் பாவாடையின் குறுக்கே ஓடும்
கோலக் கரை போன்ற உந்தன் கற்களில்
ஒளிந்து கொள்ள இடம் தேடின!

பேட்டுக் கோழியைச் சுற்றித் திரிந்த
கோழிக் குஞ்சுகளாகக் கிடந்த
தீவுக் கூட்டங்களைத் தாயோடு இணைக்கும்
மூல வேராகி, இதயத்தின் மூல நாடியாகி
கல்லில் நாருரித்த எங்களுக்கு
நெல்லில் இருந்து நெருப்புக் குச்சி வரை,
பொருளே இல்லாதவர்களுக்குப்
பொருளாதாரம் காட்டிய பாதை நீ!

நிரை நிரையாகக்
கரையோரங்களின் இருந்த
வெள்ளைக் கற்கள் மட்டுமே
வழி காட்டி விளக்குகளாகப்
பேருந்தின் வாசல்களில் தொங்கியபடி
ஊர் சேரும் வரை.
உயிரைக் கையில் பிடித்த படி
உன் மடியில் ஊர்ந்த நாட்கள்
இன்றும் நினைவுகளில்!

பள்ளிப் படிப்பற்றுத்
துள்ளித் திரிந்த தலைமுறைக்குக்
கல்லூரி காட்டிய உன்னால்,
மூடிக் கிடந்த எங்கள் கதவுகள்
அகலத் திறந்து, நாங்கள்
அகிலம் எல்லாம் பரந்து விட
நீ மட்டும் எரிந்துபோன மெழுகுவர்த்தியாய்,
எல்லோரையும் கரையேற்றி விட்ட
கற்குவியல் பாதையாய் இன்னும்!!!

Saturday, 7 May 2011

தாய்மை















பிரபஞ்சத்தின் அந்தகார இருளில்
மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில்
தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று!
பிரம தேவனின் பிரதிநிதியாய்
உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது
ஓட வைக்கும் அற்புதப் படைப்பு!

கருவை வளர்த்தெடுத்து, அதன்
கண்ணையும்,மூக்கையும்
கற்பனையில் வடித்துக்
குருதியில் குளித்துச்
சிலையாய் வடித்தெடுக்கும்
ஒரு சிற்பியின் திறமை!

குழந்தையின் முகம் பார்த்துக்
காலம் காலமாய்க்
கட்டி வைத்த ஆசைகளின்
கனவுக் கோட்டையைக்
கணப்பொழுதில்
உடைத்தெறியும்
ஒரு முனிவனின் முதிர்ச்சி!

நோய் கண்ட வேளையில்,
இரவும் பகலும்,
அரைக்கண் மூடி,
நீ கொள்ளும் அனந்த சயனத்தில்
பாற்கடலில் பள்ளிகொள்ளும்
அந்தப் பரந்தாமனின் பக்குவம்!

பூவைத் துளைத்து அதன்
மகரந்தக் கூட்டுனுள்
முட்டையிடும்
பூச்சியைப் போல்
குழந்தை வளர்ப்பில்
குறுக்கு வழி தேடாத
உன் நேர்மை!

உறங்கும் வேளையில்
நீ பாடும் தாலாட்டின்,
ஏற்ற இறக்கத்தில்
ஒலிக்கும் உன் குரல்
நான் இது வரை
கேட்காத சங்கீதம்!

வளர்ந்த குழந்தைகள்
வேறு வேறு திசைகளில்
விதம் விதமாய்
வாழ்கையில்.
உன் மனம் மட்டும்
வறுமையில் வாடும்
குழந்தையின் பின்னால்!
எனக்குப் புரியாத
சோசலிசம்!

குழந்தையின் வாழ்வே
உன் வாழ்வின்
வரைவிலக்கணமாய்,
பிரதிபலன் பாராது
நீ செய்யும்
சேவைகள் தான்
பகவத் கீதையின்
சாராம்சம்!!!

Sunday, 24 April 2011

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!
















விந்திய மலைத்தொடரில்
அந்த அகத்தியமுனிவன்                   
அடிபதித்த நாள் முதலாய்,
இந்திய தேசம்
எங்கள் தேசத்தைத்
தங்கள் தேசத்துடன்இணைத்துக் கொண்டது!

சோழ வள நாட்டின்
சோறுடைத்த வயல்களும்
சேரநாட்டு யானைகளின்
செழிப்பான தந்தங்களும்,
பாண்டிய நாட்டின்
பசுமை மிக்க இலக்கியமும்,
இந்திய தேசத்தின்
சொத்துக்களாகின.

அரை குறையாய் வளர்ந்த
ஆரியமொழி,
எங்கள் தமிழிடம்
கடன் வாங்கித் தன்னை
வளர்த்துக் கொள்ள,
விலை போகாத வேதங்களும்
வேள்விகளும்,சாதிகளும்
எங்கள் சொந்தங்களாகின.

புறமுதுகு காட்டாத
புறநானுற்றுத் தமிழன்
இராமாயணத்தின்
குரங்காக மாற,
கடாரம் வரை
கப்பலோட்டியவன்
பிடாரிக்குக் கோவில் கட்டிக்
கும்பிடுகிறான்.

இந்தியாவின் கரங்கள்
இலங்கை வரை நீண்டு .
நந்திக் கடல் வரைக்கும்
எங்களைத் துரத்தின.
எங்கள் இரத்தத்தின் ரத்தங்களே
இரத்த வெறி கொண்டு
இராமாயணத்தின்
சுக்கிரீவன்களாகின.

இந்திய தேசமே!
இறுதிச் சந்தர்ப்பம்.
துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தொண்டைக் குழியில் நீ!.
ஆணையிட எங்களிடம்
ஆயுதங்கள் இல்லை.

எங்கள் தலை விதியை
எங்களிடம் விட்டு விடு!.
உதவி வேண்டாம்
ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.
உனது மௌனமே
எங்கள் தேசத்தின்
விடி விளக்காய் இருக்கட்டும்!